ஆர்.பி.எஸ். ஸ்டாலின்


ஈடு செய்ய முடியாத இழப்பு


ஆர்.பி.எஸ். ஸ்டாலின், பி.ஏ., பி.எல்.,

தோழர் பத்மநாபாவின் மறைவு ஈழத்து மக்களுக்கு மாத்திரமல்ல, இந்தியாவிற்கும், ஏன் உலகத்திற்கும் கூட ஒரு பேரிழப்பாகும். உலகம் 21ம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கும் இக்காலகட்டத்தில், வாழ்ந்த, வாழுகின்ற தலைவர்களில் மறைந்த தோழர் முக்கியமானவர்.

அவர் ஈழத்து மக்களின் சுதந்திர விடியலுக்காக தனது உடல், பொருள், ஆவி அத்தனையும் அர்ப்பணித்தார். ஆயுத கலாச்சாரத்தினால் புரையோடிப்பேன ஈழத்து மண்ணில் அமைதி, சமாதானம், ஜனநாயகத்தை நிலைநிறுத்த யதார்த்தமான தீர்வுகளை ஏற்றுக் கொண்டார். ஏற்றுக்கொண்தோடு நின்றுவிடாமல் அதனை நடைமுறைப்படுத்த போராடினார்.

அவரை இக்காலகட்டத்தின் தலைசிறந்த யதார்த்தவாதி என்றால் அது பிழையல்ல. அவர் யாரால் படுகொலை செய்யப்பட்டாரோ அவர்களையும் ஐக்கியப்படுத்தித்தான் சிங்களப் பேரினவாத அரசுடன் போராட வேண்டும் என்ற கருத்தை இறுதிக்காலம் வரை கொண்டிருந்தார்.

அவர் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி, தமிழக வீதிகளில் அலைந்து திரிந்த போதெல்லாம், தந்தை பெரியாரின் பாசறையில் வளர்ந்த எங்களைப் போன்றவர்கள்பால் அதிக ஈடுபாடு செலுத்தினார்.

மார்க்ஸிஸ கருத்துக்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட தோழர் பத்மநாபாவை நாம் எமது வழிகாட்டியாக மாத்திரம் அல்லாமல், எம்முடன் இரத்த உறவு கொண்ட சகோதரராகவும் கருதியிருந்தோம்.

தந்தை பெரியாருக்குப் பின் ஒரு தலைவராக நான் பார்த்தது தோழர் ரஞ்சன் என்கிற பத்மநாபா அவர்களைத்தான். மிகவும் எளிமையான அமைதியான சுபாவம் கொண்ட, அதிகம் பேசாத, ஆனால் ஆளுமை படைத்த அம்மாமனிதனின் இறப்பை இற்றைவரை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

இந்தியாவின் பிரஜைகளில் மற்ற எல்லோரையும் விட நான் அவருடன் நெருங்கிப் பழகியவன். அவருடைய அரசியல் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையின் பரிமாணத்தை மிக அருகில் இருந்து அவதானித்தவன்ளூ அவற்றினால் கவரப்பட்டவன் என்ற முறையில் அவருடன் வாழ்ந்த வாழ்க்கைக் காலத்தை எனது வாழ்க்கைக் காலத்தில் கிடைத்த பெரும்பேறாகவே கருதுகிறேன்.

இன்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலிருந்து விலக்கப்பட்ட முக்கியஸ்தர் ஒருவர், ஈழப் போராட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக போதைப்பொருள் கடத்துவது பற்றிப் பேசியபோது தோழர் பத்மநாபா அதனைக் கடுமையாக எதிர்த்தார். ஈழத்து சமூகத்தின் விடிவுக்காக இன்னொரு நாட்டின் சமூகத்தை அழிக்கும் அக்கயமைத்தனத்தை உளத் தூய்மையுடன் எதிர்த்தார்.

அவர் ஈழத்து மக்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டின் முற்போக்கு சிந்தனை படைத்த இளம் தலைமுறையினருக்கு ஒரு வழகாட்டியாகத் திகழ்ந்தார். உலக சமாதானம், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய விஷயங்களில் முனைப்புடன் செயல்பட்ட ஒரு முக்கியமான ஆசிய தலைவர் அவர். ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார் போன்றவர்களின் குணாதிசயங்களை ஒருங்கே அமையப்பெற்ற தலைவராவார். சுரண்டல், சாதியடக்கு முறை, பெண் அடிமைத்தனத்திற்கு எதிரான தீவர கருத்துக்களை கொண்டிருந்தார். காலாவதியான, விஞ்ஞானத்திற்கு விரோதமான இச்சமூக அமைப்பை அவர் அறவே வெறுத்தார்.

அவரின் இறப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு. அந்த இனிய தோழனை, சகோதரனை, தலைவனை பாதக கொலைகாரர்களின் துப்பாக்கிக் குண்டுகள் எம்மிடமிருந்து பிரித்துவிட்டன.

ஈழத்து மக்களுக்கு மாத்திரமல்ல, சிங்கள மக்களுக்கு மாத்திரமல்ல, அல்லது தமிழகத்துக்கோ, இந்தியாவிற்கோ மாத்திரமல்ல, உலகத்திற்கே அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.