கே.எஸ். ராஜு


ஈழ விடுதலை இயக்க வரலாற்றில் பத்மநாபா


கே.எஸ். ராஜு, ஆசிரியர் , மக்கள் மறுவாழ்வு

ரஞ்சன்

1980லிருந்து 84 வரை இந்த பெயர் தமிழகத்தில் பொதுவாழ்வு அரசியல் வாழ்வில் ஈடுபட்டிருந்த பல இளைஞர்களின் நெஞ்சங்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இந்தப் பெயரில் அன்பொழுக அழைக்கப்பட்டு வந்த அவர் வெகுவேகமாக பலரை ஈர்த்து வந்தார்.

1981க்குப் பின் ஈழ மண்ணில் - ஈழ விடுதலை போராட்டத்தில் லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஈழ மாணவர் பொதுமன்றம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியாக உருவெடுத்தது. அப்போதுதான் ரஞ்சன் என்று அழைக்கப்பட்டு வந்த இளைஞர், அந்த இயக்கத்தின் செயலாளர் நாயகம் பத்மநாபாவாக வெளியுலகுக்கு வந்தார்.

80-ம் ஆண்டில்தான் நான் இவரை சந்தித்தேன். அந்த ஆண்டு நான் தொழில் நிமித்தமாக சென்னை வந்தபோது தாயகம் திரும்பிய ஈழ மாணவர் இளைஞர் மன்றம் என்ற பெயரில் ஓர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இது இவரது முயற்சியில் அமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

அண்ணாசாலையிலுள்ள தேவநேய பாவணர் நூலக மண்டபத்தில் நடந்த அதன் ஆரம்பக்கூட்டத்திற்கு சென்றபோது எனக்கு சிறப்புச் சொற்பொழிவாளராக பேசும் வாய்ப்பை அங்கு வந்திருந்த நண்பர்கள் சுமத்தினர்.

அப்போதுதான் - நெட்டை நெடிய, மெலிந்த உருவம், அடர்ந்த தாடியும், அமைதியும் ஆழ்ந்த சிந்தனையுடைய முகமுமாக புகைப்பட கருவியும் கையுமாக அந்த கூட்ட நிகழ்ச்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ரஞ்சனாக அறிமகமாகிய பத்மநாபாவின் நட்பு எனக்கு கிடைத்தது. அவரோடு இணைந்து சுமார் நான்கைந்து ஆண்டுகள் அவர்களது இலட்சியத்தில் பங்கு கொண்டு பணிசெய்து வந்தேன். அவரோடு இருந்த காலம் மறக்க முடியாதது.

எண்பதாம் ஆண்டுதான் ஈழவிடுதலை இயக்கங்கள் தமிழகத்தை தமது போராட்டத்தின் பின்புலமாக அமைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கிய காலம்.

பாண்டிபசாரில் உமா மகேஷ்வரனுக்கும் (முகுந்தன்) பிரகாகரனுக்கும் இடையில் துப்பாக்கி சூடு நடந்துபோதுதான், இப்படி ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்டக் குழுக்கள் தமிழகத்தில் வந்து இருக்கிறாரகள் என்பது தெரியவந்தது.

அப்போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இயக்கமும் ஈழ மாணவர் பொது மன்றமாக செயல்பட ஆரம்பித்தது. இந்த காலகட்டத்தில்தான் தமிழக மக்களின் பிரச்னைகள் குறித்தும், சிங்கள பேரினவாதத்தின் முன்னால் இம்மக்கள் படும் அடக்குமுறைகள் குறித்தும் இந்த அடக்குமுறையிலிருந்து தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டியதின் கட்டாயம் குறித்தும், கூட்டங்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்தத் தொடங்கியதோடு, துண்டுப் பிரசுரங்களும் சுவரொட்டிகளும் பத்திரிகைகளும் அச்சிடப்பட்டன.

ஈழ மாணவர் பொதுமன்றம், ஈழ மக்கள் தகவல் மையத்தை ஆரம்பித்து ஈழச் செய்தி என்னும் செய்திக்கடிதமொன்றை வெளியிடத் தொடங்கியது. மையத்தின் இயக்குனராகவும், இதழின் ஆசிரியராகவும் இருந்து ஈழ விடுதலையில் எனது தார்மீக ஆதரவை வழங்கி வந்தேன்.

ஈழச் செய்தியை ஆரம்பித்தபோது அதன் முதலிதழையும், தொடர்ந்து பல இதழ்களையுயும் வெளியிட்டு வந்தபோது மிகுந்த ஆர்வத்தோடும், இலட்சிய நோக்கோடும் செயல்பட்டது நினைவில் இருந்து அகலாது.

ஒவ்வொரு இதழையும் வெளிக்கொணரும்போது பத்மநாபாவும் பேரின்பராஜா என்ற மற்றொரு தோழரும் நானும் விடிய விடிய அமர்ந்து ஒவ்வொரு செய்தியையும் எடுத்து அலசி, வரிக்கு வரி பார்த்து எழுதுவோம்.

இந்த இதழை வெளியிடக் கூட அப்போது பணவசதியில்லை. என்றாலும் எப்படியோ பணம் திரட்டி வெளியிட்டு வந்தோம். பத்மநாபா இதை வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி செயல்பட்டதையும் செயல் பட்ட விதத்தையும் மறக்க முடியாது.

அப்போது இயக்கத்தை நடத்த பணவசதியே இல்லை. அவ்வப்போது - இல்லை - எப்போதாவது லண்டனிலுள்ள தோழர்கள் பணம் அனுப்பி வைப்பார்கள், அல்லது இங்கே ஆதரவாளர்கள் உதவுவார்கள். பெரும்பாலான நாட்கள் கஷ்டங்கள்.

ஒருவேளை சாப்பாடு. சமையல் செய்யும்போது எப்போது சோற்றை வடிப்போம் என்றிருப்போம். கஞ்சி குடிப்பதற்காக சில நாட்கள் பட்டினியும் இருப்பதுண்டு. ஈழ விடுதலை குறித்த சுவரொட்டிகள் ஒட்டியபின் மிஞ்சி இருந்த மாப்பசையில் சர்க்கரையிட்டு கலக்கிக் குடித்த பல சம்பவங்கள்...

ஆனாலும் யாரிடமும் சோர்வு இருந்ததில்லை. கவலை கொள்வதில்லை. காரணம் ஈழவிடுதலையில் இருந்த வேட்கை.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மற்றவர்கள் துன்பத்தில் பங்கு கொள்ள வேண்டுமென்ற எண்ணம் - ஆர்வம் பத்மநாபாவிடம் இருந்தது. அதை செயலிலும் காட்டினார்.

அந்த நாளில் பத்மநாபாவின் பணிகள் மறக்க முடியாதவை. இப்படியொரு இளைஞரா என்று எண்ணத் தூண்டும். பணவசதியில்லாவிட்டாலும் கடனுக்கு மாதக் கணக்கில் கணக்கேறும், சைக்கிள் வாடகை.

தான் சாப்பிடாவிட்டாலும் உறங்காவிட்டாலும் உடல் நலக்குறைவுக்கு மருத்துவம் செய்து கொள்ளாவிட்டாலும் சக தோழர்கள் சாப்பிட்டார்களா? உறங்கினார்களா? உடல் நலத்துக்கு ஏதும் இல்லையே என்பதில் இவரது கவனம் குறைவதில்லை.

பேச்சில் நிதானம். செயலில் நிதானம். சாந்தம் மிகுந்த இவரது முகபாவத்தில் கோபம் இருக்கிறதா? அல்லது துயரம் நிழல் ஆடுகிறதா என்பதைப் புரிந்துகொள்ள முடியாது.

படாடோபமில்லாத மிக எளிமையும் அடக்கமும் வாய்ந்தவர். தரம் பார்த்து தகுதி பார்த்து பழகாத இவர் எல்லோரையும் அரவணைத்து - சரிசெய்து கொண்டு போவதில் ஒரு இயக்கத்திற்கு பொருத்தமான தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

உண்ணாது, உறங்காது இருபத்து நான்கு மணி நேரமும் இயக்கப்பணிகளில் ஈடுபடுவார்.

இவரோடு பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஈழவிடுதலை லட்சியத்தைப் பரப்ப, அதற்கு ஆதரவாளர்களைத் திரட்ட, இயக்கப்பணிகளுக்கு நிதி திரட்ட, இயக்க விடுதலைப் போராளிகளுக்கு தங்கி இருக்கவும் பயிற்சி அளிக்கவும் கூட தகுதியான இடங்கள் தேடியும் அவருடன் சென்றிருக்கிறேன்.

நீலகிரி, சிறுமலை, பன்றிமலை முதலான பல்வேறு மலைகளில் ஏறி இறங்கி இருக்கிறேன். மணிக்கணக்கில் மலைகளில் ஏறியிருக்கிறோம். தாகத்தைத் தீர்க்க நீர் இல்லாத நிலையில் வரண்டு, காய்ந்த மலைக்காடுகளில் ஏறிய நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அப்போதுமட்டுமல்ல, எப்போதுமே இவர் சோர்வடைந்து நான் கண்டதில்லை. ஆர்வத்தோடு தன் நோக்கங்கள் லட்சியங்கள் மீதே குறியாக இருப்பார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஒரு பேரியக்கமாக வளர்ந்து ஈழப் பிரதேசத்தில் ஒரு மாகாணசபை அரசை அமைக்கிற அளவிற்கு உயர்ந்தது என்றால் அது பத்மநாபாவின் தலைமை என்றே கூற வேண்டும்.

தனது சொந்த வாழ்க்கையில் கவனத்தை திருப்பாத பத்மநாபா காதல் வாழ்விலும் அப்படித்தான் இருந்தார். சுமார் ஒன்பது ஆண்டுகள் காத்திருந்த இவரது காதல் திருமணமும் நடந்தது.

சார்டர்ட் அக்கவுன்ஸில் தேர்ச்சி பெற்றிருந்த பத்மநாபா ஈழவிடுதலைக்காக லண்டனில் செய்த அப்பணியைத் துறந்து பெனானில் பயிற்சி பெற்றார்.

ஈரோஸ் இயக்கத்திலிருந்து பிரிந்த, ஈழ மாணவர் பொது மன்றத்தை தனது ஆதரவாளர்களோடு விரிவுபடுத்திச் செயற்பட்டு பின்னர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாக விளங்கிய பத்மநாபா, தொடர்ந்து இயக்கங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வந்ததோடு அது மாதிரியான சகோதர யுத்தத்தை எதிர்த்தும் வந்தார்.

அனைத்து இயக்கங்களையும் ஒன்று சேர்ப்பதிலும், ஈழ தேசிய விடுதலை முன்னணி உருவாக்குவதிலும் இவரே காரணகர்த்தாவாக இருந்தார். சகோதர யுத்தத்தை எதிர்த்ததோடு மாத்திரமல்ல, சக இயக்கப் போராளிகளிடம் அன்புடன் பழகினார். மற்றைய இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு அடைக்கலமும், புகலிடமும் வழங்கியிருக்கிறார். அதிலும் இவரது முகாமில் இருந்துகொண்டே தமது தலைவர்களின் செயல்களுக்கு நியாயம் கற்பித்து புகழ்பாடும் பிற போராளிகளைக் கூட வேற்றுமையோடு பார்க்காத பக்குவம் பத்மநாபாவிடம் இருந்ததைக் கண்டு வியந்திருக்கிறேன்.

ஆயினும் பிற போராளி இயக்கங்களால் இவரது உயிருக்கு குறிவைக்கப்பட்டிருந்தது. 1982ல் யாழ்நகரில், ஓர் அச்சகத்தில் சுந்தரம் என்னும் போராளி சுட்டுக் கொல்லப்பட்டார். இதை எதிர்த்து பத்மநாபாவும், வாத்தி என்பவரும் சேர்ந்து துண்டுப் பிரசுரம் ஒன்றை அச்சிட்டனர். அச்சடிடப்பட்ட துண்டுப் பிரசுரம் அச்சகத்தில் இருந்து வெளியே வரவில்லை.

எப்படியோ சுந்தரத்தைக் கொன்ற அந்த சக போராளி இயக்கம் இதைத் தெரிந்து கொண்டு இவர்களை மிரட்டத் தொடங்கினர். துப்பாக்கியேந்திய சிலர் பத்மநாபாவின் இருப்பிடத்திற்கு - இயக்க அலுவலகத்திற்கே வந்து தேடி மிரட்டிவிட்டு போயினர். அந்த சம்பவத்தைப் பார்த்த பத்மநாபாவை ஆதரித்த உள்ளுர் இளைஞர் ஒருவருக்கு சித்தப் பிரமையே ஏற்பட்டதை குறிப்பிட வேண்டும்.

தொன்றுதொட்டே பத்மநாபாவை மரணம் துரத்தியது. எந்த வேளையிலும் இவரது உயிருக்கு குறிவைக்கப்பட்டது. இதைக்கண்டு இவர் அச்சப்படவே இல்லை. இதை ஒரு பொருட்டாகவே லட்சியமே செய்யாது தனக்கு எந்த பாதுகாப்பும் வைத்துக்கொள்ளாது செயல்பட்டார்.

சுட்டுக் கொல்லப்பட்ட பத்மநாபாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதவொன்று. முப்பத்தொன்பது வயது நிரம்பிய பத்மநாபா ஈழவிடுதலை இயக்க வரலாற்றில் ஒரு சகாப்தம் என்றே சொல்ல வேண்டும். இது கூழுக்கு கவிபாடும் வார்த்தைகளல்ல.