அல்ஹாஜ் எஸ்.இஸட்.எம். மசூர் மௌலானா


தம்மை முதன்மைப்படுத்தாது பலரும் பின்பற்ற வாழ்ந்தவர்


அல்ஹாஜ் எஸ்.இஸட்.எம். மசூர் மௌலானா ஜே.பி.

அன்றொரு நாள் புதுடில்லிக்கு நான் சென்றிருந்தேன், அழைக்கப்பட்டிருந்தேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் புதுடில்லிக்கு வரும்படி என்னை அழைத்திருந்தார். சென்னையில் அவரையும், இன்னும் பல அரசியல் பிரமுகர்களையும் நேரில் கண்டு, அன்று எமது நாட்டில் நிலவிய அரசியல் அமைதியின்மை குறித்து பேசியதனைத் தொடர்ந்து, டெல்லியில் அவ்வேளையில் தங்கியிருந்த தமிழ்ப் போராளிகள் தலைவர்களை ஒருமித்து சந்திக்கக் கூடிய வாய்ப்பினை அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் எனக்கு ஆக்கித் தந்தார்.

பிளட் இயக்கச் செயலதிபர் காலஞ்சென்ற உமாமகேஸ்வரனை சென்னையிலேயே கண்டு கதைத்து விட்டபடியால் அவரைத் தவிர புதுடில்லியிலுள்ள ஒரு ஹோட்டலில் மற்றயை தலைவர்களைக் கண்டேன்ளூ பேசினேன். தோழர்கள் பத்மநாபா, பாலகுமார், பிரபாகரன். சபாரத்தினம் ஆகியோரே அத்தலைவர்களாவர்.

அதில் ஆஜானுபாகுவான ஓர் உருவம்-ஓரளவு பருத்து, உயர்ந்து தாடி மீசையுடனும் காணப்பட்டார் ஒருவர். அவர்தான் முதலில் வாசல் வரை வந்து, ஐயா, வாருங்கள் என்று புன்முறுவலுடன் அழைத்துச் சென்று மற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் தான் என்றும் என் நினைவை விட்டகலாத இனிய நண்பர, அருமைத் தோழர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலதிபர், காலஞ்சென்ற கொலை செய்யப்பட்ட பத்மநாபாவாகும்.

பார்ப்பதற்கு கரடமுரடான தோற்றமுடையவராக இருந்தபோதும், அவரது கண்ணியம் நிறைந்த உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து அவர் வெளிக் கொணர்ந்த புன்முறுவல் உடனே என்னைக் கவர்ந்து விட்டது.

நாபா அவர்கள் என்னை மற்றைய தலைவர்களுக்கு அறிமுகம் செய்தபோது, ஒவ்வொருவரும் தமக்கு ஏற்கனவே தான் தெரிந்தவர் என்பதைக் கூறிக் கொண்டனர். எனினும் என்னை உபசரிப்பதில் மட்டும் தோழர் பத்மநாபா முந்திக் கொண்டார்ளூ அதிக அக்கறையும் காட்டினார்.

பேச்சு வார்த்தைகளில் அவர் அதிகம் பங்கு பெறவில்லைளூ அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலயங்கள் நாங்கள் கலந்துரையாடினோம். ஆனால் தோழர் நாபா இரண்டு வசனங்கள் தான் பேசியிருப்பார். ஆனால் எந்த நேரமும் சிரித்த முகத்தோடு பேசிய அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நான் எடுத்துக் கூறிய சில கருத்துக்களை தாம் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக, தனது தலையை உரிய முறையில் அசைத்து ஆம் ஏற்றுக்கொண்டேன் என்று கூறி அங்கீகரிப்பதை நான் கண்ணுற்றேன்.

பேச்சு வார்த்தை முடிந்து விட்டது. எல்லோரும் சேர்ந்து என்னை வழியனுப்பினார்கள். அவ்விடத்திலேயே எழுந்து நின்று வணக்கம் கூறினார்கள். ஆனால் தோழர் பத்மநாபா மட்டும் என்னோடுகூட மேல்மாடியில் இருந்து இறங்கிவந்து எனது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடம் வரைக்கும் என்னோடு நடந்து வந்தார். அவ்வேளையில் தான் அவரது மனதைத் திறந்து சரளமாக மனம் விட்டு என்னோடு பேசினார்.

அவர் என்னிடத்தில் கூறிய கருத்துக்களில் ஆழ்ந்த தன்மையினையும், தூரப்பார்வையினையும் நான் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. நான் எனது வாகனத்தில் ஏறி அவரது பார்வையில் இருந்து மறையும் வரை, அந்த இடத்தைவிட்டு அசையாமல் நின்று கையசைத்து வழியனுப்பிய காட்சி இன்னும்கூட என் கண்களுக்குள்ளேயே இருக்கிறது.

இதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளுக்குப் பின்னர் வடகிழக்கு மாகாண சபை உறுப்பினராக, நான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகாப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டு, சபையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு, மாகாண சபையில் எனது கன்னிப் பேச்சினை நிகழ்த்திவிட்டு, தேனீர் இடைவேளைக்காக சபை ஒத்தி வைக்கப்பட்;ட அந்த நேரத்தில்தான் இனிய நண்பர் தோழர் பத்மநாபாவை மறுபடியும் சந்திக்கக் கூடியதாக இருந்தது.

பார்வையாளர்கள் காலரியில் சக நிகழ்ச்சிகளையும், முக்கியமாக எனது பேச்சினையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, நான் வெளியில் வந்ததும் இரு கரங்களையும் பிடித்துக்கொண்டு, இச்சபையில் ஒரு பெரும் இடைவெளியை நிரப்பி விட்டீர்கள். நீண்டநாட்களாக தமிழ் பேசும் மக்களுக்காக பெரும் தலைவர்களோடு சேர்ந்து செயற்பட்டு வந்த உங்களது பேச்சினை, நீண்ட காலத்திற்குப் பின்னர் இன்று கேட்கக் கூடியதாக இருந்தது. சபை இன்று புது மெருகு பெற்றுள்ளது. பல வருட அரசியல் அனுபவம் உள்ள நீங்கள் சபையின் நடவடிக்கைகளுக்கு நல்ல உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். வட கிழக்கு மாகாண சபைக்கு உங்களின் வருகை எமக்கு மிக்க உற்சாகத்தையும், மன மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. நீங்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை, வடகிழக்கு மாகாண மக்களது தலைநிமிர்ந்த கௌரவமான வாழ்க்கைக்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், என்று கூறி கைகளை ஒன்று சேர்த்து குலுக்கி என்னைத் தட்டிக்கொடுத்த அந்தக் கட்சியை உறுப்பினர்கள் பலரும் சுற்றி நின்று கவனித்தனர்.

போராளிக்குரிய அந்த உடை, நிறைவான தாடி, உயர்ந்த உருவம், சிரித்த முகம், ஒரு பெரும் போராளிக் குழுவின் மாபெரும் தலைவர் பத்மநாபாவின் அவ்வேளையச் செயல் என்னை மிகவும் மகிழ்வித்தது மட்டுமல்லாது, எனக்கு ஒரு பெரும் தெம்பையும், துணிவையும் ஏற்படுத்தி விட்டது. பார்வையாளர் காலரி எனது இருக்கைக்கு பின்பக்கமாக அமைந்திருந்ததால் தோழர் செயலதிபர் பத்மநாபா இருந்ததை நான் கவனிக்கவில்லை. கண்டிருப்பேனானால் எனது பேச்சில் சில நிமிடங்களேனும் அவரைப் பற்றி பேசி எனது பேச்சுக்கே மெருகூட்டியிருப்பேன். இந்தக் குறைப்பாட்டை அந்த இடத்திலேயே தோழர் நாபாவிடம் கூறினேன்.

மாகாண சபையில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்ற போதெல்லாம் தோழர் நாபா வெறும் பார்வையாளராக தவறாமல் கலந்துகொண்டார்.

இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் எனது ஞாபகத்திற்கு வருகிறது. மாகாண சபையின் ஓராண்டு பூர்த்தி விழா, மற்றது மாகாண சபையின் கொடியேற்று விழா.

இரண்டு நிகழ்ச்சிகளையும் மாகாண சபையின் தலைவர் மரியாதைக்குரிய பொன்ராம் ராஜகாரியர் தமக்கே உரித்தான பக்குவமாக, சிறப்பம்சம் பொதிந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளாக ஏற்பாடு செய்திருந்தார். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் எதிர் கட்சியின் சார்பில் நான் மட்டுமே கலந்து கொண்டேன் என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பிரமுகர்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஆசனமொன்றில் நாபா அவர்கள் அமைதியாக இருந்தார். இரு நிகழ்ச்சிகளிலும் நான் பேசக்கூடிய வாய்ப்பினை முதலமைச்சராக இருந்த மரியாதைக்குரிய வரதராசப் பெருமாள் அவர்களும், சபைத் தலைவர் மரியாதைக்குரிய பொன் ராம் ராஜகாரியர் அவர்களும் ஏற்பாடு செய்து தந்தார்கள். அவ்விரு சந்தர்ப்பங்களிலும் எனது பேச்சின் இடையில் செயலதிபர் தோழர் பத்மநாபாவை நானறிந்த அவர் மாண்பினைச் சிறப்பாக குறிப்பிட்டுப் பேச நான் தவறவில்லை.

இதைத் தவிர இன்னும் பல விருந்துபசாரங்களில் நான் அவரோடு சேர்ந்து பங்கு பற்றினேன்.

உண்மையிலேயே ஒரு பெரும் விடுதலை இயக்கத் தலைவருக்குரிய பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் அவரிடம் நிரம்பக் காணக் கூடியதாக இருந்தது. தமது பதவியை, அவரது இயக்கத்தில் அவருக்கு இருந்த இடத்தை அவருக்கிருந்த அதிகாரத்தை எத்தன்மையிலும் வெளிப்படுத்தாமல், பகட்டில்லாமல், ஓர் ஒதுக்குப் புறமாக நின்று கொண்டு அவரைத் தேடி யாராவது வந்து சேர்ந்தால் பேச விரும்பினால் அதைச் செய்தாரே தவிர, அவராகவே தம்மை முன் தள்ளிக் கொள்வதை நான் காணவே இல்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக தம்மைப் பின் பற்றுகின்ற தோழர்கட்கு, முன் மாதிரியாக விருந்துபசாரத்தில் அவர் நடந்து கொண்டதை நான் அவதானித்தேன். வெறும் குளிர்பானம் மட்டும்தான் அவரது கையில் இருந்தது. அடக்கம் மிகுந்த அவர் நடவடிக்கைகளை அவதானிக்கும் போதெல்லாம் அதுவல்லவா உயர்ந்த தலைமைத்துவம் என்று என்னிடத்திலேயே நான் சத்தமின்றி பேசிக் கொள்வேன்.
வடகிழக்கு மாகாண ஆட்சிப் பொறுப்பை பெருமளவு தமது கட்சிக்கே பெற்று, தாமே முதலமைச்சராக வரும் வாய்ப்பிருந்த போதும், அதைக் கொண்டு நடத்துவதற்கு தகுதி வாய்ந்த, தகைமையுள்ள ஆற்றல் படைத்த அரசியல் தெரிந்த ஒருவரை முதலமைச்சராக ஆக்கி எந்தவிதத் தலையீடும் இன்றி செயல்பட அவருக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து, பின்னாலிருந்து சகல நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனித்துச் செயற் படுத்திக் கொண்டிருந்தார், கொலை செய்யப்பட்ட இனிய நண்பர் தோழர் பத்மநாபா என்பதே எனது கருத்தாகும்.

பல தமிழ்ப் போராட்ட விடுதலை அமைப்புக்கள் எமது பிரதேசத்தில் செயற்பட்டு வந்தபோதிலும், எனது சொந்தக் கிராமமாகிய மருதமுனையில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு அங்கத்துவம் பெற்ற ஒரு கட்சிதான் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. தோழர் பத்மநாபாவோடு கொலை செய்யப்பட்ட எனது உறவினர் மிகிலார்(கமலன்) அக்கட்சியில் பெற்றிருந்த முக்கிய இடம் அதனை நிரூபிக்கிறது. இவரையும் இவரோடு சேர்ந்தவர்களையும் அக்கட்சியின் பக்கம் இழுத்தது தோழர் பத்மநாபாவின் அணுகுமுறை என்றே கூற வேண்டும்.

வடகிழக்கு மாகாண சபை செயற்பட்ட காலத்திலும், முஸ்லீம் மக்களை எந்தெந்த வகையில் திருப்திப்படுத்தலாமோ அந்தந்த வகையில் செயற்பட தூண்டுகோலாக தோழர் பத்மநாபாவும், அந்த அடிப்படையில் செயற்பட்டவர்களாகிய இனிய நண்பர்களான முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், அவரோடு சேர்ந்த அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் உத்வேகத்துடன் பாடுபட்டனர்.

முழுமையான பெறுபேற்றை, மாகாணசபையின் தொடர்ந்த நடவடிக்கைகள் மூலம் நிறைவான பயன்பெறுவதற்கு முன்னர் சபை கலைக்கப்பட்டு விட்டது. தோழர் பத்மநாபா கொலை செய்யப்பட்டு விட்டார். அவர் நாமம்- அவர் உருவம் எம் மனதில் கொலை செய்யப்பட முடியா இடத்தைப் பெற்று விட்டது.