வீ. ராஜமோகன்


ஒரு தோழனைக் கண்டேன்!


வீ. ராஜமோகன், செயலாளர், இந்திய ஐக்கியப் பொதுவுடமைக் கட்சி, சென்னை மாவட்டக்குழு.

1983ஆம் ஆண்டு ஈழ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான கொடுமைகளுக்குப் பின்னர், பல்வேறு ஈழப்போராளிகள் அமைப்பைச் சார்ந்தவர்களோடும் தொடர்பு கொள்ள வாய்ப்புக் கிட்டியது.

அவர்களோடு ஈழப்பிரச்சினை குறித்தும், மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றியும் விவாதித்ததுண்டு. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் . பத்மநாபா அவர்களோடு விவாதித்தபோது, அவரது ஆழ்ந்த ஞானத்தையும், தெளிவான சிந்தனைப் போக்கையும் என்னால் காணமுடிந்தது.

தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்தின் மீது அவருக்கிருந்த பற்றும், அதனை அடைவதற்காக அவர் மேற்கொண்ட விடாமுயற்சிகளும் அவரது தலைமைக் குணத்தை தனியே எடுத்துக்காட்டின.

ஆனால், அவர் என்றுமே தன்னைத் தலைவனாகவும், இயக்கத்தைச் சார்ந்த மற்றவர்கள் தன்னைப் பின்தொடரும் தொண்டர்கள் என்றும் கருதியதே இல்லை.
அவர்களனைவரையும் தனது தோழர்களாகவே கருதினார். அந்தத் தோழமை உணர்வு என்றுமே அவரிடமிருந்து மாறியதில்லை. தலைமைக்குழுவில் அங்கம் பெற்றவர்களாக இருந்தாலும் அனைவரையும் அவர் சமமாகவே கருதினார்.

தன்னலம் சிறிதுமின்றி இயக்கத்தைச் சார்ந்த இதர தோழர்களின் நலனைப் பேணும் பாங்கை அவரிடத்தில் நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

தான் மேற்கொண்ட இலட்சியத்தை அடைவதற்கான போராட்டப் பாதை சுலபமான நேரான தன்மையைக் கொண்டதல்ல என்பதையும், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் எவ்வளவோ நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் சந்திக்க வேண்டியுள்ளதையும் தோழர் பத்பநாபா மிகத் தெளிவாகவே உணர்ந்திருந்தார். ஈழ மக்களின் நலன், இந்தியாவின் நலன், இந்துமாக்கடல் அமைதி ஆகிய மூன்றும் ஒன்றில்pருந்து ஒன்று பிரிக்க முடியாதபடி பின்னனிப் பிணைந்திருப்பதை மிகத் தெளிவாக அவர் உணர்ந்திருந்தார்.

அதே போன்று ஈழ மக்களின் போராட்டத்திற்கு இந்தியா வழங்கி வந்த ஆதரவையும், ஈழ மக்களின் போராட்டத்திற்கு இருக்கின்ற மிகப்பெரிய பலம் ஈழ மக்களுக்கும், இந்தியாவிற்கும் இடையே உள்ள நட்புறவே என்பதையும் அவர் என்றும் மறந்ததில்லை.

அதனால்தான் இந்திய - இலங்கை உடன்பாடு ஏற்பட்டபோது, அதனை வரவேற்று உடன்பாட்டை அமுலாக்குவதில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முன்நிற்கும் எனத் தெளிவுபட அறிவித்தார். உடன்பாட்டிற்குப் பின்னர், இதர சில இயக்கங்கள் உடன்பாட்டிற்கு எதிராக நிலை எடுத்த போதும், உறுதியுடன் உடன்பாட்டை ஆதரித்து அமுலாக்குவதில் தோழர் பத்மநாபா முன்னின்றார்.

வடக்கு - கிழக்கு மாகாணக் கவுன்சிலுக்குத் தேர்தல் நடைபெற்று, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆட்சிப் பொறுப்பேற்ற வேளையில் தோழர் பத்மநாபாதான் ஆட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் எனப் பலரும் எண்ணினர்.

ஆனால் ஆட்சிப் பொறுப்பை தோழர் வரதராஜப்பெருமாள் அவர்களிடம் ஒப்படைத்து, இயக்கப் பணிகளில் தனது கவனத்தைச் செலுத்தினார். அவரது இந்த முடிவைப் பாராட்டாதோர் யாருமில்லை.

வாழ்நாள் முழுவதும் லட்சியத்திற்காகவே வாழ்ந்து, வஞ்சகர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி, லட்சிய வீரனாக மறைந்த தோழர் பத்மநாபா அவர்கள் கொண்டிருந்த லட்சியம் ஈழத்தமிழ் மண்ணில் நிறைவேறும்.