நெல்லை ஜெபமணி


சமருக்குச் சிங்கம் சமாதானத்திற்கு புறா


நெல்லை ஜெபமணி, தலைவர், தமிழ்நாடு ஜனதா கட்சி

ஒரு நாள் எனக்குப் போன் வந்தது. பத்மநாபா அவர்கள் உங்களைச் சந்திக்க விரும்புகிறார், உங்களுக்கு எப்படி வசதி? எனக் கேட்டார்கள். அதற்கு நான், எந்த நேரத்திலும், எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று கூறினேன்.

அதன் பிறகு நண்பர் டாக்டர் மகரநெடுங்குழைக்காதன் அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். சந்திப்பிற்கான நேரத்தைப் பற்றிப் பேசினோம். என் வீட்டிலேயே சந்திக்கலாம், அல்லது அவர்கள் சொல்லுகின்ற இடத்திற்கு வேண்டுமானாலும் வருகிறேன் அங்கேயே சந்திக்கலாம் என்று சொன்னேன். நான் உங்களுக்கு முன்கூட்டியே தகவல் சொல்கிறேன் என்று சொல்லிச் சென்றார். அங்கிருந்து டெலிபோன் மூலம் தகவல் வந்தது. வயதான உங்களுக்குச் சிரமம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை, உங்கள் வீட்டிற்கே நாங்கள் வந்துவிடுகிறோம் என்று கூறி. அதன்படியே இரவு ஏழு மணியளவில் டாக்டரோடு, பத்மநாபா அவர்களும் மற்றும் மூன்று நண்பர்களும் வந்தார்கள்.

அவரைப் பார்த்ததும், ஒரு அப்பழுக்கற்ற சுதந்திரப் போராட்ட வீரனைப் பார்த்த மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. அவர் சுருக்கமாகத்தான் பேசினார். அடக்கமாகவும் பவ்யமாகவும் நடந்து கொண்டார். இதுவரையில் எனக்கு அவரைப் பற்றிப் பத்திரிகைகளில் படித்துதான் தெரியும் நேரில் பார்த்ததில்லை. எந்த இலங்கைத் தமிழ் மக்களுக்காக அவர் போராடினாரோ, அவர்களைத் தன் உயிரினும் மேலாக நேசிப்பது அவர் பேசிய பேச்சிலிருந்து தெரிந்தது.

அதன் காரணமாக அவர் இரண்டு எதிரிகளைச் சந்திக்க நேர்ந்தது. ஆட்சிப் பொறுப்பை மாற்றிக் கொடுப்பதில் தயக்கம் காட்டும் இலங்கை அரசோடும், அப்பாவி மக்கள் ஈழத்தமிழர்களை இரக்கமின்றி அரக்கத் தனமாகக் கொன்று குவிக்கும் விடுதலைப் புலிகளோடும் மோத வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. அதனால் அவர் தலைமறைவாக இருக்க வேண்டியதாயிற்று.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டப்படி கப்பலில் வந்த தமிழர்களை சென்னைத் துறைமுகத்தில் இறங்கவிடாமல் எங்கு வேண்டுமானாலும் போய்த் தொலையுங்கள்ளூ தமிழ்நாட்டில் உங்களுக்கு இடமில்லை எனச் சொல்லிவிட்டார் தமிழக முதல்வர் கருணாநிதி. தமிழே தெரியாத ஒரிசா மாநிலத்தார் அவர்களை ஏற்றுக் கொண்டார்கள்.

சட்ட விரோதமாக இலங்கையிலிருந்து தமிழகம் வரும் புலிகளை நண்பர்களாகத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அவர்களுக்குத் தங்க வசதியும் செய்து கொடுத்ததோடு, இங்கிருந்தே இயங்குவதற்குரிய காரியாலயம் அமைத்துக் கொள்வதற்கும் அனுமதித்தது.

தமிழக அரசும் விரோதமாக இருக்கிறது, விடுதலைப் புலிகளும் தங்களை வேட்டையாடத் துடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்த அவர் தலைமறைவாக இருந்தே பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார்.

கல்வி கற்கும் பொழுதே விடுதலை தாகம் கொண்ட அவர், தனது விடுதலை இயக்கப் பணிகளைச் செவ்வனே ஆற்றி வந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி நடைபெற்ற தேர்தலில் இவரது கட்சி வெற்றி பெற்றபோதும், இவரே முதல்வராக வருவதற்கு வாய்ப்புகள் நிரம்ப இருந்தும் அதனை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சமர் என்றால் சிங்கமாகவும், சமாதான மென்றால் புறாவாகவும் இருக்கின்ற ஆற்றல் அவரிடம் இருந்தது.

உதாரணமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி போர் நிறுத்தத்தை, புலிகள் உட்பட அனைத்து போராளிக் குழுக்களும் ஏற்றுக் கொண்டார்கள், சமரச உடன்பாட்டை மதித்து, ஆனால் புலிகள் மட்டும் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன் பாட்டை மீறி விட்டனர். போர் தொடுக்க ஆரம்பித்துவிட்டனர். சிங்கள அரசோடு மட்டுமின்றி, அப்பாவி மக்களையும், தமிழ் தலைவர்களையும் கொன்று குவிக்க ஆரம்பித்துவிட்டனர். அதிலேதான் பத்மநாபா அவர்களும் அவருடைய சகாக்களும் கொல்லப்பட்டார்கள். அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களும், கொல்லப்பட்டனர்.

ஸ்வாமி விவேகானந்தா அவர்களும் மகாகவி பாரதியார் அவர்களும் 39 வயதிலேயே உயிர் நீத்தார்கள். அதே மாதிரி இனிய நண்பர் பத்மநாபா அவர்களும் தன்னுடைய 39 வயதிலேயே மரணமடைந்து விட்டார். அவர் மறையலாம்ளூ ஆனால் அவருடைய எண்ணங்கள் நல்ல உள்ளங்களில் என்றும் வாழும், அவர் புகழ் எங்கும் என்றும் நிலைத்து நிற்கும்.