ஏ.ஆர். அருளர்


சமுதாயம் புதுநிலை புகத் தம்மை அர்ப்பணித்தவர்


ஏ.ஆர். அருளர், ஆசிரியர், லங்கா ராணி

ஒரு இலட்சிய விடிவுக்காய் களம் புகுந்த புரட்சி மனங்களில் தோழர் பத்மநாபா தன்னிகரில்லாது விளங்கினார்.

இன்னல்கள், இடர்கள், ஏளனங்கள் இவையனைத்தையும் கடந்து தனித்துவத்துடனும், தந்திரோபாயத்துடனும் நடந்துகொண்டவர் தோழர் பத்மநாபா.

ஒரு சமுதாயத்தைப் புதுநிலைபுக வைப்பதில் இன்றிருக்ககூடிய பல்வேறு எதிர்ப்புகளையும் தடங்கல்களையும் தீர்க்கமாக எதிர்கொண்டு முன்னேறியவர் பத்மநாபா.

இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலை நிறுத்திக்கொள்ள அவர் எடுத்த முடிவுகள் வரலாற்றுப் புகழ்மிக்கவை.

இலங்கைத் தோழர்களிடமும் மக்களிடமும் அவர் காட்டிய பரிவு, மாகாண அரசை நிலைநிறுத்துவதில் அவரது பரந்த நோக்குடனான அணுகுமுறை, இராணுவ அரசியல் ரீதியாகவும், ஸ்தாபன அடிப்படையிலும் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள், சர்வதேசிய அளவிலான அணுகுமுறைகள், அடிநிலை மக்கள் பற்றிய அவரது இடைவிடாத சிந்தனைகள் தமிழ்மக்கள் மத்தியில் நிலையான இடம் பெற்றுவிட்டன.

அவரது பணி முடிவுக்கு வந்தமை, சமுதாயத்தில் இன்னும் புரையோடிப் போயுள்ள நயவஞ்சகத்தனமும், பிற்போக்குச் சக்திகளின் பிடியுமே காரணமாகியது.

உண்மை நிலைக்க, எரிக்கப்படும் உடல்களிலிருந்து வரும் சாம்பல் உயிர் பெற்று ஊரூராய் உலவிவருமென்பது உலக வரலாறு.

படுகொலை, உண்மை உள்ளத்தை அழிக்காது. பத்மநாபாவின் எண்ணங்களும் அவர் விட்டுச் சென்ற சுவடுகளும் அவரது இலட்சியக் கனவை நிறைவேற்றும்.