மு.க. அபுயூசுப்


ஒரு யுக நாயகன்


மு.க. அபுயூசுப்
முன்னாள் கைத்தொழில், போக்குவரத்து அமைச்சர்
வடக்கு கிழக்கு மாகாண அரசு


21ம் நூற்றாண்டின் முன் முற்றத்திலே நின்று கொண்டிருக்கும் மானுடம்,
இது காலவரையிலான அதனது சமூகப் பொருளாதார வளர்ச்சியின்
பலாபலன்களின், அதியுயர்ந்த விஞ்ஞான தொழில் நுட்ப
பெறுபேறுகளால் கூட, தோழர் பத்மநாபா என்று எங்கள் மத்தியில்
வாழ்ந்த ஒரு மானுட மகா புருஷனைப்
பாதுகாக்க முடியாத அளவிற்கு ஏழ்மையானது
எனக் கூறினால் மிகையாகாது.
மனித வரலாற்றின் நாகரிக வளர்ச்சி, காட்டுமிராண்டித்தனத்தைப்
பூரணமாக தோற்கடிக்க முடியாத அளவிற்கு இன்னமும்
பலஹீனமானது என்று கூறுவதற்கு தோழர் பத்மநாபாவின் மரணமே
ஒரு மிகச்சிறந்த சாட்சியாகும்.
தோழர் பத்மநாபா இன்றைய மனித வரலாறு படைத்த மகா புருஷன்
என்பதை அவரைப் பரிச்சியமான யாருமே மறுக்க முடியாது.
கால வெள்ளம் அள்ளி வரும் செல்வங்களை முழு மானுடமும்
நுகருமேயானால் மானுடத்திற்கு அழிவில்லை என்பது
வரலாற்றின் நியதியாகும். ஆனால் அழிவுகளை உத்தரவாதப்படுத்தும்
அசிங்கங்களும் கால வெள்ளத்தின் விதிகள்
என்பதும் மறுக்க முடியாது என்பதற்கு பாசிசம் அழித்த
தோழர் பத்மநாபாவின் வாழ்வின் முடிவும் ஒரு சாட்சியாகும்.
நாங்கள் தோழர் பத்மநாபாவுடன் வாழ்ந்தோம் என்பதே
எமது யுகத்தின் எமது பேறு என நாம் பெருமைப்படக் கூடிய அளவிற்கு
மனித நேயத்தின் பூரண வடிவமாக தோழர் பத்மநாபா வாழ்ந்தார்.
அல்லல் படும் அனைத்து மக்களின் விடிவிற்காக
ஜனநாயக சமதர்ம ஈழம் என்ற துவஜத்தின் கீழ் தன்னலமற்ற
தியாகங்களுக்கு தங்களை இன்று அர்ப்பணித்திருக்கும் சகல
தோழர்களின் இறுக்கமானதும் புரட்சிகரமானதுமான உறுதிக்கு
தோழர் பத்மநாபாவின் நிகழ்ச்சிகள் நிறைந்த வாழ்க்கையே
சிறந்த உயிர் வடிவம் என்னும் அளவிற்கு தோழர் பத்மநாபா
எம் எல்ரோரிலும் தனது சத்திய முத்திரையை
நித்தியமாகப் பதித்து வாழ்ந்து மறைந்திருக்கின்றார்.
மரணங்கள் மரணிக்கப்படுகின்ற அளவிற்கு அமரத்துவம் வாய்ந்தது
ஒரு சிங்களக் கவிஞன்.
தோழர் பத்மநாபாவை கொலை செய்தவர்கள் எந்த
காட்டுமிராண்டித்தனத்தின் எப்பேற்பட்ட குரூரத்தை அந்தக் கொலையின்
மூலம் அடையாளம் காட்டினார்களோ, அந்த குரூரமான
காட்டுமிராண்டித்தனத்தின் அப்பட்டமானதும் கடைந்தெடுத்ததுமான
பாசிச அசிங்கத்தை முற்று முழுமையாக மனித சஞ்சாரத்தில்
நின்றும் அழித்தொழிக்கும் மகத்தான உயிர்ப்பை இந்த மரணம்
அமரத்துவம் பெற வைக்கின்றது என்பதை
மரணிக்க வைத்தவர்கள் உணர மாட்டார்கள்.
தோழர் பத்மநாபா போராட்டத்தின் விளைவாகத் தோன்றி
போராட்டமாகவே மாறிய தன்னிகரில்லா போராளி.
அவர் இன்றைய சமதர்மம், முதலாளித்தவத்தின் மேல்
உலகளாவிய ரீதியில் தொடுத்திருக்கும் ஜனநாயகபூர்வமான
தாக்குதல்களைப் பூரணமாகப் புரிந்து கொண்டு பொதுவுடமையின்
முழுமையான எதிர்கால வெற்றியை இன்றைய நிகழ்வுகளில்
இனம் கண்டுகொண்ட தெளிவான மார்க்சிய லெனினனிஸ்ட்
கொஞ்சமாய்ப் பேசி நிறைய சாதித்த விற்பன்னன்.
ஈழப் போராட்டத்தினை அதன் முதலாளிய தேசிய இனவாத
சக்தியில் இருந்தும் பிரித்தெடுத்து, விஞ்ஞானபூர்வமாக முழு உலகிலும்
சமதர்மத்தினை அமைக்கும் போராட்டத்துடன் இணைத்து வைப்பதற்காக
எமது யுக சந்தியில் நிமிர்ந்து நின்று வழி நடத்திய யாத்திரீகன்.
தோழர் ஆனந்தியை கைப்பிடித்து, வரட்டுப் பிரமச்சாரியத்தை
ஏய்த்து விரட்டி, போராட்டப் பசுமைக்கு உரமூட்டிய
புதிய குருகுலத்தின் நவயுகத் தென்றல்.
பொங்கு நுரை போன்ற சிரிப்பால், உணர்வைப் பூரிக்க வைக்கும் அன்பால்,
களைப்பில்லாமல் உழைக்கத் தூண்டும் ஒத்துழைப்பால் எத்தனை இடர்
வந்தாலும் இன்னல் பல பெருகி வந்தாலும் அவை
அனைத்தும் தரும் சகாப்தத்தின் சவால்களை நேருக்கு நேர் சந்திப்பதற்குத்
தயங்காத புரட்சிகரமான உறுதியால், மனித பலவீனங்களை
அப்பட்டமாகப் புரிந்து கொண்ட ஒரு புரிந்துணர்வால், திறமைகளை
இனம் காணும் தெளிவால், சாதி, மத, இன, மொழி, வரம்புகளுக்கு அப்பால்
சென்று முழு மானுடத்தையும் நேசித்த ஒரு புறநோக்கால்,
புது யுகத்தின் சித்தாந்தத்தை சிந்தையில் சுமந்து கொண்ட ஞானத்தால்
மரணிக்கப்பட்ட பின்னரும் என்றென்றைக்கும் எமது நெஞ்சங்களெல்லாம்
ஊடுருவிப் பரந்து நிறைந்து வாழும் பெறற்கரிய பேறு பெற்ற
ஒரு யுக நாயகன்தான் எங்கள் தோழர் பத்மநாபா.