கே.கமலாகர்


ஜனநாயக காவலர்


கே.கமலாகர் (வரதயபாளையம்)
மாவட்ட விவசாய சங்க செயலாளர் (சி.பி.ஐ), சித்தூர் மாவட்டம். ஆந்திர மாநிலம்.


உலகின் மிகச்சிறந்த ஜனநாயகவாதிகளுள் ஓர் உன்னதமான இடத்தை வகித்து நம் நெஞ்சில் நிறைந்தவர் தோழர் பத்மநாபா.

மொழியால், இனத்தால் கலாச்சாரத்தால் மாறுபட்ட என் போன்ற பலரும் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களையும் சிங்கள இனவெறி சிறிலங்கா அரசின் கொடுமைகளையும், சுயநிர்ணய உரிமைக்கான தமிழ் மக்களின் போராட்டத்தின் தன்மையையும் சரியான முறையில் உணர்ந்துகொள்ள தோழர் பத்மநாபாவும் அவரது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இயக்கத் தோழர்களுமே உதவினர்.

தோழர் பத்மநாபா எழுதி வெளிவந்த சில பிரசுரங்களும், அவரது வழிகாட்டுதலின் கீழ் ஈ.பி.ஆர்.எல்.எப். செயல்பட்ட விதமும், இவர்களை எங்களின் சரியான நட்பு சக்தியாக நாங்கள் உணர உதவின.

மக்களை நேசித்த அந்த மகத்தான் தலைவன் மிகச் சிறந்த மார்க்சியவாதியாக திகழ்ந்தவனை நாங்கள் பல அனுபவங்களினூடே அறிந்தோம். உலகின் பல பாகங்களில் நிகழ்ந்து வந்த, நிகழ்ந்து வருகின்ற சமூக மாற்றங்கள் குறித்து சரியான மார்க்சியப் பார்வைகொண்டு ஆராய்ந்து, முடிவுகள் எடுத்து, அதற்கு இசைந்த வழியில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை தோழர் நடத்திய பாங்கு எங்களைக் கவர்ந்தது.

ஈழத் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமானது, உலகின் ஏனைய பகுதிகளில் நடந்துவரும் விடுதலைப் போராட்டங்களினின்றும் அந்நியப்படுத்தப்படாமல் இருந்திட தோழர் பத்மநாபா செயல்பட்ட விதம் குறித்து நிச்சயம் ஈழத் தமிழ் மக்கள் நன்றி உணர்வுடன் என்றும் நினைவு கூருவர் என நம்புகிறேன்.

துரதிஷ்டவசமாக ஆயுதமேந்திய சில ஈழத் தமிழர் விடுதலை இயக்கங்கள் - குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் - செயல்பட்ட விதமும், தவறான போக்குகளும், பிற இயக்கத்தவரைத் தாக்கி படுகொலை செய்யும் விதமும், இந்தியாவிற்கு எதிரான செயல் பாடுகளும் எங்களைப் பெரிதும் வேதனையுறச் செய்தன.

தமிழ்நாடு தவிர உள்ள பிற இந்திய மாநிலங்களில் ஈழத் தமிழர்கள் அனைவரின் மீதுமே மொத்தமாக வெறுப்பும், நம்பிக்கைத் துரோகிகள் என்ற எண்ணமும் ஏற்பட்டபோது அதனை மாற்றி இந்திய மக்கள் அனைவரின் அனுதாபத்தையும் பெறுவதில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் மட்டுமே சரியான திசை வழியில் சென்றது என்பதில் சந்தேகமேயில்லை.

இதற்கு தோழர் பத்மநாபாவின் சர்வதேசப் பார்வையும், மார்க்சிய, லெனினியத்தில் அவர் கொண்டிருந்த உண்மையான நம்பிக்கையுமே காரணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சீறிலங்கா இராணுவத்தின் மிருகத்தனமான ஆயுத நடவடிக்கைகளினின்று, ஈழத் தமிழ் மக்களை காப்பாற்ற பிற ஈழ விடுதலை இயக்கங்களைப் போல ஈ.பி.ஆர்.எல்.எப்.பும் ஆயுதம் ஏந்த வேண்டி வந்தது. இருப்பினும் தோழர் பத்மநாபாவும் ஆயுதபலம் மீது மட்டும் நம்பிக்கை கொண்டவராக என்றும் இருந்ததில்லை.

மக்களை நேசித்த அந்த தலைவன் ஒடுக்கப்ட்ட மக்களின் ஒன்று திரண்ட சக்தியின் மீதே நம்பிக்கை கொண்டு, அதை நோக்கி செயல்பட்டார். இனவெறி சிறிலங்கா அரசுக்கெதிரான போரில் தமிழ் மக்களின் சக்தி சிதறுண்டு போகக்கூடாது என விரும்பினார். இதன் காரணமாகவே இயக்கங்களுக்கிடையேயான மோதலை தவித்து, ஒற்றுமையை வலியுறுத்தி அதற்காக பாடுபட்டார். இதில் ஓரளவு அவர் குறிப்பிடத்தக்க வெற்றியினையும் பெற்றார் என்று சொல்லலாம். ஆனால் பாசிச எல்.டி.டி.ஈ.யும் அதற்கு விலைபோன சில இயக்கங்களும் இயக்கங்களுக்கிடையே ஒற்றுமைக்கு எதிராக நின்றன. சிறிலங்கா இனவெறி அரசுக்கும், இராணுவத்திற்கும் எதிராக போராடுவதைவிட, தங்கள் சுயநலனிற்காக, ஆயுத வெறிகொண்டும், ஆதிக்க வெறி, பண வெறி கொண்டும் தமிழ் மக்களுக்கு எதிராகவே தங்கள் ஆயுதங்களை எல்.டி.டி.ஈ. திரும்பியதை நியாய மனம் கொண்ட எவரும் மறந்துவிட, மன்னித்து விட இயலாது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று, ஜனநாயகரீதியான தேர்தலில் பங்கு கொண்டு ஈழத் தமிழ் மக்கள் ஓராண்டு காலமாவது நிம்மதியாக வாழ வழி செய்தது தோழர் பத்மநாபாவின் சீரிய சிந்தனையும் செயல்பாடுமே ஆகும்.
தவறான பாதையில் சென்ற எல்.டி.டி.ஈ.னரின் பாலும் வெறுப்பு பாராட்டாது அவர்களையும் நல்வழிப்படுத்த முயன்ற அந்த அருமைத்தலைவன் தன் அன்புத் தோழர்கள் பன்னிருவருடன் இரத்த வெறி பிடித்த எல்.டி.டி.ஈ.னராலேயே படுகொலை செய்யப்பட்டார்.

மனித உணர்வுகள் சிறிதும் அற்ற மிருகத்தனமான எல்.டி.டி.ஈ. தலைமையையும் அதற்கு விலைபோன சில இந்திய அரசியல் கயவர்களையும் இப்படுகொலைக்காக என்றும் உலகம் மன்னிக்காது. வருங்கால சரித்திரம் மன்னிக்காது. வருங்கால சரித்திரம் அவர்களுக்கு இதற்கான தண்டனை வழங்கியே தீரும்.

மனிதனுக்கு மரணம் நிச்சயமே. ஆனால் தோழரின் படுகொலை மன்னிக்கப்படத்தக்கது அல்ல. தோழர் பத்மநாபா ஈழ மக்களை மட்டுமல்லாது மனித குலம் முழுவதையும் நேசித்தவர். தோழர் பத்மநாபாவின் இறுதி ஊர்வலத்திலும், அஞ்சலியிலும் பங்கு கொண்ட எண்ணற்ற இந்திய மக்களும், இந்தியா முழுமையும் மக்கள் வடித்த கண்ணீரும் தங்கள் உண்மை நண்பனின் பால் இந்திய மக்கள் கொண்டிருந்த அன்பிற்கும், காட்டிய நன்றிக்கும் எடுத்துக் காட்டாகும்.

தோழர் பத்மநாபாவுடனே இருந்து, நெருங்கிப் பழகும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. அந்த தினங்கள் என்றும் என் நினைவில் பதிந்திருக்கும்.

நாம் மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை, மக்களுக்காகவே மண்ணை நேசிக்கிறோம் என்ற அந்த தலைவனின் உன்னத வார்த்தைகள் ஈழ மண்ணில் மட்டுமல்ல உலகம் முழுவதும் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும். தோழர் பத்மநாபா இலங்கை மக்களுக்கு மட்டுமோ இந்திய மக்களுக்கு அல்லது ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திற்கு மட்டுமோ சொந்தமானவரல்ல. அவர் மனித குலம் முழுமைக்கும் உரித்தான் தலைவர்.

அவன் இன்று உடல் ரீதியாக நம்மிடையேயிருந்து பிரிக்கப்பட்டுவிட்டாலும், சித்தாந்த ரீதியாக என்றும் நம்மிடையே வாழ்கிறார்.

அவரது வழி காட்டுதலில், அவரது இலட்சியத்தின் வழியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்ந்து செயல்படும் என்று நம்புகிறேன். இலங்கையிலும், இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மனித குலத்தை நேசிப்பவர்கள் மத்தியில் சமாதான விரும்பிகளின் இதயத்தில், விடுதலைப் போராளிகளின் சிந்தனையில், கம்யூனிஸ்டுகளின் உணர்வில் என்றும் வாழ்கிறார் தோழர் பத்மநாபா. ஜனநாயகத்தின் ஒளி விளக்காய் அவர் என்றும் திகழ்வார். மகாத்மாக காந்தியாக, ஹோசிமின்னாக, லூமும்பாவாக என்றும் வாழ்கிறார் தோழர் பத்மநாபா!