மனித நேயங்கள் மடிந்து விட்டன!
ஏ.எம். பால்ராஜ், ஆசிரியர், வணிக ஒற்றுமை
நான் எனது வாழ்நாளில் எதையெல்லாம் எழுதக்கூடாதென்று எண்ணுகின்றேனோ அதைப்பற்றியெல்லாம் எழுத நேர்ந்துவிடுகிறது. இது எனக்குற்ற அலவமேயாகுமெனக் கருதுகிறேன்.
மக்களாட்சித் தத்துவத்தை சுவீகரித்துக்கொண்ட நாடுகளுக்கு சட்டமியற்றும் சட்டமன்றங்களே பிரதானமாகும். அவை சிறப்போடியங்க வேண்டும். அவற்றில் தவறுகள் நிகழ்ந்து, அந்தத் தவறுகளை சுட்டிக்காட்டி எழுதுகின்ற கொடுமை எனக்கு வரக்கூடாதென்றே விரும்பினேன்.
எனது விருப்பம் நிறைவேறவில்லை. தமிழக சட்டமன்றத்தில் அமைச்சரவையில் நடந்த ஆபாசம் பற்றி எழுத நேர்ந்தது, அதற்காக பல நாள் வனவாகமும், சிறைவாசத்தையும் ஏற்க வேண்டி வந்தது.
நேரு பெருமகனாரை, அன்னை இந்திராவை, பெரியரை, காமராஜரை, இராஜாஜியை பெரிதும் நேசித்தேன்ளூ போற்றினேன். என் வாழ்நாளில் அவர்களைப் பற்றியெல்லாம் இரங்கலைத் தெரிவித்து எழுதும் நிலை வரக்கூடாதென்றே விரும்பினேன். எனது விருப்பம் நிறைவேறவில்லை.
சின்ன வயதிலேயே பெரிய சாதனைகளைச் செய்துவிட்டு மறைந்தவர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம். அவர் மறைந்தபொழுது கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் அனுதாபக் கூட்டம் நடந்தது. அதில்,
நான் பட்டுக்கோட்டையாரை அதிகம் விரும்பினேன். நிரம்பவும் நேசித்தேன். அவரின்று மறைந்துவிட்டார். நான் விரும்புகிறவர்கள், நேசிப்பவர்கள் இப்படித் தான் மறைந்து போவார்களென்றால்.... இனிமேல் எவரையும் நேசிக்கமாட்டேன், விரும்பமாட்டேன் என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டார்.
அந்த வார்த்தைகள் எனது நெஞ்சில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் மிகவும் விரும்புகின்ற பேரெல்லாம் நம்மோடு நீண்டில்லாமல் போய்விடுகிறார்கள், அவர்களைப்பற்றி அனுதாபித்து எழுதவேண்டிய கெடுவாய்ப்பு எனக்கு அடிக்கடி வந்து விடுகிறது.
தோழர் பத்மநாபாவை நான் அதிகம் விரும்பினேன்ளூ நேசித்தேன். இன்று வாழுகின்ற புரட்சியாளர்களைவிட அவரை அதிகமாக மதித்தேன்.
என்ன காரணம்?
1951இல் பிறந்தார். இந்த மண்ணில் முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்தார்.
அவர் வாழ்ந்திருந்த முப்பத்தொன்பது ஆண்டுகளில், இருபது ஆண்டுகளை பொது வாழ்வுக்கே வழங்கிவிட்டார்.
மிகச்சிறிய வயதில், உலகத்தின் பெரிய பார்வையைத் தன்வசம் ஈர்த்துக்கொண்ட ஒரு பெரும் தலைவராகத் திகழ்ந்தார்.
சிங்கள இனவாத இலங்கை அரசிடமும், பேரினவாதிகளிடமும் அடிமைகளாகவும் இரண்டாந்தர குடி மக்களாகவும் ஆக்கப்பட்டு விட்ட ஈழத்தமிழ்க்குலத்திற்கு மனித மரியாதையைத் தேடித்தர வேண்டுமென கருதினார்.
மாணவப்பருவத்திலேயே மகத்தான தலைவருக்குரிய தகுதிகளைப் பெற்றுவிட்ட பத்மநாபா, வயது வளர வளர அறிவிலும் திறனிலும் வளர்ந்தார். மார்க்சிய சித்தாந்தங்களை வளர்ச்சிக்கான எருக்களாக சுவீகரித்துக் கொண்டார்.
மிருகங்களுக்கு வெறிபிடித்து மனிதர்களுக்குத் தொல்லைத்தர தொடங்கிவிட்டால், அவைகளிடத்தில் இதோபதேசங்கள் நிச்சயம் எடுபடாது.
துப்பாக்கிக் தோட்டாக்கள் மட்டுமே அந்த அடாத மிருகங்களின் வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்தும், அல்லுற்ற மக்களுக்கு மீட்பைத் தரும்.
இந்த நிதரிசன நியாயம் தோழர் பத்மநாபாவின் இதயத்தை நிறைத்துக்கொண்டது.
சிங்களருள் யாரும் இந்துக்களில்லை. அதே போலத்தான் தமிழர்களில் எவரும் புத்தமதம் சார்ந்தோரில்லை. இந்துமதம் போலவே, புத்த மதமும் இந்தியாவில் தோன்றிய மதம்தான்.
புத்தமதம் எத்தனை உயர்வான கொள்கையை உடையது! அன்பை, அரவணைப்பை, அருள்வளத்தை, ஆயந்தறியும் அறிவுத்திறத்தை இந்தமண்ணிற்குக் கொடையாக வழங்கிய கவுதம புத்தரின் கண்டளிப்பல்லவா!
அந்த உயர்ந்த மதத்தைப் பின்பற்றுவோர் ஒப்பரிய உத்தமர்களாக அல்லவா இருந்திட வேண்டும். ஆனால் இலங்கையிலுள்ள புத்தமத்தினரோ -
புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கமக் சரணம் கச்சாமி
என்று முழங்க மட்டுமே கற்றிருக்கிறார்கள். இலங்கையின் பூர்வீகக் குடியாகிய தமிழினத்தை அடியோடு வெட்டிச் சாய்ப்பதற்கும், சுட்டுப் பொசுக்குவதற்கும் கொலை ஆயுதங்களோடு உலாவருகிறார்கள்!
இந்தக் கொடுமையிலிருந்து தமிழர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென்று விஞ்ஞானப்பூர்வமாக சிந்திக்கத் தொடங்கினார் பத்மநாபா.
இவருக்கு முன்பு தமிழ்க்குலத்தின் வாழ்வுக்குப் பாடுபட வந்தவர்களெல்லாம் உயிரைக் குடிக்கும் நஞ்சை பாம்பின் வாயில் வாய் வைத்து உறிஞ்சி எடுத்துவிட முடியுமென நம்பினார். பத்மநாபா கொத்தவரும் பாம்பை கோலெடுத்து அடித்து அப்புறப்படுத்த வேண்டுமென முடிவெடுத்தார்.
ஈழத் தமிழினத்தை காப்பாற்றுவதற்கு ஆயுதமேந்துதல் தவிர வேறு வழியில்லையென்று தீர்மானித்தார்.
நான் மக்களுக்காகவே இந்த மண்ணை நேசிக்கிறேன். மக்கள் அனைவரும் மடிந்து விட்ட பிறகு வெறும் மண்ணை மட்டுமே வைத்துக்கொண்டு என்ன செய்வது?
என்று கேட்டு... விடைதேட முனைந்தார். அப்பொழுதுதான், ஈழத் தமிழருக்கும் சிங்கள இனவாத அரசுக்கும் ஏற்பட்ட உச்சகட்ட மோதலைத் தவிர்த்து ஒற்றுமையை உண்டாக்க வேண்டுமென்ற உயரந்;த நோக்த்தில் இந்திய அரசு ஒரு நடுவராகவே இறங்கியது.
போராளிகள் அனைவரும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்ப வேண்டுமென கூறிய பொழுது -
ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு. அண்ணல் காந்தியடிகளாரின் நாட்டுக் கரங்களைப் பற்றி நடக்கத் தொடங்கினார் தோழர் நாபா.
விரும்பியது போலவே ஈழத்தமிழ் நாட்டில் தேர்தல் வந்தது. பத்மநாபாவின் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கமே பெரிய வெற்றியைப் பெற்றது.
முதன் முதல் தோன்றிய தமிழ் மாநிலத்தில் நடந்த முதலாவது தேர்தலில் தமது கட்சி முழுதான வெற்றியை பெற்றதால், முதலமைச்சராவதற்கு ஏற்ற வாய்ப்பிருந்தும், அந்த பதவி வேண்டாமென ஒதுக்கிவிட்டு, தாம் ஒதுங்கிக்கொண்டு தோழர் அண்ணாமலை வரதராஜப் பெருமாளை முதல்வராக்கினார்.
நீங்கள் அமைச்சரவையிலிருந்து தொண்டு புரியுங்கள். நான் மக்களோடு கலந்திருந்து அவர்கள் மனப்போக்கினையறிந்து ஆற்றிட வேண்டிய பணிகளை வகைப்படுத்திக் கூறுகிறேன் என்று சொல்லிக் கட்சிப் பணியாற்றப் புறப்பட்டு விட்டார்.
இந்தக் கலத்திலும் முதலமைச்சர் பதவி வேண்டாமென்று கூறும் அரசியல்வாதியா, உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்ட விந்தை மனிதர்.
பதவி வெறிபிடித்தலையும் அரசியல்வாதிகளே நிறைந்துவிட்ட இந்த நாளில் இப்படியொரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியவர் தோழர் நாபா.
இன்னுமொரு விந்தை.
தேர்தலில் பங்குபெற்ற அத்தனை பிரிவினருக்கும் அமைச்சரவையில் இடம் தரவேண்டுமெனக் கருதினார். இஸ்லாமியரும், சிங்களரும் மந்திரிகளாகும் வாய்ப்பை நல்கினார்.
விந்தைமிகுந்த இந்த காரியத்தை செய்வதற்கு விவேகத்தைவிட வீரம் மிகுந்த தன்னம்பிக்கை வேண்டும் -
தன்னையும் தன் தொகுதியையும் வலுப்படுத்திக் கொண்டு மாநிலம் முழுவதிலும் விளம்பரம்பெற்று எதிர்காலத்தில் தனது கட்சியையே தோற்கடித்து விட்டால்...?
இப்படி எண்ணும்போது, தம்மை தோற்கடிக்க எவராலும் முடியாது என்ற தன்னம்பிக்கை வேண்டும் -
தோற்றால்தான் என்ன, வென்றவர்கள் ஆண்டுவிட்டுப் போகட்டும். தொடர்ந்து சமுதாய மேன்மைக்குழைப்போமென்ற துவண்டுவிடாத வீரம் வேண்டும்.
இந்த தன்னம்பிக்கையும் வீரமும் நெஞ்சு நிறைய முழுமை பெற்றுள்ளதால்தான் தோழர் நாபா அனைத்து கட்சிகாரர்களுக்கும் தமது அமைச்சரவையில் இடம் தந்திருந்தார்.
இத்தனையளவு உயர்ந்த குணம் கொண்ட சீலரை இனிமேல் காண்பது அரிதேயாகும்.
தோழர் பத்மநாபாவின் சிறப்பியல்புகளையும், மேலான போக்கையும், விசாலமான நோக்கையும் நீண்ட நாளாகவே மதிக்கக் கற்றிருக்கிறேன். அதனால், பல்வேறு சமயங்களில் வணிக ஒற்றுமை ஏட்டில் எழுதிப் போற்றியிருக்கிறேன்.
தாய்த்தமிழ்நாடு தனதுயரின் பத்திரத்தன்மைக்கு உத்தரவாதமளிக்குமென்ற நம்பிக்கையோடு இங்கே வந்தார்.
நிராயுதபாணியாக, தாடி வைத்த காந்தியடிகளாரைப் போல் அகிம்சாமூர்த்தியாக நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரம் நெஞ்சிலே நஞ்சும் விழியிலே நெருப்பும் சுமந்து திரியும் வீணர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
ஆயுதமேதுமின்றி அமர்ந்திருந்தபோது, ஆயுதத்தால் சுட்டுப் பொசுக்கும் அசிங்கத்தை அந்த அருவெறுக்கத்தக்கவர்கள் அரங்கேற்றிவிட்டார்கள். வீரம் எனும் சொல்லுக்கே வீண்பழி சேர்த்துவிட்டார்கள்.
இந்த சம்பவத்தை எண்ணிக் பார்க்கும் பொழுது, மனித நேயங்கள் மடிந்து விட்டன என்றே சொல்லத் தோன்றுகிறது.
வாழ்க பத்மநாபா புகழ்!
வெல்க அவர்தம் கொள்கை!