ப.மாணிக்கம்


தீர்க்கதரிசனமுள்ள புரட்சிக்காரர்


ப.மாணிக்கம், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தோழர் பத்மநாபா 19.6.90ல் எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தனது 12 தோழர்களுடன் மறைந்தது அதிர்ச்சியளித்தது. நினைக்குந்தோறும் வேதனை தருகின்றது. பத்மநாபா தமிழகத்தில் அடைக்கலம் புகுந்தவர். இந்திய இலக்கியங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும் அடைக்கலம் புகுந்தோர்க்கு நமது உயர் கொடுத்தேனும் பாதுகாப்பு தரவேண்டும் என்பது பண்பாடாக இருந்து வருகிறது. அடைக்கலம் புகுந்தவர் பாதுகாப்பற்ற நிலையில் மரணமடைந்தார் என்பதோடு, கொன்றவர்கள் பிடிபடவுமில்லை, தண்டிக்கப்படவுமில்லை. தமிழ்நாட்டின் மீது கறைபடிந்து விட்டது.

பத்மநாபாவின் வாழ்க்கை தன்னலமற்றதுளூ தியாகங்கள் நிறைந்தது. ஆழ்ந்த சிந்தனையும், அடக்கமும் அவர் தீர்க்க தரிசனமுள்ள புரட்சிக்காரர் என்பதை எடுத்துக்காட்டியது. ஒன்றுபட்ட இலங்கையில் ஈழத்தமிழ் மக்கள் உரிமையோடும், பாதுகாப்போடும் வாழ, ஒன்றிணைந்த அரசியல் இயக்கம் காண பாடுபட்டவர்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாக இருந்து வந்தவர். இது அவருடைய திறமை, தியாகம், உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். அவர், அவரது தோழர்களால் நேசிக்கப்பட்டார். அவர் தன் தோழர்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்தார். சில சந்தர்ப்பங்களில் இலங்கை அரசியல் நிலைமை பற்றியும், ஈழ மக்கள் விடுதலைக்காகவும் நடக்கும் போராட்டங்களில்; ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றியும் என்னுடன் விவாதித்தார். அவர் பிறர் கருத்துக்களை கேட்டறிவதில் அதிக கவனம் செலுத்துவார். தனது கருத்துக்களை நல்ல சிந்தனையோடு சுருக்கமாகத்தான் குறிப்பிடுவார். இது அவரது சிந்தனைத் தெளிவை புலப்படுத்தியது.

ஈழத்தமிழர்கள் மத்தியில் பாடுபட்டு வந்த அரசியல் இயக்கங்களை போராளிகளின் அமைப்புகளை ஒன்றிணைப்பதில் ஓர் அணியில் கொண்டு வருவதற்கு அரும்பாடுபாட்டார். இதில் அவருக்கு பல சோதனைகள் ஏற்பட்டன. நம்பிக்கை இழக்காமல், சளைக்காமல் பாடுபட்டார். அவர் சுடப்படாமலிருந்தால் அவர் தொடர்ந்து இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டிருப்பார். ஈழ மக்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் வழி என்பதை உறுதியாக நம்பி, போராடுவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் காணிக்கையாகும். ஈழமக்களுக்கு, வரலாற்றுச் சோதனைகள், இலங்கை வாழ் சகல மக்களுக்கும் சோதனைகள் இன்னும் முடியவில்லை. பத்மநாபா இருந்திருந்தால் இத்துறையில் இதற்குள் நல்ல முன்னேற்றம் காண பாடுபட்டிருப்பார்.

வரலாறு அவருக்கு சந்தர்ப்பம் தராவிட்டாலும், வரலாறு அவரது தூரநோக்கு சரி என நிரூபித்து வருகிறது. இத்தகைய தோழருக்கும், அவருடன் வீரமரணமடைந்த தோழர்களுக்கும் நமது அஞ்சலி.