த. சித்தார்த்தன்


கொள்கைவழி நின்ற வரலாற்று நாயகன்.


த. சித்தார்த்தன்,
தலைவர், அரசியல் பிரிவு, தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்)

பள்ளிப்பருவத்திலேயே தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை பற்றி உணர்ந்துகொண்ட தோழர் பத்மநாபா அவ்வித அநீதிகளை களைந்தெறியும் நோக்குடன் 1970ல் மாணவர் பேரவை, இளைஞர் பேரவை போன்றவற்றில் இணைந்து செயல்படுவதன் மூலம் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.

இங்கிலாந்தில் உயர் கல்வி கற்கச் சென்ற தோழர் பத்மநாபா 1978ல் தனது உயர்கல்வியை இடைநிறுத்தி ஆயுதப்போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தும் நோக்குடன் லெபனான் சென்று அங்கு ஆயுதப் பயிற்சி பெற்றார்.

20 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் தேசிய இனப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டு செயற்பட்ட தோழர் பத்மநாபா இளமைப் பருவத்திலேயே எம்மைவிட்டு கொடூரமான முறையில் பிரிக்கப்பட்டார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் தோழர் பத்மநாபா முற்றுமுழுதாக கவனம் செலுத்தினார். அவ்வாறான ஒருவரை இந்தியாவில் வைத்தே கொடியவர்கள் கொலைசெய்த போது 6 கோடி தமிழ்நாட்டு மக்களாலோ, இந்திய அரசினாலோ காப்பாற்ற முடியாமல் போனமை வேதனைக்குரியதாகும்.

மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி, இக்கொலைக்கு காரணமான புலிகளே தாம் இதை செய்யவில்லை என மறுத்தமை மறைந்த தோழர் பத்மநாபாவுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை உணர்த்தியுள்ளன.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட மன்னிப்பை இலங்கை அரசிடமிருந்து பெறாது இறுதிவரை இலங்கை உயர்நீதிமன்றத்தின் பிடியாணை காரணமாக இலங்கையில் சுதந்திரமாக வாழமுடியாத நிலையிலும் தமது கொள்கையில் உறுதியாக நின்று செயல்பட்டார்.

தனிநபர்களுடனும், இயக்கங்களுடனும் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் தோழர் பத்மநாபா சகலருடனும் நட்புறவுடன் பழகியவர்.

தமிழ் தேசிய இனப் போராட்ட வரலாற்றில் மறைந்த தோழர் பத்மநாபாவின் பெயர் என்றும் என்றும் நிலைத்திருக்கும் என்பது நிச்சயம்.