ஜோர்ஜ். செனவிரத்னா


ஈழத்தின் மாமைந்தன்


ஜோர்ஜ். செனவிரத்னா
முன்னாள் இளைஞர் விவகார, மனித வள அமைச்சர்
வடக்கு கிழக்கு மாகாண அரசு


1983ம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக் காலைப் பொழுதொன்றில் புன்முறுவல் பூத்த முகமாய் தமிழ் வாலிபன் ஒருவன் என் வாசலுக்கு வந்தான். ஈழ மாணவர் பொது மன்றத்தின் ரஞ்சன் என தன்னை அறிமுகப்படுத்தினான்.

மிகவும் நெருங்கிய நண்பனைப் போலவும், நன்கு பழக்கமானவன் போலவும் என்னுடன் இலங்கை பொதுவான அரசியலைப் பற்றி பேச தலைப்பட்டான். இல்லை, இல்லை நான் பேசுவதை கேட்கவே விரும்பினான். அவன் கொழும்பு வந்தது, தென்னிலங்கை சமதர்ம, முற்போக்கு அரசியல் கட்சிகளினதும், குழுக்களினதும் தலைவர்களுடனும், முற்போக்கு புத்திஜீவிகளுடனும் தொடர்பு கொண்டு உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கே என தன் நோக்கத்தைக் கூறினான்.

இதுதான் நான் முதன் முதலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான தோழர் பத்மநாபாவை சந்தித்த பொழுதுகளின் சாராம்சம் ஆகும்.

தோழர் பத்மநாபா பற்றிய எனது முதலாவது அனுபவ கருத்தை கூறுவதாகில், அவர் ஒரு கூர்ந்த அவதானியாக, புத்தி ஜீவியாக, அந்தரங்கசுத்தி வாய்ந்த மார்க்சிஸ்ட்டாக, தமிழ் மக்களின் இளைய தலைவனாக, என்னால் இனங்காணப்பட்டது மட்டுமின்றி, காண்போரையெல்லாம் கவரும் அவரது சுபாவமும், கவரப்பட்டோர் உள்ளங்களிலே எதிர்ப்பார்ப்புக்களையும் உறுதிகளையும் உருவாக்கும் சக்தியையும் அவர் கொண்டிருந்தார்.

1983ம் ஆண்டிலே நிகழ்ந்த இனக்கலவரம் வரை, தென்னிலங்கையிலும், மலையகத்திலும் சுதந்திரமாக உலவி வந்த தோழர் பத்மநாபா, அறிமுகப்படுத்திக் கொண்ட சிங்கள புத்தி ஜீவிகளுள் கலாநிதி நியூட்டன் குணசிங்க இவரை மிக நெருக்கமாகப் புரிந்து கொண்டிருந்தார். தோழர் பத்மநாபாவைப் பற்றி நிறைய அறிந்து கொண்டதாக அவர் அடிக்கடி கூறுவார். தோழர் நியூட்டனை ஒரு மார்க்சிஸ ஆசானாகவும், விஞ்ஞானியாகவும் இனம் கண்டு, அவரால் இலங்கையின் சமதர்ம இயக்கத்துக்கு அளிக்கப்பட்ட சேவையை பாராட்டியவர் தோழர் பத்மநாபா.

சமதர்மத்திற்காக போராட வேண்டிய தேவையை தமிழ் இளைஞர்களுக்கு உணர்த்திய தோழர் பத்மநாபா, தமிழ் தேசியத்தை குறுகிய தமிழ் இனவாதத்தின் செல்வாக்கிலிருந்து காப்பாற்றுவதற்காகவும் உறுதியோடு உழைத்தார்.

தேசிய ரீதியில் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் அனைத்துப் பொதுமக்களுடனும் தோளோடு தோள் நின்று போராடுவதற்காக, தமிழ் தேசியப் போராட்டத்தையும் தமிழ், சிங்கள உழைக்கும் மக்களின் போராட்டத்தினையும் இணைப்பதில் அந்தரங்க சுத்தியோடு உழைத்தார்.

தமிழ் தேசீய போராட்டம் என்ற தமிழ் மக்களுக்கு அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் போராட்;டத்தினை (சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்கும் போராட்டம்), இலங்கையில் சமதர்ம சமூக மாற்றத்தினைக் கொண்டு வருவதற்கான போராட்டத்துடன் இணைப்பதற்காக அவர் பிரயத்தனப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் சிங்கள எல்லைக் கிராமங்கள் மீது நடத்திய காட்டு மிராண்டித்தமான தாக்குதல்களையெல்லாம் மனித நேயத்துடனும் மன வேதனையுடனும் கண்டித்தார்.

தோழர் பத்மநாபா ஈழம் என்ற சுலோகம் தனி ஒரு சிறிய நாட்டை உருவாக்குவதற்காக அல்ல என்றும், அது உறுதி வாய்ந்த சமதர்ம இலங்கையை உருவாக்குவதற்கான முன்னோடி என்றும் கருதினார். பிரிவினை வேதனைக்குரியது என்றும் கூறினார்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்து போராடிய பத்மநாபா, உழைக்கும் சிங்கள மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தையும் கூர்ந்து கவனித்ததுடன் ஒத்துழைத்தார்.

1985 திம்பு பேச்சு வார்த்தை ஆரம்பமாகும் போது, சிங்கள மக்களின் ஜனநாயக உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும் ஓர் அறிக்கையை அங்கு சமர்ப்பிப்பதற்காக தயாரித்திருந்தார். 1988ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண சபையை நிறுவியதுடன் அது தொடர்பான அதிகார பரவலாக்கல் சம்பந்தமாக பேச்சு வார்த்தைகள் நடந்த போது சிங்கள மக்களின் ஜனநாயக உரிமைகள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

ஒரு சிங்கள முதலாளித்துவ அரசால் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்க முடியாதெனப் புரிந்து கொண்ட தோழர் பத்மநாபா, பெரும்பான்மையான உழைக்கும் சிங்கள மக்கள், தாம் இழந்த ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்காக ஸ்தாபன ரீதியாக திரளுகின்றவரை தமிழ் மக்கள் தமது உரிமைகளை பெற கஷ்டம் நிறைந்த போராட்டத்தையே நடத்தவேண்டி வரும் என அறிந்திருந்தார். இதை சரியாக உணர்ந்திருந்த தோழர் பத்மநாபா தென்னிலங்கை மாற்று சிந்தனையாளர்களுக்கும், சமதர்ம கட்சிகளுக்கும், குழுக்களுக்கும் உதவ பின்வாங்கவில்லை.

விடுதலைப்புலி இயக்கத்தின் உதவியுடன் அதன் பயங்கரவாதத்துக்கு உரமூட்டி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைமையில் இருந்த வடக்கு கிழக்கு மாகாண அரசை இலங்கை அரசு ஸ்திரமின்மை அடையச் செய்த பின்னர், மீண்டும் ஒரு முறை இந்தியாவிலே அஞ்ஞாதவாசம் செய்த தோழர் பத்மநாபாவுடன் சிறிது காலம் நான் ஒன்றாக இருக்க நேர்ந்தது. இந்த அஞ்ஞாதவாசத்தின் போது நானும் தோழர் நாபாவும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நமது தேசத்தின் அரசியல் பற்றியும், ஈ.பி.ஆர்.எல்.எப் மகாநாடு பற்றியும் நிறைய பேசியிருந்தோம்.

இலங்கையில் சமதர்ம, ஜனநாயக கட்சிகளின் தோல்வியையிட்டு தோழர் பத்மநாபா கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்ததைப் போன்ற சாமானியர்கள் மத்தியில் ஆழமாகவும், பரவலாகவும், வேரூன்றிய ஒரு ஜனநாயக இயக்கம் எமது சுதந்திரத்திற்கு முன் இல்லாமல் போனதும், பின்னர் தோன்றாது இருந்ததுமே முக்கிய காரணமென்றார். இந்த பலவீனத்தின் மூலவேர் இதுவே எனக் கூறினார்.

அது மட்டுமல்லாமல், எமது நாட்டின் கலாச்சாரத்தில் ஜீவனுள்ள ஜனநாயக மரபுகள் இல்லாத காரணத்தினால் நாட்டின் அரசியல் கட்சிகளுக்குள்ளும் எதேச்சாதிகாரம் தோன்றுவதற்கு வழி கோலியது எனவும் கருதி, இலங்கையின் சமதர்ம சமூக மாற்றத்தின் இயங்கு சக்தி இலங்கையின் அனைத்து உழைக்கும் மக்களுமே என்பதனை புரிந்துகொண்டு, சகல உழைக்கும் மக்களையும் ஸ்தாபன ரீதியாக திரட்டாமல் வெறும் கோஷ்டிவாதம் பேசிக் கொண்டிருந்ததும், பிரிவினைகளை மறந்து ஒன்று திரளாமல் இருந்த காரணத்தினாலும்தான் முதலாளித்துவ கட்சிகளே ஜனநாயக காப்பாளராக தோற்றமளித்தன. சில இடதுசாரி கட்சிகளும், இந்த மாயையினால் முதலாளித்துவ கட்சிகளின் பின்னால் போயின. இந்த நிலைமைகளை இடதுசாரிக் கட்சிகள் மீளாய்வு செய்ய வேண்டும் என தோழர் பத்மநாபா விரும்பினார்.

சிங்கள தமிழ் மக்களின் மத்தியில் உறவுகளை மோசமாக உருவாக்குவதற்கு ஜனநாயக விரோத, இனவாத, முதலாளித்துவ சக்திகள் முனைந்து வெற்றி பெற்றதற்கு சமதர்மத்தைக் கொள்கையாகக் கொண்ட கட்சிகள் இங்ஙனம் பலவீனமடைந்திருந்ததே காரணம் என தோழர் பத்மநாபா நம்பினார்.

றோகண விஜயவீராவும், வேலுபிள்ளை பிரபாகரனும் முறையே சிங்கள, தமிழ் சமூக யதார்த்தங்கள் காரணமாகத் தோன்றியதுடன், இருவருமே தத்தமது மக்களின் விமோசனத்திற்காக உழைக்கிறோம் என்கிறார்கள். பின்னர் அவர்கள் தம்மை பாதுகாப்பதற்காக தீர்மானித்த போது ஆயுதம் ஏந்தி தமது மக்களையே அடக்கி ஆளும் நிலைமைக்கு வந்தது ஏன்?

மக்கள் விடுதலை முன்னணியும், தமிழீழ விடுதலைப்புலிகளும் தோன்றிய சமூக முறைகளின் உள்ளே தோன்றிய குறைபாடுகள் காரணமாய் மேற்சொன்ன இரு நபர்களும் அதனதன் நாசகார சக்திகளும் வேறுபட்டவைகள் அல்ல அவை இந்த சமூக அமைப்பில் உள்ள குறைபாடே ஆகும். சிங்கள தமிழ் சமூக அமைப்பு முறையின் வெளிப்பாடான மத, மரவுவாத அரசியல் கட்சிகளினுள்ளே காணப்படும் ஜனநாயக விரோத காரணிகள் தான் இவைகளுக்கு மூல காரணம்.
இதனால் இன்று முழு இலங்கை சமூகத்தையுமே, ஜனநாயகப்படுத்துதற்காகப் போராட்டம் ஒன்று செய்ய வேண்டியுள்ளது. இப்பிரச்சினைகளை விமர்சனங்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் மட்டுமே உட்படுத்தி வைப்பது போதுமானாதா?

இப்படிப்பட்ட பிரச்சினைகளில் தோழர் பத்மநாபா ஆழ்ந்த கவனம் எடுத்திருப்பார். இது, இன்று இலங்கை முகம் கொடுக்க வேண்டியுள்ள சவால்களில் இருந்து இலங்கையை மீட்பதற்கு முனையும் சகலரும், கவனத்தில் எடுக்க வேண்டிய ஒன்றாகும்.

மேற்கண்டவைகளின் அடிப்படைகளிலேயே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அரசியல் இராணுவ ஸ்தாபனத்தில் செயலாளர் நாயகமாக வாழ்ந்த தோழர் பத்மநாபா - தமிழ் தேசிய போராட்டத்தின் முழுமையான ஒரு வடிவத்தைப் பற்றிய தெளிவிருந்த தோழர் பத்மநாபா - ஒரு சிறந்த மனித நேயம் கொண்ட ஒரு உண்மையான ஈழ மைந்தன் என கருதப்படலாம்.