எம்.எல்.தாஸ்


அவர் ஒரு உண்மை மனிதர்


எம்.எல்.தாஸ், ஆசிரியர், குமுறும் எரிமலை.

தோழர் ரஞ்சன் என எனக்கு அறிமுகமான அந்த மகத்தான் மனிதருடன் நான் பதினொரு வருடங்கள் வாழ்ந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். கடைசிப் பதினொரு வருடங்களிலும், அவர் எனக்குத் தந்தையாக, சகோதரனாக, தோழனாக, தலைவனாக இருந்தார்.

1979-ஆம் ஆண்டு வட சென்னையிலுள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலைய விடுதியில் நான் இருந்தபோதுதான் அவரைச் சந்திக்க நேர்ந்தது. இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட மலையக மக்களின் நிலைமை பற்றி எங்களிடம் உரையாட அவர் வந்திருந்தார். அவரது முன் முயற்சியோடு 1979ல் தாயகம் திரும்பிய ஈழ மாணவர் இளைஞர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினோம்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள், ஆந்திராவிலுள்ள நூற்பு ஆலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர். மொழிப்பிரச்சினை, சீதோஷ்ண நிலை காரணமாக அந்த அகதிகள் அநேகரைப் பலி கொடுத்துவிட்ட பரிதாப நிலைமையுடன் தமிழகத்திற்கு மீண்டும் வந்தனர். சென்னையில் எழிலகம் முன்னால் கவனிப்பார் யாருமின்றி இந்த அகதி மக்கள் நாட்கணக்கில் காத்துக் கிடந்தனர்.

அந்தச் சமயத்தில் சிறிலங்கா அரசால் தேடப்பட்ட நிலைமையில் தமிழகத்தில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த தோழர் ரஞ்சன் அந்த மக்கள் மீது பரிவுகாட்டி, அவர்கள் பிரச்சினையை வெளிக்கொணர்ந்து தீர்வுகாண விரைந்து செயல்பட்டார். கலெக்டர், புனர்வாழ்வு அதிகாரிகளைச் சென்று சந்தித்துப் பேசினார். இதன் பலனாக அந்த அகதிகள் தமிழ்நாட்டிலுள்ள நூற்பு ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால், மீண்டும் ஆந்திராவிலிருந்து 600 பேர் வந்து விட்டனர். இம்முறையும் தோழர் ரஞ்சன் சென்று அதிகாரிகளிடம் பேசினார். ஆனால், அதிகாரிகள் கையை விரித்து விட்டனர்.

ஆந்திராவிலிருந்து திரும்பி வந்திருந்த தமிழ் மக்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே இருந்தனர். அங்கேயே 4 பெண்களுக்கு பிரசவ வலி கண்டு குழந்தை பிறந்தது. தோழர்களிடமும் உதவி செய்வதற்குப் பணம் இருக்கவில்லை. தன்னிடமிருந்த கேமரா லென்ஸை பர்மா பஜாரில் விற்று, அந்தப் பணத்தில் உணவுப் பொருட்களும் மருந்துகளும் வாங்கி அவர்களை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார்.

பின்னர் அகதிகள் அனைவரையும் ஊர்வலமாக நடத்திச் சென்று எழிலகம் முன்னால் உட்கார்த்தி வைத்து புனர்வாழ்வு அதிகாரிகளிடம் சென்று பேசினார். அவருடன் கூடவே நானும் சென்றிருந்தேன். அதிகாரிகள் அகதிகளுக்குத் தீர்வு சொல்ல மறுத்தனர்.

வெளியே வந்த தோழர், அந்த மக்கள் அனைவரையும் எழிலகம் முன்னாலேயே இருக்கச் சொல்லி, அங்கேயே சமையலுக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் இங்குள்ள ஆதரவாளர்களின் உதவியோடு செய்து கொடுத்துக் கவனித்து வந்தார். மலையாளிகள் டீக்கடைச் சங்கமும் மற்றும் பலரும் உதவிகள் செய்தனர்.

ஒரு மாதம் கழிந்த பின், தோழர் நாபா ஒழுங்குப்படுத்திய அந்த அகதி மக்களின் விடாப்பிடியான, சாத்வீகரீதியான போராட்டத்தின் உக்கிரம் தாங்காது அதிகாரிகள் ஓர் உடன்பாட்டிற்கு வந்தனர். அதன்படி, ஆந்திராவில் வேறு ஒரு மாவட்டத்தில், குழந்தைகள் படிக்க தமிழ்ப் பாடசாலை, தமிழ் ஆசிரியர்கள், குறைந்த விலையில் அரிசி, வீடுகட்ட கடன்போன்ற வசதிகளுடன் அகதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை ரயில் ஏற்றி அனுப்புவதற்காக தோழருடன் நானும் சென்றிருந்தேன். அந்த மக்கள் கண்ணீர் மல்க, தோழரிடம் பிரியாவிடை பெற்றனர்.

இதே போலவே, ராணிப்பேட்டையிலும் எண்ணெய் தயாரிக்கும் கம்பெனி ஒன்றினால் அகதிகள் ஏமாற்றப்படுவதையறிந்து, அங்கு சென்று அகதிகள் இயக்குனருடன் விவாதித்து, அகதிகளைத் தூத்துக்குடி அனுப்பி வைத்தார். கூடலூரில் நில வெளியேற்றத் திட்டத்தை எதிர்த்து, அங்கு குடியேறிய மலையக மக்களை ஒன்று சேர்த்துப் போராட்டம் நடத்தினார்ளூ அதில் வெற்றியும் கண்டார்.

தோழர் நாபா ஓர் அபூர்வமான மனிதர். கையில் பணம் இல்லையே என்று கவலை கொள்ளமாட்டார். கஷ்டப்படுபவர்களுக்கு உதவுபதிலும், இயக்க வேலைகளைச் செய்வதிலும் சோர்வுறவே மாட்டார். ஆரம்ப காலங்களில் அவருடன் கூடவே நானும் அலைந்து திரிந்திருக்கிறேன். எங்கும் நடைப்பயணம்தான்ளூ அதிக பட்சமாக சைக்கிள்! எப்போதும் வேலை, வேலை, வேலைதான்! அந்த நேரங்களில் சாப்பாடே கிடைக்காதுளூ கிடைத்தால் எது வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்வார். பெரும்பாலும் கஞ்சிதான், அல்லது தெருவில் வாங்கும் கூடைச்சோறு.

ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் முதன் முதலாக சுமார் இருபதினாயிரம் மாணவர்கள் கொண்ட பேரணியையும் பத்மநாபா நடத்திக் காட்டினார். மாணவர் பேரணியில் கட்டுக்கடங்காத மாணவர்கள். சாலையில் வாகனப் போக்குவரத்தே ஸ்தம்பித்தது. பஸ்களின் மேலெல்லாம் மாணவர்கள் ஏறி வந்தனர்.

பேரணி இலங்கைத் தூதரகத்தை அடைந்துவிட்டது. மனுக் கொடுப்பதற்குத் தேடினால், தோழரைக் காணவில்லை. அவேரா, சாப்பிடவும் காசில்லாத நிலைமையில் மனுவை பவர் ஹவுஸ் பக்கத்தில் டைப் செய்து கொண்டு நடந்தே வந்திருக்கிறார். மாணர்கள் சார்பிலான மனுவைச் சமர்ப்பித்தபின் பசிக்களையினால் மயக்கமானார். ஆசிரியர் அரணமுறுவல் போன்றோர்களின் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தோம்.

இதே போலவே டெல்லியிலும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான ஒரு பேரணியை தோழர் நாபா நடத்தினார். டெல்லியில், இலங்கையிலிருந்து வந்த வியாபாரிகளிடம் பண வசூல் செய்து, தமிழ்நாடு இல்லத்திலிருந்து இலங்கைத் தூதுவராலயம் வரையான, ஊர்வலத்தை தோழர் பத்மநாபா முன்னின்று நடத்தினார். கரோல் பார்க்கில் பொதுக்கூட்டம் அதில் அப்போது கோபால்சாமி, அன்பரசு போன்றவர்கள் பேசினார்கள்.

இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் தனியாக இருக்கக்கூடாது எனவும், ஏதாவது அமைப்புடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்றும் புத்திமதி கூறினார். பின் அவர்கள் அமைப்பில் இணைந்து பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்தினர். அதில் தோழருடன் நானும் பங்கு கொண்டேன். ஊர்வத்தின் முடிவில், போலீசார் அதில் வந்த மக்களைத் தாக்கினர். பெரும் பாலோனோர் காயப்பட்டு, பெரியார் திடலுக்கு முன் உள்ள தூய ஆந்திரேயர் கோயில் மைதானத்தில் கிடந்தனர். அந்தப் பாமர மக்கள் யாராலும் கவனிக்கப் படவில்லை. தோழர் பத்மநாபாதான் மார்னிங் ஸ்டார் பள்ளி ஆசிரியரிடம் கடன் வாங்கி, மிளகு சாதம் செய்து பார்சல்களாக ரிக்ஷாவில் எடுத்துச் சென்று அந்த மக்களுக்குக் கொடுத்தார். அவர்களை ஊருக்கு அனுப்பும்வரைகூட இருந்தே கவனித்துக் கொண்டார்.

இதன்பின் இலங்கை சென்ற பத்மநாபா அங்கு செங்கோடன் என்ற பெயருடன் மலையகத்தக்குச் சென்று, அங்கு தனது இயக்க வேலைகளை ஆழப்படுத்தினார். மலையகப் பாட்டாளி மக்களையும் இணைத்துக்கொள்ளாமல் ஈழவிடுதலைப் போராட்டம் இருக்க முடியாது என்றும், போர்க்குணம் மிக்க அந்த மக்களே போராட்டத்தின் தலைமைப் பாத்திரத்தை வகிக்கக் கூடியவர்கள் என்பதிலும் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தார். அங்குள்ள புத்தி ஜீவிகளை ஒருங்கு சேர்த்துக் கொண்டு பேராதனை பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு ஒன்றையும் நடத்தினார்.

பின்னர், மலையக கூலித் தொழிலாளர்களிடையே பெருந்தோட்ட பாட்டாளிகள் முன்னணியை ஆரம்பித்து அவர்களை அணி திரட்டினார். இதை ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் வெகுஜன அமைப்புகளில் ஒன்றாக இணைத்தார். இங்கு சென்னையிலும் மலையக மக்கள் உரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
ஈழப் போராட்ட அரங்கில் இருந்த அனைத்து இயக்கங்களையும் ஒற்றுமைப் படுத்துவதில் முழுமூச்சாய் ஈடுபட்டார். அவரது முன் முயற்சியில் உருவான ஈழ தேசிய விடுதலை முன்னணிக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே இந்திய அரசு, விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தையும் மற்றும் இருவரையம் நாடு கடத்துவதாக வெளியிட்ட செய்தி வந்தது. பாலசிங்கம் காரில் புறப்படும்போது மடக்குவதற்காக கூட்டம் நடந்து கொண்டிருந்த மண்டபத்தைச் சுற்றி போலீசார் காத்து நின்றனர்.

ஆனால், தோழர் நாபா தனது காரிலே பாலசிங்கத்தை ஏற்றிக்கொண்டு பெசன்ட் நகர் வந்து, காரை பாலசிங்கத்திடமே கொடுத்துவிட்டு, நடந்தே நான் வேலை செய்யும் அடையாறு டிப்போவுக்கு வந்து, என்னுடன் பேசிவிட்டு பஸ்ஸில் ஏறி கோடம்பாக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப். அலுவலகம் போய்ச் சேர்ந்தார்.

1987 மே மாதத்தில் எல்.டி.டி.ஈ.யினர், 57 ஈ,பி.ஆர்.எல்.எப். தோழர்களை யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டிற்குள் வைத்துச் சுட்டுக்கொன்றபோது, ஆவேசமற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்களை அமைதிப்படுத்தினார். ஒரு தலைவரைக் கொல்வதாலோ, பதிலுக்குக் கொலைகள் செய்வதாலோ பிரச்சினை தீர்ந்து விடாது. நீங்கள் அப்படி ஏதும் செய்வதாயிருந்தால் என்னைச் சுட்டு விட்டு மற்றவர்களைச் சுடுங்கள் என்று கண்டிப்புடன் கூறியபிறகு, தோழர்கள் மௌனமாகிப் போனார்கள்.

தோழர் நாபா மக்களையே நேசித்தார்ளூ மக்களுக்காகவே வாழ்ந்து மடிந்தார்.
ஜனநாயகத்தைக் காப்பாற்ற பல்வேறு தியாகங்களைச் செய்தவர், இறுதியில் இந்தப் பெருமைமிகு ஜனநாயக நாட்டிலே அவர் பலியெடுக்கப்பட்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு செயற்பட்டு வந்த அந்த ஒப்பற்ற மனிதரை, அரசியல் ரீதியாக எதிர்க்கத் திராணியற்றவர்கள் பேடித்தனமாக, துரோகத்தனமாகக் கொன்று விட்டனர்.

அவர் போன்ற ஒரு மனித நேயம் மிக்க தலைவருடன் தொடர்ந்து வாழும் பாக்கியத்தை இழக்க நேரிட்டது தாங்கிக் கொள்ள முடியாத துரதிஷ்டம்தான்.

ஆனாலும் அவர் நேசித்த மக்கள் மனங்களில் வாழ்கிறார்! அவர் என்றும் வாழ்வார்!