டாக்டர் குழைக்காதன்


மக்களை நேசித்த மனிதன்


டாக்டர் குழைக்காதன், தமிழின பாதுகாப்பு மையம்

அன்றொரு நாள் என்னுடைய பல வருடகால வக்கீல் நண்பரை சந்திக்க அவருடைய இடத்திற்குச் சென்றேன். ஜன்னலைக் கடந்து செல்லும்போது நண்பர் இருக்கிறாரா என்று எட்டிப் பார்த்துக் கொண்டே நடந்தேன். ஜன்னலின் ஊடாக என்னைப் பார்த்து குட்டார்னிங் என்று ஒரு குரல் ஒலித்தது. நான் படிகளைக் கடந்து உள்ளே சென்றபோது அங்கு நண்பர் இல்லை. ஆனால் நான் சிறிதும் எதிர்பாராத வகையில் அங்கு தோழர் . பத்மநாபா அமர்ந்திருந்தார்.

அந்த முதல் சந்திப்பிற்குப் பிறகு பல சந்தர்ப்பங்கள் அமைந்தன நான் தோழருடன் நெருங்கிப் பழகுவதற்கு அவர் என்னிடம் பழகிய முறை ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய அமைதியான பார்வை, என் மீது அவர் வைத்த ஆழ்ந்த நம்பிக்கை ஆகியவை அவரிடம் என்னை காந்தத்தை நோக்கி இழுக்கப்பட்ட இரும்பைப்போல ஈர்த்து விட்டன.

பின்பு .பி.ஆர்.எல்.எப். சம்பந்தமாக சில முக்கிய விஷயங்களில் கலந்தாலோசித்தபோது, அவர் என் மீது கொண்டிருந்த நம்பிக்கை அவர்மீது எனக்கு மேலும் உயர்வான மதிப்பை ஏற்படுதிதிக் கொடுத்தது.

பின்பு நான் ஈழமக்கள் செய்தித் தொடர்பு நிலையத்தில் (எபிக்கில்) பணியமர்த்தப்பட்டேன். இது நான் மேலும் நெருக்கமாக அடிக்கடி அவரிடம் பழகும் வாய்ப்புக்களை உருவாக்கித் தந்தது. பலமுறை அவரிடம் நான் பேசிய பொழுதெல்லாம் அவரிடம் காணப்பட்ட, ஆழமான, நீண்ட காலத் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நிதானித்த, பண்பாட்டை, சிந்தனை நீரோட்டத்தைக் கண்டு அதிசயித்துள்ளேன்.

மார்க்சிய - லெனினிய கொள்கையில் உறுதியான பிடிப்புக் கொண்டிருந்தாலும் தேசிய இனப்பிரச்சினையான ஈழப் பிரச்சினையை அவர் கையில் எடுத்துக் கொண்டதற்கான காரணம், இன்றைய பிரதான முரண்பாடு, சிங்களப் பேரினவாதத்திற்கும், அதனால் ஒடுக்கப்பட்டு பலியாகிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் இனத்திற்கும் இடையிலான முரண்பாடுதான் என்பதைச் சரியாப் புரிந்து கொண்டிருந்தால்தான்.

முன்பு இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்த இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின்போது, இந்தியாவில் இருந்த அன்றைய கம்யூனிஸ்டுகள், இந்திய விடுதலைப் போராட்டத்தை பிரதானப்படுத்தாமல், வர்க்கப் போராட்டத்தைத்தான் பிரதானப்படுத்திப்பேசி செயல்பட்டார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியாவை விடுவிக்கும் தேசிய விடுதலைப் போராட்டத்தை பிரதான போராட்டமாக அறிவித்து, அதற்குத் தலைமை கொடுத்துப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று, பிரிட்டிஷாரை வெளியேற்றிவிட்டு, ஆட்சியில் இருந்துகொண்டு சோஷலிசத்தை கட்டமைக்கும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விட்ட தவறை செய்தவர்கள் இந்தியாவில் இருந்த அன்றைய கம்யூனிஸ்டுகள்.
தோழர் நாபா அவரகள் பிரதான முரண்பாட்டை முதலில் கையிலெடுத்ததின் மூலம் தவறு செய்யாமல் சரியான பாதையில் சென்றுள்ளார்.

சிங்களப் பேரினவாத அரசைத்தான் அவர் எதிர்த்தாரே தவிர, சிங்கள மக்களை அவர் வெறுக்கவில்லை. சிங்கள மக்களையும், முஸ்லீம் மக்களையும், ஈழத் தமிழ் மக்களையும் அதற்கும் அப்பால் இந்திய மக்களையும் உலகின் அனைத்து மக்களையும் அவர் மிகவும் நேசித்தார். சிங்களப் பேரினவாதத்திள் ஒடுக்குமுறைகளுக்குப் பலியாகி துன்புற்றுக் கொண்டிருந்த ஈழ மக்களுக்காகத்தான் ஈழம் வேண்டும் என்று குரல் கொடுத்தாரே தவிர, ஈழம் என்ற மண்ணுக்காக அல்ல. எனவேதான் தோழர் நாபா அவர்கள் மக்கள் நேசித்த மாமனிதராய் உயர்ந்து நின்றார்.

சிங்களப் பேரினவாதத்திற்கெதிராக போராடி வந்த அனைத்துப் போராளி இயக்கங்களையும் ஒன்றுபடுத்துவதில் தோழர் நாபா மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அதன் விளைவாக உருவாகிய .என்.எல்.எப்.பில் புலிகளும் சேர்ந்திருந்தனர். இருந்தும், அனைவரும் ஒருமித்து சிங்களப் பேரினவாத அரசுக்கெதிராகப் போராட முனைந்திட்ட வேளையில், தன்னுடைய சகோதர போராளி இயக்கமான டெலோ போராளிக் குழுத் தலைவர் ஸ்ரீசபாரத்தினத்தையும் அவருடன் சேர்த்து 200க்கும் மேற்பட்ட டெலோ போராளிகளையும் கொன்றதின் மூலம் தமிழ் இயக்கங்களின் ஒற்றுமையை, ஒன்றபட்ட போராட்டத்தை கொலை வெறிபிடித்த அராஜகக் கும்பலான பிரபாகரனின் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகள் குலைத்தெறிந்நதனர்.

அதன்பிறகு, அடுத்தடுத்து மற்ற சகோதரப் போராளிக் குழுக்களின் பல முக்கிய போராளிகளையும், போராளிக் குழுக்களின் பல முக்கிய போராளிகளையும், ஏராளமான தமிழ் மக்களையும் புலிகள் கொன்று குவித்தனர். இந்த ரீதியில் பெரும் பாசிச சக்தியாக உருவெடுக்க ஆரம்பித்தனர்.

உலக மகா யுத்தங்களின்போது மாபெரும் பாசிச சக்தியாகமாறி, உலகத்தின் அனைத்து மக்களுக்கும் பெரும் அபாயமாக காட்சியளித்த ஹிட்லரின் பாசிச சக்தியை முறியடிக்க, சோவியத்நாடு, தன்னுடன் மாறுபட்ட கருத்துக்கொண்ட ஏகாதிபத்திய சக்திகளான பிரிட்டனுடனும், அமெரிக்காவுடனும் கூட்டு சேர்ந்தது. அப்போது ரஷ்யா எப்படி ஏகாதிபத்திய சக்திகளுடன் கூட்டுச் சேரலாம் என்று எந்தவொரு இந்திய இடதுசாரி பற்றுள்ளவர்களும் கேட்கவில்லை. ஏனெனில் பாசிச சக்தியை முறியடிப்பதற்காகத்தான் ரஷ்யா மாறுபட்ட கருத்துள்ள நாடுகளுடன் கை கோர்த்தது என்ற அதிலுள்ள நியாயத்தை அவர்கள் புரிந்து கொண்டிருந்தனர்.

ஆனால், இன்று இலங்கையில் பாசிசத் தன்மைகளைக் கொண்டிருக்கும் இருவேறு சக்திகளின் அராஜக பலத்தை முறியடிக்க, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று இந்தியாவை நட்பு சக்தியாகக் கருதி .பி.ஆர்.எல்.எப். செயற்பட்டதை மட்டும் இங்குள்ள இடதுசாரி தீவிர கட்சிகள் ஏன் புரிந்துகொள்ள மறுத்தார்கள் என்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நம்முடைய பிரதான எதிரி சிங்களப் பேரினவாத அரசதானே தவிர புலிகள் அல்ல என்று தன்னுடைய இயக்கத் தோழர்களிடையே அடிக்கடி வலியுறுத்திக் கூறிவந்த தோழர் பத்பநாபா அவர்களையே நிராயுதபாணியாக இருந்தபோது கோழைத்தனமான முறையில் கொலை செய்துவிட்ட புலிகளை இங்குள்ள இடதுசாரி இயக்கங்கள் எந்த வகையில் நியாயப்படுத்தப் போகின்றன.

பிரபாகரனின் தலைமையில் இயங்கும் விடுதலைப் புலிகள் இயக்கம் வெறும் அராஜகப் போக்கு கொண்ட, எவ்விதக் கொள்கையுமற்ற தனிநபர் பயங்கரவாதக் கூட்டம்தானே தவிர, அதற்கு எந்தவித இடதுசாரி சிந்தனையும் கிடையாதுளூ அல்லது பூர்ஷ்வா ஜனநாயக பூர்வமான, மக்களைப் பற்றிய எண்ணமும்கூடக் கிடையாது.

எஸ்.ஜி. தோழர் அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு, என்னிடம் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டி பழகி வந்தார். கடுமையான சிக்கலான அரசியல் போராட்டங்களிடையே மக்களுக்காக தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டிருந்த அதேவேளையில் குழந்தைகளிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் மிகுந்த பிரியமுடன் அந்தக் குழந்தைகளோடு தானும் குழந்தையாகி மனம் மகிழ விளையாடுவார். அப்பொழுதெல்லாம் அவரின் குழந்தை மனம் கண்டு நான் ஆச்சரியப்படுவேன்.

ஆழ்ந்த ஞானமும் உயர்வான தத்துவ விஷயங்களும் பேசி உலகையே அதிசயிக்க வைத்த ராமகிருஷ்ண பரமஹம்சர் மிகுந்த குழந்தை மனம் கொண்டபர். இவரால் எப்படி கடினமான தத்துவ ஞானங்களை விளக்க முடிந்த அதே சமயத்தில் ஒரு குழந்தையைப் போல முழுமையாக மனம் குதூகலித்தும் கொண்டாட முடிகிறது! என்று விவேகானந்தர் ஆச்சரியப்படுவாராம்.

அதைத்தான் தோழர் நாபாவை நான் அரசியலுக்கு அப்பாற்பட்டு தனித்த நிலையில் குழந்தையாகக் கண்டபோதெல்லாம் ஆச்சரியப்பட்டு நின்றேன். மார்க்சிய லெனினியக் கொள்கையில் ஆழ்ந்த ஞானமும் பிடிப்பும் உறுதியான பற்றும் கொண்டு மிகச்சிக்கலான அரசியல் போராட்டத்தினூடே எதிர்நீச்சல் அடித்துக் கொண்டும், அதே நேரத்தில் ஒரு குழந்தையுடன் பழகும்பொழுது அந்தக் குழந்தை மனதின் குதூகலத்துடன் எப்படி மனம் ஒன்றிவிட முடிகிறது. இவரால்! என்று மிகவும் அண்மித்து அவரிடம் நெருங்கி பழகியவர்கள் உணர்ந்திருக்க முடியும.

ஒரு புதிய மனிதனாக, மனித நேயத்திற்கு அதன் அர்த்தத்தைக் கொடுத்து, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும், யதார்த்தத்தின் கூர்மையை வெளிப்படுத்தி வாழ்ந்த தோழர். நாபாவின் நினைவு என்றும் என் மனதை விட்டு அகலாதிருக்கும்.
சர்வதேசிய அளவில் மக்களின் முரண்பாடுகள் அனைத்தும் சீராக்கப்பட்டு, மனித நேயத்தின் உயர்நிலையை ஸ்தாபிக்க வேண்டும் என்பதுதான் அவரின் நீண்ட காலக் கண்ணோட்டமாக இருந்தது.

வாழ்க அவர்தம் நாமம்.
உயிர் பெறுக அவர்தம் சீரிய நோக்கம்.
வெல்க மனித நேயம்!