ஜெயகாந்தன்


இந்தியாவின் நண்பர்கள்


ஜெயகாந்தன் - எழுத்தாளர்

எல்லா நாடுகளிலும் அடிமைத்தனத்தையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்துப்போராடும் மக்களின் உற்ற துணைவனாகவும் ஒப்பற்ற நண்பனாகவும் திகழும் தேசம் இந்தியா என்பதை உலக வரலாறு நிரூபித்து நிற்கிறது: நிற்கும். எனவே அது உலகளாவிய ராணுவச் சதிகளுக்கும், ராணுவக் கூட்டணிகளுக்கும் சர்வதேச பயங்கரவாதத்துக்கும் எதிராகக் குரல் கொடுக்கிற, உலக ஜனநாயக முற்போக்குச் சக்திகளை ஒன்றிணைக்கிற ஒரு மாபெரும் சக்தியாகத் திகழ்வதை யாரும் தடுத்துவிட முடிவதில்லை.

ஆனால் அத்தகு முயற்சிகளில் தொடர்ந்து பலவழிகளாலும் ஈடுபடுகிற இந்திய விரோத சக்திகள் - இவை இந்தியாவுக்கு மட்டும் ஏதோ தேசிய அளவிலான விரோத சக்திகள் அல்ல: அவை உலக மக்களின் சகோரத்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான சக்திகள் - இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் இந்தியாவைச் சுற்றிலும் சூழ்ந்திருப்பதும் ஓர் யதார்த்தமாகும்.

எண்ணற்ற நோய்களும், பொருளாதாரப் பிரச்சினைகளும் அலைக்கழிக்கிற இந்திய வாழ்க்கையில் விரக்தியினாலும், பகைமையினாலும், சாதி சமயப் பிரிவுகளினாலும் - எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியல்வாதிகளின் குறுகிய லட்சியங்களினாலும் இத்தகு இந்திய விரோத சக்திகள் ஆக்கமும் ஊக்கமும் பெற்று வருவதும் மற்றொரு யதார்த்தமாகும்.

இத்தகைய எதார்த்தங்களின் நடுவே இந்தியாவின் மாபெரும் லட்சியங்களையும் மனிதாபிமான அரசியலையும், அது உலகுக்கு இத்தனை இருளிடையே பரப்பி நிற்கும் வெளிச்சத்தையும், உலகுக்கு இந்தியா வழங்கும் நற்செய்தியைப் புரிந்து கொண்டு பணியாற்றுகின்ற இந்தியாவின் மாபெரும் நண்பர்கள் இந்தியாவுக்கு வெளியே உலகெங்கிலும் எக்காலத்திலும் உண்டு என்பதே சுடர்விடும் சத்தியம் ஆகும்!

ஆரம்பத்தில் இந்தியா அத்தகைய பொதுநோக்கும் பெருநெறியும் கொண்டுதான் ஈழத்துப்போராளிகள் அனைவர் விஷயத்திலும் அணுசரணையாக நடந்து கொண்டது. அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும் சில தனிப்பட்ட மனிதர்களும் நடந்து கொண்ட விதங்களைச் சேர்த்துக் குழப்பிக் கொள்ளாமல் சிந்திப்பவர்களுக்கு இந்தியாவின் நிலை புரியும்.

இதனை இலங்கை அரசும், சிங்கள இனவெறியர்களும், ஜெயவர்தனேவும் தவறாகப் புரிந்துகொண்டு தடுமாறியதுண்டு. அந்தத் தடுமாற்றத்தை நீக்கி, அதற்காக இலங்கை அதிபர் ஜெயவர்தனே உலகறிய வருந்தியதும் அதன் பின்னர் இந்திய - இலங்கை உடன்பாடு ஏற்பட்டு ஈழத்தில் ஜனநாயகமும் நல்லரசியலும் ஏற்படுவதைத் தடுத்துத் திசை திருப்பியது எது, அதற்கு என்ன பெயர், அதைத்தான் இந்திய விரோத சக்தி - அதாவது இந்தியாவைப் பற்றிய அறியாமையும் பகைமையும் சந்தேகம் உருவாக்கும் - ஒரு தற்கொலைத்தனச் சித்தாந்தம் என்று வரலாறு குறிக்கும்.

இவற்றின் மாயையிலிருந்து ஈழத்தமிழர்களை மீட்ட முற்போக்கு ஜனநாயகவாதி, அண்மையில் தமிழகத்தின் தலைநகரில் இந்திய விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட நண்பர் திரு. பத்மநாபாவும் அவரது தோழர்களுமாவர். இவரை நான் பங்களாதேஷ் மக்களின் அன்புக்குரிய தலைவராக விளங்கிய முஜிபுர் ரஹ்மானுக்கு இணையான இந்தியாவின் மாபெரும் உலக நண்பர்களில் ஒருவராகக் கருதுகிறேன்.

அப்படிப்பட்ட பல நண்பர்கள் இக்காலத்திலும் உலகெங்கிலும் இன்னபிற நாடுகளிலும் உள்ளனர். அவர்களில் பலர் அறிவு உலகப்பிரதிநிதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள்... எனினும் சில நிர்ப்பந்தங்களின் காரணங்களால் ஆயுதமேந்திய புரட்சிக்காரர்களாகவும் இருந்தனர், இருக்கின்றனர்.

ஓர் இந்திய அறிவாளி ஆயுதங்களை, கொலைக் கருவிகளைச் சார்ந்த ஓர் சித்தாந்தத்தை, அத்தகு அரசியலை மகாத்மா காந்திக்குப் பிறகு ஒருபோதும் சார்ந்திருக்க முடியாது.

ஜனநாயகத்தையும், மானுடகுல மரபுகளையும் மீறிய புரட்சிக்காரர்களை இந்தியா ஒரு போதும் மதிக்காது.

இந்திய லட்சியங்களுக்கு எதிராகச் செயல்படுவோரைத் தெரிந்தும் இந்திய அனுமதிப்பது, அது ஏற்றுக்கொண்ட சத்தியசோதனையான ஜனநாயக நெறிமுறைகளின் விளைவே தவிர, அது இந்தியாவின் பலவீனமல்ல. ஈ.பி.ஆர்.எல்.எவ் என்றழைக்கப்படும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பது இந்தியாவை நன்கு புரிந்துகொண்ட நல்லிளைஞர்கள் கொண்ட ஓர் முற்போக்கு ஜனநாயகப் பாசறை என்பது எனது அனுபவத்தால் நான் பெற்ற அறிவு.

திரு. வரதராஜப் பெருமாள் அவர்களை நான் சந்தித்துப் பேசியிருக்கிறேன். என்னோடு சில பொதுமேடைகளில் அவரைச் சந்தித்திருக்கிறேன். இன்னும் பெயர் தெரியாத ஈழப்போராளிகளை - அந்த நல்லிளைஞர்களை நட்புகொண்டுமிருக்கிறேன்.

இந்தப் போராளிகளைச் சாராத என்னைப் போன்ற, இவர்களின் ஆதரவாளர் திரு. அபுயூசுப் அவர்கள் திரு. பத்மநாபாவைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று என்னிடம் சொல்லிப்போன சில தினங்களுக்கெல்லாம் - நடக்கக் கூடாத யாருக்கும் நன்மை பயக்காத - அந்த நயவஞ்சகக் கொலை, நமது இந்திய வரலாற்றில் ஓர் இந்திய நண்பரைப் பலிகொடுத்த அந்தக் கறைபடிந்த நிகழ்ச்சி நடந்துவிட்டது.

இந்தியா மறக்காது: தனது இன்னுயிர் நண்பரை! எக்காலத்தும்!
இந்தியா மன்னிக்கும்: எல்லா துரோகிகளையும்.

நான் - ஒரு இந்தியன் அதுவும் தமிழன். இந்தியத் தமிழன்.

விண்ணை இடிக்கும் தலை இமயம் - அதன் வெற்பை அடிக்கும் திறனுடையோம்! என்பது, நமது ஞானகுரு பாரதியின் முழக்கம். இந்தப் பேருணர்வுடன் தோழர் பத்மநாபாவையும் அவரது இயக்கத் தோழர்களையும் அவர்தம் லட்சியத்தையும் இந்தியா காப்பாற்றியே தீரும்!

வெல்க பாரதம்!