டாக்டர் ஏ.கே. ஜெய்னுதீன்


வெற்றி உன் கொள்கைக்கே கோழைகளின் கனவுக்கல்ல.


டாக்டர் ஏ.கே. ஜெய்னுதீன், தலைவர் காங்கிரஸ் (ஜெ)

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதில்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று - என்றார் வள்ளுவர்.

இந்தக் குறளின் கருத்தை நிரூபிப்பதைப் போல் இலங்கையில் தோன்றி, குறுகிய காலத்தில் தன் சிந்தனையாலும் செயலாலும் இலங்கை, இந்திய, உலக நாட்டு மக்களின் சிந்தனையைக் கவர்ந்து இந்திய மண்ணில் உயிர் நீத்தார் நம் அன்புச் சகோதரர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர் திரு. பத்மநாபா அவர்கள்.

உயிருக்காவும், தன்மானத்தோடு வாழ்வதற்காகவும் இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற இலங்கை அரசிற்கு எதிராகப் போராடிக்கொண்டிருப்பது நாம் அறிந்த உண்மை. ஆரம்ப காலத்தில் தங்கள் இலட்சியத்தையே ஒரே நோக்கமாக கொண்டு செயல்பட்ட சில அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற்றவுடன் தங்களுடைய சுயநலத்தை மனதில் கொண்டு செயல்பட துவங்கியதால், இலங்கை மக்களுடைய ஆதரவையும், உலகநாடுகளின் ஆதரவையும் இழக்க நேரிட்டது. இந்த சூழ்நிலையில் தான் கீழ்வானத்திலிருந்து மேல்வானம் வரும் கதிரவனைப் போல் தன் கொள்கைகளாலும், செயலாலும் உலக மக்களின் மனதில் உயர்ந்த நிலையை அடைந்து கொண்டிருந்தார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் திரு. பத்மநாபா அவர்கள்.

அவருடைய தன்னலமில்லாத உண்மையான மக்கள் பற்றும், ஈழத்தமிழ் மக்களது பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வு காண வேண்டும் என்ற ஒரே நோக்கமாக செயல் பட்ட விதமும், மக்கள் மனதில் இவர் ஒருவர்தான் இலங்கைத் தமிழ் மக்களின் இன்னலை அகற்றி, அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டின.

அந்த நேரத்தில் பத்மநாபா அவர்களின் கொள்கைகளையும், தியாக மனப்பான்மையையும் எண்ணிப்பாராமல், அவர் மக்கள் மனதில் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெறுவதைக் கண்டு தாங்க முடியாமல் பொறாமை கொண்டு அவரை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்த ஈழத்தைச்சார்ந்த ஒரு குழுவினர் அவரை இந்திய மண்ணில் கோழைத்தனமாகச் சுட்டு வீழ்த்தினர். அந்த அநீதியாளர்களால் திரு. பத்மநாபா அவர்களின் உடலைத் தான் அழிக்க முடிந்ததே தவிர, அவரது கொள்கைகளையும், அந்தக் கொள்கைகளைச் செயல்படுத்த உருவாக்கப்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுலை முன்னணி என்ற அமைப்பையும் அழிக்க முடியவில்லை, அழிக்கவும் முடியாது.

இந்த வன்முறையான கொடூரமான செயல்களுக்கு ஆதரவு அளிப்பதுபோல் தமிழக பாதுகாப்புத்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நாள்வரை பாதுகாப்புப் படையினர் கொலையாளிகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மேலும் பாதுகாப்பு படையினரின் செயல், இனியும் அவர்கள் அந்தக் கொடூரவாதிகளைக் கண்டு பிடித்து, அவர்களைத் தண்டிப்பார்கள் என்ற நம்பிக்கையை நம் மனதிலிருந்து மறையச் செய்கின்றது. திரு. பத்மநாபா அவர்களின் மறைவு அகில உலக விடுதலை இயக்கங்களுக்கு பேரிழப்பைத் தரும் என்பதை உணர்ந்த போதிலும் தமிழக காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்பற்று இருக்கிறார்களே தவிர, பொறுப்புடனும், கடமை உணர்ச்சியுடனும் நடக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. திரு. பத்மநாபா அவர்கள், அவர்நாட்டுத் தமிழ் மக்களின் விடுதலைக்காக இந்திய மண்ணில் சிந்திய ரத்தம் அழிக்க முடியாத கறையாக இந்திய வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.

அடக்கப்பட்ட, ஒடக்கப்பட்டவர்களின் பாதுகாவலனாகத் திகழ்ந்த அந்தத் தியாகியின் - முற்போக்குக் கொள்கைவாதியின் - மறைவுக்கு நம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன், அவரது ஆன்மா நிலையான அமைதியை அடைய நாம் இறைவனை வேண்டுவோம்.

இனிய நெஞ்சே, உன்போன்ற வீரத் தலைவர்களை அழிப்பதன் மூலம் கோழைகளின் கனவு கனவாகிவிடுமே தவிர வெற்றி உன் கொள்கைக்கே.