பி.கே. இராசகோபால்


அறத்தினால் வீழ்ந்து விட்டாய்!


பி.கே. இராசகோபால், பி.ஏ.பி.எல்., தமிழ்நாடு கலை இலக்கிய மாமன்றம்.

தோழர் என்றும் எஸ்ஜி என்றும் நாபா என்றும் சக போராளிகளாலும், நண்பர்களாலும் மிகவும் அன்புடனும், மரியாதையுடனும் அழைக்கப்பட்ட அந்தக் கம்யூனிஸ்ட் - புரட்சிக்காரன் - தேச விடுதலைப் போராளி இன்று நம்மிடையே இல்லை.

அவரைப் பற்றிய நினைவுகளே மிஞ்சியிருக்கின்றன.

அவரோடு நான் பழகியது சில வருட காலமே. ஆயினும் அந்த மனிதனின் மகத்துவத்தை ஒரு தோழன் என்கிற முறையில் புரிந்து கொண்டிருக்கிறேன்.

தெற்காசிய நாடுகளில் பூத்து மலர்ந்த பொதுவுடமை இயக்கமும், ஈழவிடுதலைப் போரும், தம் வளர்ச்சியில் உருவாக்கி இனங்காட்டிய போராளிகளில் தலை சிறந்தவர் பத்மநாபா.

ஆயுதமேந்திய போராளியாக மிகக் கொடூரமான சிங்களப் பேரினவாதத்தின் வெறிப் போரை நேர்நின்று சமர்புரிந்தவர்.

ஈழ விடுதலை இயக்கங்கள் பலவாயினும் அவற்றிலேயே தலை சிறந்ததும், மார்க்சிய லெனினிய சித்தாந்த அடிப்படைகளை உறுதியாகத் தழுவி நிற்பதுமான ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் கர்த்தா.

ஆயினும் வறட்டுவாதியல்லளூ குறுகியும் இறுகியும் போன ஒரு தலைவன் அல்ல.

மனிதர்களை நேசித்தவர். மனிதர்களுக்காகவே மண்ணை நேசித்தவர்.
தலைசிறந்த பண்பாளன். எளிமையின் திருவுருவம்.

சிரித்த முகம். சிந்தனையின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் கண்கள்.

ஆர்ப்பாட்டமும், அதிரடிப் பேச்சும் அறியாத நாகரிகமிக்க மானுடன்.

தோழமையுணர்வு பொங்கும் மனம். அதுதான் பத்மநாபா.

அவரை நானறிந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் பல. அவை அவரை எனக்கு இனங்காட்டின. இயக்கம் நெருக்கடிக்கு உள்ளான ஒரு காலத்தில் ஒருநாள் அவரது அலுவலகத்தில் அவரோடு மதிய உணவு உண்டேன். அலுமினியத் தட்டுகளில் அளவு சாப்பாடு வந்தது. தோழர்கள் அனைவரும் பசியாறிவிட்டனரா என்று பார்த்தபின் தன் பங்கு ரேஷனை அவர் சாப்பிட்டுவிட்டுத் தன் சக தோழர்களைப் போலவே தனது சாப்பாட்டுத் தட்டை தானே கழுவி வைத்தார்.

இவரல்லவோ கம்யூனிஸ்ட் என்று என் மனம் வியந்தது.

எங்கள் தலைவர் தோழர். எம். கல்யாண சுந்தரம் அவர்களை அன்று மாலை வழக்கப்படி சந்தித்தேன். நான் கண்டதைச் சொன்னேன். அதற்கு அவர், இந்த இளைஞனைப் பார்த்து நம் ஊரில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று சொன்னார்.

இது போன்ற ஏராளமான சம்பவங்கள் தோழர் நாபாவை எங்கள் இதயத்தின் மிக அருகே கொண்டு வந்து நிறுத்தின.

இந்த இயக்கத்தை ஆதரித்து நிற்பதும், இவர்களோடு சர்வதேச அளவில் அணி சேருவதும் இந்தியப் புரட்சியாளர்களது கடமை என்பதை இப்படித்தான் நாங்கள் உணர்ந்தோம்.

இந்திய அமைதிப்படை இலங்கை சென்று அங்குள்ள தமிழரின் இன்னல் களையத் தலைப்பட்ட நேரத்தில், பாசிசப் பாதகப் புலிகள் அவர்களது துப்பாக்கிகளை இந்தியாவின் நெஞ்சுக்கு நேராகத் திருப்பிய காலம் வந்தது.

அப்போது இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்து நின்று, புலிகளின் சவாலை ஏற்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தேர்தலைச் சந்தித்தது.

மக்களுக்காக மண்ணை நேசித்த தோழர் நாபா உருவாக்கிய அணி வென்றது. ஈழ மண்ணில் புதிய நம்பிக்கை உதித்தது.

ஆனால் ஏகாதிபத்திய தாசர்களும், இந்திய பாசிஸ்டுகளும் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைப் பழி தூற்றினர்.

அதையும் தாங்கிக்கொண்டு தமது இயக்கத்தை பத்மநாபாவால் முன்னெடுத்துச் செல்ல முடிந்தது.

அவர் ஒரு தமிழ்ப் போராளி - ஆனால் இனவெறியர் அல்லர்.

ஏகாதிபத்திய எதிரப்;பாளர் தோழர் பத்மநாபா இந்தியாவின் அணிசேராக் கொள்கையின் தலைசிறந்த நண்பர்.

இனப்போரை வளர்த்து அதில் அரசியல் அதிகாரம், ஆதாயம் தேட அவரும் அவரது இயக்கமும் முனையவில்லை.

எனவேதான், தமது மக்களை நம்பி, தமது சித்தாந்தத்தை நம்பி, இந்தியாவின் எழுபது கோடி மக்களை நம்பி அவரால் ஆயுதங்களைக் கீழே போடமுடிந்தது. அதன் விளைவாக அவரது புகழ் உயர்ந்தது.

ஆனால் சூழ்நிலைகள் மாறியபோது, வஞ்சகப் புலிகளும், அவர்களது தமிழகக் கூட்டாளிகளும் அந்த மனிதனைத் தமிழகத்தின் தலைநகரிலேயே சகாக்களுடன் கொன்று தீர்த்தனர்.

அவரது மறைவு ஈழப் புரட்சிகர இயக்கத்தின், விடுதலைப் போரின் மீது விழுந்த பலத்த அடியாகும். அது ஒரு தனிமனிதனின் மரணமல்ல.

ஏகாதிபத்திய எதிரப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டிய எச்சரிக்கை.

பெல்ஜியம் நாட்டுக்கு வாழ்த்துச் சொல்லிப் பாரதி எழுதிய வரிகள் தோழரின் மறைவுக்கு பொருந்தி நிற்கின்றன.

அறத்தினால் வீழ்ந்து விட்டாய்...
வண்மையால் வீழ்ந்து விட்டாய்...
வீரத்தால் வீழ்ந்து விட்டாய்
துணிவினால் வீழ்ந்து விட்டாய்
தொகையிலாப் படைகளோடும்
பிணிவளர் செருக்கினோடும்
பெரும்பகை எதிர்த்தபோது
பணிவது கருத மாட்டாய்
பதுங்குதல் பயனென் றெண்ணாய்

என பாரதி கூறியதுபோல் மக்களை நம்பி, ஆயுதங்களுமின்றிச் சிங்கம் போல் உலவிய மனிதன் இன்று நம்மிடையே இல்லை.

ஆயின், தோழரின் மறைவு குறித்துப் புலம்பிக் கொண்டேயிருக்க வரலாறும் நம்மை அனுமதிக்காதுளூ தோழர் நமக்கு விட்டுச் சென்ற பணியும் அனுமதிக்காது.

அவரது பல்லாயிரக்கணக்கான வீரமும் விவேகமும் மிக்க சக தோழர்களில் அவர் வாழ்கிறார்.

எங்களைப் போன்ற இந்தியப் புரட்சிக்காரர்களின் நெஞ்சங்களில் அந்த நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது இனியும் எரியும்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு,
பாட்டாளி வர்க்க சர்வதேசியம்,
இனவெறி நிறவெறி எதிர்ப்பு,
ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலை,
மனித குல விடுதலை

இந்தக் கருத்துக்கள் வாழும்வரை, இவற்றுக்கான போராட்டம் தொடரும் வரை-
என் தோழனே, பத்மநாபாவே!

உன் நினைவுகள் வாழும்! உன் கனவுகள் வாழும்.

பயங்கரவாதமோ, பாசிசமோ கோடி முறை பிறந்து வந்து அழிக்க முயன்றாலும் உனக்கு மரணமில்லை.