வாழப்பாடி இராமமூர்த்தி, எம்.பி.,


காந்தி, லிங்கன், இந்திரா வரிசையில் தோழர் பத்மநாபா


வாழப்பாடி இராமமூர்த்தி, எம்.பி., தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

தேச விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மா காந்தி அவர்கள் கொலைகாரன் ஒருவனால் வழிபாட்டு ஸ்தலத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். சமய வேறுபாடுகள் நீங்கி சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்ற உயரிய கொள்கை அவரது உயிரை வாங்கியது.

நிறவெறி ஒழித்து அடிமை விலங்கொடித்து மனித சமுதாயத்தை உய்விக்கப் பாடுபட்ட அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் திரையரங்கு ஒன்றில் நிறவெறிக் கொடியவன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும் என்பதற்காக அறிவொளி பரப்பிய கிரேக்கத்தின் மாவீரன் சாக்ரடீஸ் சிறையில் விஷம் கொடுக்கப்பட்டு சாகடிக்கப்பட்டான்.

இந்திய ஒருமைப்பாட்டுக்கும் சமய ஒற்றுமைக்கும் மக்கள் நல்வாழ்வுக்கும் அரும்பாடுபட்ட அன்னை இந்திராகாந்தி அவர்கள் பட்டப்பகலில் பதைக்கப் பதைக்கச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தத் தலைவர்கள் இறந்தும் இறவாப் புகழ் எய்திவிட்டனர். சரித்திரத்தின் ஏடுகளில் இடம் பிடித்து விட்டனர். அவர்களுடைய பூதவுடல் மறைந்தாலும், அவர்களுடைய கொள்கைகள் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களுடைய கொள்கைகள் வெற்றிநடை போட்டு வருகின்றன.

அவர்களது வரிசையில் இடம்பெற்றுவிட்டார் அமரர் பத்மநாபா. 39 வயதே நிரம்பிய தோழர் பத்மநாபா அவரது அரசியல் எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரோடு அவரது ஏனைய தோழர்கள் 12பேர் படுகொலைக்கு ஆளானார்கள். ஈழ மண்ணில் பிறந்து வளர்ந்த அந்த இளைஞர்கள் தமிழ்நாட்டு மண்ணில் பிணமானார்கள்.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இந்தச் சோக வரலாறு அழியாத கறையை ஏற்படுத்தி விட்டதை எண்ணி எண்ணி தமிழன் தலைகுனிய வேண்டிய நிலையை ஏற்படுத்தி விட்டது.

துடைத்தெறிய முடியாத கறை தமிழ் மண்ணுக்கு ஏற்பட்டுவிட்டதை எண்ணி வேதனைப்படுகிறேன். பகைவனுக்கும் அருள் பாலிக்கும் தமிழ்ப்பண்பாடு இந்தச் சோகச் சம்பவத்தால் களங்கம் கண்டுவிட்டது.

இலங்கை அரசாங்கத்தின் இனவாதக் கொள்கை தோழர் பத்மநாபா அவர்களை புரட்சி வீரனாக மாற்றியது. மாணவப் பருவத்திலேயே இலங்கையின் இனப்படுகொலைகளைக் கண்டு மனம் கொதித்துப்போனார். மாணவர் இயக்கத்தில் இரண்டறக் கலந்து இலங்கையின் இனவெறிக் கொள்கைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார். அவரது மாணவர் இயக்கம் தமிழர் அரசியலில் பெரும்பங்கு வகித்தது.

1974ஆம் ஆண்டு யாழ்ப்பாண நகரத்தில் நடைபெற்ற முதல் உலகத் தமிழர் மாநாட்டில், மாநாட்டுப் பந்தலிலேயே 9 தமிழர்கள் இலங்கை அரசின் காவல்துறையினரால் பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தக் கோரப் படுகொலை இளைஞர் பத்மநாபா உள்ளத்தில் கனலை ஏற்படுத்தியது. இலங்கை அரசாங்கத்தின் இனவெறியை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உணர்வையும் அது ஏற்படுத்தியது.

தனது இலட்சியத்தை நிறைவேற்ற தோழர் பத்மநாபா இலங்கை மண்ணில் முதன் முதலாக ஈழ விடுதலை அமைப்பை உருவாக்கினார். இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் தமிழ் மண்ணை மீட்பது என்பது தான் அவரது திட்டம், கொள்கை.

கல்வி கற்க இலண்டன் மாநகரம் சென்ற தோழர் பத்மநாபா அங்குள்ள ஈழப் புரட்சி அமைப்புடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டார். புரட்சித் தீ அவரது உள்ளத்தில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.

களத்தில் நின்று போரிடுவதற்குப் போதுமான பயிற்சிதேவை என்று கருதிய தோழர் பத்மநாபா லெபனான் நாட்டில் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் மூலம் முறையான போர்ப் பயிற்சியும் பெற்றார்.

இலங்கை தோட்டத் தொழிலாளர்களோடும், தொழிற் சங்கத் தலைவர்களோடும் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு காரணமாக இலங்கைத்தமிழர் பிரச்சனைக்குத் தீர்வுகாண முழுப்புரட்சி ஒன்றுதான் ஒரே வழி என்ற சிந்தனை அவரிடம் மேலோங்கி வளர்ந்தது.

இலண்டன் நகரத்தைத் தலைமைப் பீடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த ஈழப் புரட்சி அமைப்பு தனது இலட்சியத்தை அடைய முடியாது என்று உணர்ந்தவர்கள் 1981 ஆம் ஆண்டு மாநாடு நடத்தி புதிய கட்சி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பினை உருவாக்கினார்கள். பின்னர் தோழர் பத்மநாபா அவர்கள் அதன் செயலாளர் நாயகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 1984 ஆம் ஆண்டு அவரே அந்த அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இராணுவ ரீதியான ஓர் அமைப்பையும் உருவாக்கி களத்தில் நின்று போராடினார்.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அவரது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருவது குறித்து அவர் மகிழ்ச்சி அடைந்தாலும் தமிழ்நாட்டில் பிரிவினை சக்திகள் வளர்வதையும், அதற்குத் தீனி போட்டு வளர்க்கும் தலைவர்களையும் அவர் ஒருபோதும் ஆதரித்ததில்லை.

இந்தியாவின் ஒத்துழைப்போடுதான் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார்.

அவரது மரணம் விடுதலை இயக்கத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். மறைந்த தோழர் பத்மநாபா தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் நீங்காத இடம் பெற்று என்றென்றைக்கும் நிலைத்து நிற்பார் என்பதில் ஐயமில்லை.

வாழ்க அமரர் பத்மநாபா புகழ்.