ஏ.நல்லசிவன்


போராளிகளை ஒன்றுபடுத்தப் போராடிய பத்மநாபா


ஏ.நல்லசிவன், செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸ்சிட்)

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளராக விளங்கிய மறைந்த தோழர் பத்மநாபா அவர்களின் 39 வது பிறந்த தினத்தையொட்டி அவரது நினைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனினிஸ்ட் கட்சியின் சார்பில் எனது அஞ்சலியை செலுத்த விரும்புகிறேன்.

இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு காணவும், தமிழ் மக்களின் சுயாட்சி உரிமைகளைப் பெறவும், அதே நேரத்தில் இலங்கை தேசிய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்காமல் ஒரு சுமூகமான தீர்வு காணவும் விரும்பும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நோக்கங்களை தோழர் பத்மநாபா, பொதுச் செயலாளர் என்ற பொறுப்பை ஏற்று மிகுந்த சிரமங்களுக்கிடையில் நிறைவேற்றி வந்தார். ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாது ஏகாதிபத்திய எதிர்ப்பு, உழைக்கும் மக்களை சுரண்டலிலிருந்து விடுதலை பெறச் செய்வது, புரட்சிகர ஜனநாயக சிந்தனையுடன் பொதுவுடைமைச் சமூகத்தைப் படைக்க விரும்பிய ஒரு போராளி என்ற நிலையில் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்தார்.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜனநாயக வழியிலான தீர்வு காண அயராது பாடுபட்டு வந்த தோழர் பத்மநாபா, இளம் வயதிலேயே சக போராளிக் குழுவினாலேயே சுட்டுக் கொல்லப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தேச ஒற்றுமையைப் பாதுகாப்பது, குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்ற லட்சியத்துடன் இடதுசாரி இயக்கங்களுடன் ஒன்றிணைந்து போராடுவதே அதற்கு சரியான வழி என்ற தீர்க்கமான கண்ணோட்டத்துடன் தோழர் பத்மநாபா, தனது இயக்கத்தை வழிநடத்திச் சென்றார்.

எங்கள் கட்சி அலுவலகத்தில் வைத்து அவரை ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இளம் வயதிலேயே ஒரு தீர்க்கமான சிந்தனையும், நிதானமாக பிரச்சினைகளை எடுத்து வைப்பது என்ற அவரது பாணியும் எங்களைக் கவர்ந்தது. ஒரு புரட்சியாளனுக்குரிய அத்தனை அம்சங்களையும் நிரம்பப் பெற்றவராக திகழ்ந்து வந்தார். இடைவிடாத போராட்ட வாழ்க்கையில், அன்றாடப் பிரச்சினைகளில் சக போராளிகளுக்கு வழிகாட்டியாகவும் விளங்கி, இந்த அமைப்பை உருவாக்கியதில் முன்னணியில் நின்றார் என்பதை அனைவரும் அறிவர்.

அனைத்துப் பிரச்சினைகளையும் சர்வதேச கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்து, இலங்கையில் தமிழர் விடுதலைக்காகப் போராடும் இதர அமைப்புகளுடன் சாத்தியமான அனைத்து வழியிலும் ஒற்றுமையைப் பேணிக்காக்க முயற்சிப்பது, நடைமுறைச் சாத்தியமான ரீதியில் பிரச்சினைகளைப் பரிசீலிப்பது ஆகிய ஆரோக்கியமான அம்சங்களை அவரது பேச்சிலும், நடைமுறையிலும் நம்மால் பார்க்க முடிந்தது.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் இலங்கைத்தமிழர் பிரச்சினையில் ஒன்றுபட்ட இலங்கையில் அமையும் சுயாட்சி அதிகாரங்கள் கொண்ட தமிழ் மாநிலம் என்ற இலட்சியம் தான். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வு என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம்.

இலங்கைத்தமிழ் மக்களிடையே. குறிப்பாக தமிழ் போராளிகளிடையே உள்ள வேற்றுமைகளையும், மோதுதல்களையும் பயன்படுத்தி பிரித்தாளும் கொள்கையை இலங்கை அரசு தொடர்ந்து கடைபிடித்த வருகிறது. ஆனால், இத்தகைய சூழ்ச்சிகளுக்கு ஆளாகாமல் இலங்கைத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இத்தகைய நிலையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் தோழர் பத்மநாபா அவர்களும் இலங்கைத் தமிழ் போராளிக் குழுக்களிடம் மட்டுமல்லாது இலங்கை மற்றும் தமிழ் நாட்டிலுள்ள இடதுசாரி ஜனநாயக இயக்கங்களுடன் தொடர்ந்து நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளை மீட்க அனைத்து வழிகளிலும் பாடுபட்டு வந்தார் என்பதை இத்தருணத்தில் நினைவு கூருவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

தோழர் பத்மநாபா இன்று நம்மை விட்டுப் பிரிந்தபோதிலும், அவர் விட்டுச் சென்ற மகத்தான பணியினை இலங்கையிலுள்ள ஆயிரமாயிரம் முற்போக்கு ஜனநாயக உணர்வு கொண்ட இளைஞர்கள் நிறைவேற்றி முடிப்பார்கள் என நம்புகிறேன்.

தோழர் பத்மநாபாவின் 39வது பிறந்த தினத்தில் அவரை இழந்து துயருற்றிருக்கும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் துயரில் பங்கேற்பதுடன் தோழர் பத்மநாபாவின் பெயரும், புகழும் வரலாற்றில் நீடூழி வாழ விழைகிறோம்..