மா. இராமசாமி


மலையக மக்களுக்காகவும் உழைத்தவர - நல்ல நண்பர்


மா. இராமசாமி - சென்னை -39.

தோழர் பத்மநாபா அவர்களின் மறைவு இலங்கை வாழ் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். தோழரோடு கடந்த பத்து வருடங்களாக எனக்குள்ள நட்பு சம்பந்தமாக சில நினைவுகளை இக்கட்டுரையின் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

1979 மற்றும் 80ஆம் ஆண்டுகளில், வடசென்னை தொழிற்பயிற்சிப் பள்ளியில் மாணவர்களாக இருந்த தோழர்கள் தாஸ், ஜோதிராஜா அவர்கள் மூலமாக அந்த காலத்தில் ரஞ்சன் என அழைக்கப்பட்டு வந்த தோழர் நாபாவின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது.

கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கல்வி கற்க வந்திருந்த பத்து பதினைந்து மாணவ மாணவியர்களின் பாதுகாவலராகவும் இருந்து கொண்டு, தான் சார்ந்த இயக்கத்தினையும் நடத்திக் கொண்டு வந்தார்.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலன் மட்டுமல்லாது தாயகம் திரும்பியவர்கள் என்ற முறையில் மலையத்திலிருந்து இந்தியாவுக்கு குடியேறியுள்ள தோட்டத் தொழிலாளர்களின் நலன்களிலும் தோழர் அக்கறை கொண்டிருந்தார்.

எனக்குத் தெரிந்து குறைந்த பட்சம் மாதம் இரண்டு முiயாவது நீலகிரி மாவட்டத்திற்கு அங்குள்ள மலையகத் தோழர்களுடன் தொடர்பின் மூலமாக கூடலூர், தோத்தகிரி போன்ற இடங்களில் பல இயக்கங்களையும் நடத்தி வந்துள்ளார். நான் அவரை சந்திக்கச் சென்றபோதெல்லாம், என் மூலமாக மலையத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலவரங்கள், 1970க்குப் பின்னர் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள போராட்ட உணர்வு போன்ற விசயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு பல மணி நேரங்கள் நாங்கள் பேசியிருக்கிறோம்.

அந்தக் காலத்தில் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட மலையகத் தொழிலாளிகள் அங்குள்ள சீதோஷ்ணநிலை ஒத்துக் கொள்ளாததாலும் அந்தத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் நிர்வாகத்தோடு சுமுகமான முறையில் தீர்க்கப்படாததாலும் கூட்டம் கூட்டமாக தமிழகத்திற்கு வந்து சென்னையில் சேப்பாக்கம் வளாகத்தில் தங்கியிருந்தார்கள். இவ்வாறு நிர்க்கதியாகத் தங்கியிருந்தவர்களை அவ்வப்போது வந்து சந்தித்து, அப்போது ஆரம்பிக்கப்பட்டிருந்த தாயகம் திரும்பிய ஈழ மாணவர் மன்றத்தின் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும், பசியோடு வாடிய அந்தத் தொழிலாளர்களுக்கு பொருளாதார ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் உதவி புரிவதிலும் தோழர் ஆற்றிய பங்கினை என்னால் இன்றும் மறக்க முடியாது.
பல சந்தர்ப்பங்களில் வேலை வாய்ப்போ, பயிற்சியினை முன்னிட்டோ அல்லது மருத்துவ சம்பந்தமாகவோ வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் தாயகம் திரும்பியவர்களை, அவர்களது பணி சென்னையில் முடியும் வரையில் அவர்களை கோடம்பாக்கத்தில் உள்ள தோழரின் இருப்பிடத்தில் தங்கிச் செல்ல இடமளித்திருந்ததை என்னால் நினைவுகூர முடிகிறது.

தோழரை சந்திக்கச் செல்லும்போது, பல தடவைகளில் இலங்கையில் சாதாரணமாக வீடுகளில் உபசரிப்பதுபோல் பால் கலக்காத வெறுந் தேனீர் தயாரித்து உபசரித்துள்ளார்.

இன்னும் இலங்கையிலிருந்து, இலங்கை - இந்திய உடன்படிக்கையின் கீழ் இந்தியா வந்து சரியான முறையில் மறுவாழ்வு உதவி பெற முடியாத நிலையில் இருந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், நீலகிரி மற்றும் கொடைக்கானால் போன்ற இடங்களில் தனியார் தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்வதைப் பார்த்துவிட்டு, இவ்வாறாக இந்தியாவுக்கு திரும்பி வறுமையில் வாடும் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி அவர்களை மீண்டும் இலங்கைக்கே அழைத்துச் சென்று ஒரு நல்ல வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற நல்லெண்ணமும் அவரிடம் இருந்தது. தோழர் வரதராஜப் பெருமாளும் தோழர் நாபாவும் இது சம்பந்தமாக பல சந்தர்ப்பங்களில் தங்கள் கருத்தினைத் தெரிவித்துள்ளார்கள்.

இத்தோடு நிறுத்திக் கொள்ளாது, ஒரு குறுகிய கால இடைவெளியில் இலங்கைக்குச் சென்று யாழ்ப்பாண மக்களோடு தமது இயக்கத்தின் செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொள்ளலாமல், மலையக மக்களின் முன்னேற்றத்திற்கும் தங்கள் இயக்கத்தினை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கையில் பதுளை போன்ற இடங்களில் இயக்கச் செயற்பாடுகளைப் பெருமளவு மேற்கொண்டார். சிங்களத் தொழிலாளர்கள் மத்தியிலும் தோழர் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு பின்னர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதன் செயலாளராகவும் தோழர் பத்மநாபா என்ற பெயரிலும் மக்கள் மத்தியில் தோழர் அறிமுகம் ஆனார்.

பல வருடங்களாக பதட்ட நிலையில் இருந்து வந்த இலங்கை வாழ் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்திற்குப் பின்னர், அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்டு அங்கு ஏற்படுத்தப்பட்ட தமிழ் மாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கலந்து கொண்டு வெற்றி பெற்று தோழர் வரதராஜப் பெருமாள் தலைமையில் ஆட்சியினை அமைத்த பின்னர், இந்தப் பகுதியில் முழு அமைதியினை ஏற்படுத்தியதில் தோழர் பத்மநாபாவின் பங்கு அளப்பரியது.

பழகுவதற்கு இனிமையானவர் தோழர் நாபா.

அவரோடு கடற்கரை மணலில் உட்கார்ந்து பல சந்தர்ப்பங்களில் பொதுவான பிரச்சினைகள் குறித்து உரையாடல் நடத்தியதையெல்லாம் மறக்க இயலவில்லை. மிகச் சிறிய வயதில் ஒரு மாபெரும் இக்கத்திற்குத் தலைமை தாங்கி சாதனை படைத்தவர் மீது பொறாமை கொண்ட கொலை வெறியர்கள் அற்பத்தனமான முறையில் கொலை செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.