ந. அரணமுறுவல்


படிக்கட்டாய் ... பத்மநாபா!


ந. அரணமுறுவல்

இனிய தோழர் ரஞ்சன் இன்று இல்லை!

ஏகாதிபத்தியச் சதி தோழர் ரஞ்சனையும் பலியெடுத்து விட்டது.

1977ஆம் ஆண்டு நடந்த தமிழினப் படுகொலையின் எதிரொலியாய் ஈழத்துச் சிக்கலை முன்னெடுக்கத் தமிழக ஈழ நட்புறவுக் கழகம் என்ற ஓர் அமைப்பை, 1977ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் நாள் தொடங்கினோம். பேராசிரியர் இரா. இளவரசு தலைவர், நான் செயலாளர், சேலம் பாவரசு துணைச் செயலாளர். நாங்கள் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகத் தேவைப்பட்ட போதெல்லாம் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் - ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழக ஈழ நட்புறவுக் கழகத்தின் வழிப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பணியாற்றி வருகிறோம்.

1978ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஒரு நாள்...

தோழர் ரஞ்சனும் தோழர் தேவாவும் என்னை ஆழ்வார்பேட்டை ஒப்புரவு அச்சகத்தில் சந்தித்தனர். ஈழ மாணவர் பொது மன்றப் பொறுப்பாளராக ரஞ்சன் இருந்த நேரம். அவரும் மற்றும் தோழர்களும் பாலஸ்தீன விடுதலை இயக்க உதவியுடன் பெய்ரூட்டில் ஆயுதப் பயிற்சி பெற்றுத் திரும்பியிருந்தார்கள்.
அன்று முதல் கடந்த பன்னிரண்டு ஆண்டுகள் எங்களுக்கிடையே தொடர்ந்து தொடர்பு இருந்தது.

எத்தனையோ சிக்கல்களும் குழப்பங்களும் இருந்தபோது கூட எங்கள் தோழமையில் விரிசல்கள் விழவே இல்லை.

அவருடைய அயிரத்தெட்டுப் பணிகளுக்கிடையில் என்னையும் நினைத்து வந்து பழகுவார். அது அவரது பொது வாழ்வின் பண்பையே காட்டுவதாகும்.

1978இலிருந்து தோழர் ரஞ்சனையும் பிற தோழர்களையும் (பத்மநாபா தமிழ்நாட்டுத் தொடர்புக்கு வைத்துக் கொண்ட பெயர்தான் ரஞ்சன்) தமிழ் நாட்டு இடதுசாரி இயக்கத்தவர்களோடு அறிமுகப்படுத்துவது என்னுடைய முக்கியமான பணியாயிருந்தது. அதில் கட்சி வேறுபாடு எதுவும் பார்ப்பதில்லை.

1978ஆம் ஆண்டு மக்கள் செய்தி என்ற நாளிதழில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். மார்க்சிய -லெனினியப் பொதுவுடமைக் கட்சித் தலைவரும் அறிஞரும் போராளியுமான தோழர் ஏ.எம்.கோதண்டராமன் சிறையிலிருந்து விடுதலையாகி உழைக்கும் மக்கள் மாமன்றக் கட்டடத்தில் (மக்கள் செய்தி அலுவலகம்) தங்கியிருந்தார்.

தோழர் ரஞ்சனை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். அதன் பிறகு தொடர்பு தொடர்ந்தது.

லண்டனிலிருந்துகொண்டு ஈழப்போராட்டத்தை நடத்தக் கூடாது. ஈழத்திலிருந்தே போராட்டத்தையும் பிற கோரிக்கைகளையும் முன்வைத்து ஈழப் புரட்சியமைப்பிலிருந்து ஈழ மாணவர் பொது மன்றம் தனியே பிரிந்தது.

மார்க்சிய லெனினியக் கருத்து வளர்ச்சி அவரை ஈழப் புரட்சியமைப்பிலிருந்து வெளிவரத் தூண்டியிருக்கலாம். அது தவறென்று சொல்லமுடியாது. ஆனால் இந்தக் கருத்து நிலை (Idealogy) வளர்ச்சிதான் எதிரிகளிடம் அவரைத் தனித்து அடையாளம் காட்டி ஒதுக்கப்படவும் ஒழித்துக்கட்டவும் காரணமாகி விட்டது.

மார்க்சிசம் வளரும் அறிவியல். மார்க்சிய லெனினியம் வரலாற்றை மாற்றும். அந்த நம்பிக்கை அவருக்கும் இருந்தது.

அந்தப் பாதை கரடுமுரடானதுதான் எனினும் அவர் தொடர்ந்தார்.

1980இல் ஈழப் புரட்சியமைப்பிலிருந்து வெளியேறியபின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தோன்றியது. அப்போதெல்லாம் உடனிருந்து உதவி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்காக ஈழப் புரட்சியமைப்பினர் என்னைக் கொல்வோம் என்று கூட மிரட்டிப் பார்த்தனர்.

எண்பதாம் ஆண்டுகளில் பல நெருக்கடிகளுக்கிடையிலேயே பொருளாதார வாய்ப்புக் குறைவுடனேயே இயக்கத்தை; தொடங்கி நடத்தினார். பல சிக்கல்களுக்கும் முகம் கொடுக்கும் பொறுமை அவரிடமிருந்தது. வேறு எந்த ஈழப் போராளிக்கும் இல்லாத பண்பு இது. இன்று ஈழப் போராட்டம் திசைமாறி எங்கோ போய்விட்டது.

ஒரு கட்டத்தில் ஈழப் போராட்டத்தின் முனை முகத்தில் நின்று அவர் இயங்க வேண்டி வந்தது. இன்று நிலைமை வேறாகிப் போனது.

இதனாலெல்லாம் இதுதான் விடுதலை என்றாகிவிடாது. ஈழப் போராட்டத்தை ஆதரித்தவர்கள் மனதில் எத்தனையோ கேள்விகள் தோன்றியுள்ளன. சரியான விடைதான் இல்லை. ஈழ விடுதலை எங்கோ இருக்கிறது!

அதற்காகத் தோழர் ரஞ்சன் என்ற பத்மநாபா உழைத்தார். அந்தப் பாபதையில் அவர் ஒரு படிக்கட்டாய் மாறரிப் போனார்.

அந்தப் படியையும் தாண்டித்தான் ஈழ விடுதலையை வென்றெடுக்க வேண்டும்.
அந்தப் படியைக் கடக்காமல் வென்றோம் என்று யாராவது சொல்வார்களானால் அவரகள் ஈழ வரலாற்றை மறைப்பவர்கள் அல்லது மறுப்பவர்கள்.