சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்


தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய
என் தாயகத்தின் மாப்பிள்ளை


சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் திரு. பத்மநாபா அவர்களுடைய நினைவையொட்டி சிறப்பு மலர் வெளியிடுவது மன ஆறுதலை தருவதாகும். அதற்கு கட்டுரை வழங்குவதும் எனது தவிர்க்க முடியாத கடமையாகும்.

திரு. பத்மநாபாவை ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா உடன்படிக்கைக்கு பிறகுதான் அதிகமாக அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர்தான் தொலைக்காட்சியில் அவரை அடிக்கடி தரிசிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கைப்படி உருவான தமிழ் மாகாணத்திற்கு திரு. பத்மநாபாதான் முதலமைச்சராக வந்திருக்க வேண்டுமென்று பத்திரிகை செய்திகளில் அறிந்து கொண்டேன். ஆனால் திரு. பத்மநாபா பதவிப் பொறுப்பு ஏற்க மறுத்துவிட்டார்.

அது அவருடைய தியாக உணர்வைக் காட்டுகிறது. என்னைப் பெரிதும் கவர்ந்தது. அதன்பின்னர்தான் அவரை அதிகமாக நேசிக்கலானேன்.

திரு. பத்மநாபாவும் அவருடைய புரட்சிகர முன்னணியும் இலங்கையிலிருந்து பிரிந்து வாழும் தனி ஈழ நாட்டைத்தான் விரும்பினர். அதற்காக ஆயுதப் புரட்சியிலும் நம்பிக்கை கொண்டிருந்தார் திரு. பத்மநாபா. ஆயினும் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு தன் அணியினரிடமிருந்து ஆயுதங்களை இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைக்க முன்வந்தது ஈழத் தமிழரிடம் நல்லெண்ணமுடைய இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.

அவர் கொண்ட அரசியல் கொள்கைகளையும், அவர் நம்பிக்கை வைத்திருந்த ஆயுதப் புரட்சியிலும் எனது நிலை எதுவாகினும் தமிழினத்தின் உரிமைவாழ்வில் அவர்கொண்டிருந்த உறுதி என்னை பெரிதும் கவர்ந்தது.

திரு. பத்மநாபா அரசியலில் இடது சாரி மனப்பான்மை உடையவர் என்பதனாலும் அவரை நேசித்தேன். இந்திய தமிழகத்தின் மகளை மணந்து என் தாயகத்தின் மாப்பிள்ளையாக வாழத் தொடங்கிய நேரத்திலேயே அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது.

திரு. பத்மநாபா பிரேதத்தின் மீது மலர் மாலை வைத்து இறுதி அஞ்சலி செய்தபோது அவரது வீரத் திருமுகத்தைக் கண்டு கண்கலங்கினேன். உடலின் மீது மாலை வைக்கவும் கைகள் நடுங்கின.

திரு. பத்மநாபா தியாகத்தின் மீது ஆணையிட்டு ஈழத் தமிழ் போராளிகளை யான் வேண்டுவது ஒன்றுண்டு அது, ஒன்றுபடுங்கள் என்பதேயாகும். மாவீரர் பத்மநாபாவுக்கு எனது அஞ்சலி உரித்தாகுக.