ச. செந்தில்நாதன்


துயில் கொண்ட நிலா


ச. செந்தில்நாதன், செயலாளர், முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

தோழர் பத்மநாபாவுடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், அவருடைய தோழமையை உணர்கின்ற வாய்ப்பு எனக்கு இருமுறை கிட்டியது.

1975ஆம் ஆண்டு சிகரம் என்ற முற்போக்கு திங்கள் இதழைத் தொடங்கி ஒரு ஐந்தாண்டு காலம் நடத்தி வந்தேன். இலங்கையிலும் அதற்கு வாசகர்கள் இருந்தார்கள். அவர்களில் பலர் எனக்கு நண்பரானார்கள். ஆனால் இலங்கைப் பிரச்சினையில் நெருக்கடி நெடிதுயர்ந்து பல போராளிக் குழுக்கள் வெடித்துச் சிதறியபோது ஒவ்வொரு நண்பரும் ஒவ்வொரு போராளிக் குழுவில் இருப்பதை என்னால் துயரத்துடன் பார்க்க நேர்ந்தது.

நண்பர்களில் பலர் நல்ல முற்போக்குவாதிகளாகவும், மார்க்சிய சிந்தனையாளர்களாகவும் இருந்தார்கள். சிலர் அப்படி இல்லாமலும் இருந்தார்கள். எனினும் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்தார்கள்.

நண்பர் ஒருவர் ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார். நானும் சென்றேன். தோழர் பத்மநாபா அங்கு இருந்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் அவர். அவரை யார் என்று நான் அடையாளம் கண்டுகொண்டு, நெருங்கிச் சென்று பேசுவதற்கு முன்னர், அவரே என் அருகில் வந்து பேசத் தொங்கினர். அந்த எளிமையும், அமைதியும் அணுகும் முறையும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.

கலகலப்பாக, ஆரவாரமாகப் பேசிப் பழகும் பாங்கு உடையவராகத் தோழர் பத்மநாபா இருக்கவில்லை. ஆனால் அவருடைய கனிவான பார்வையும், அளந்து பேசும் பேச்சும் ஒரு இயல்பான நெருக்கத்தை உண்டு பண்ணிவிடும் மந்திரம் கொண்டவை என்பதை நேரில் பழகியவர்கள் உணர்ந்திருப்பார்கள். சிலர் கூட்டத்தில் ஆரவாரமாகப் பேசுவார்கள். ஆனால் கேட்பவர்கள் கிளர்ச்சி அடையமாட்டார்கள். சிலர் அமைதியாகப் பேசுவார்கள். கூட்டத்தினர் கிளர்ச்சி அடைவார்கள். தோழர் பத்மநாபா பின்னால் கூறப்பட்ட ரகத்தைச் சார்ந்தவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் பி.இராமமூர்த்தி மரணமடைந்து அவருடைய உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த நேரம் அது. அன்று இரவு கடுமையான மழை. பி.ஆர் என்று அன்போடு அழைக்கப்பட்ட அத்தோழருக்கு என்னுடைய அஞ்சலியைச் செலுத்துவதற்கு நானும் சென்றிருந்நதேன். நேரம் இரவு நேரம். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தோழர் பத்மநாபா இன்னும் சில தோழர்களுடன் வந்திருந்து, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போதும் கூட அவரே அடக்கமான புன்னகையுடனும், ஆர்வம் மிக்க விழிகளுடனும் பின்னால் உட்கார்ந்திருந்த என்னிடம் திரும்பிப் பார்த்து பேசினார். இன்னமும் அந்த காட்சிகள் சித்திரம்போல் மனத்தில் நிற்கின்றன.

தோழர் பத்மநாபா மார்க்சியத்தில் நம்பிக்கை வைத்திருந்த ஒரு போராளித் தலைவர். இளம் வயதில் தலைவராகும் பலரிடமும் காணமுடியாத முதிர்ச்சியும், பக்குவமும் அவரிடம் இயல்பாக இருந்தன. பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதிலும், பார்ப்பதிலும், அணுகுவதிலும், மார்க்சியம் தனது தாக்கத்தை அவரிடம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவருடன் பழகும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அவரை உயிரோடு பார்க்கும் இன்னொரு வாய்ப்பை இழக்க நேர்ந்ததை நினைத்துப் பார்க்கும்போது, இப்போதும் நெஞ்சம் அழுகிறது. தன்னுடைய திருமண அழைப்பிதழைத் தோழர் தாஸ் அவர்களிடம் கொடுத்து அனுப்பி, நான் கட்டாயம் வரவேண்டும் என்று கேட்டிருந்தார். திருமண நேரம் பகல் 12 மணி. நீதிமன்றத்தைவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு வர இயலாத நிலையில், திருமண நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் போய்விட்டது.

மீண்டும் தோழர் பத்மநாபாவைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பை எதிர் நோக்கி இருக்கும்போது இடி விழுந்தாற்போல் அவர் படுகொலை செய்யப்பட்ட செய்தி காதுகளைப் புண்ணாக்கியது. அண்மைக்கால ஈழத்தமிழர் போராட்டத்தில், தோழர் பத்மநாபாவின் மரணத்தைப்போல் யாருடைய மரணமும் மக்களுக்கு அதிர்ச்சியைத் தரவில்லை. மாதங்கள் பல ஓடிய பின்னரும் அந்த அதிர்ச்சி நீங்கவில்லை.

போராட்ட குணமும், பொறுமையும், நெஞ்சுறுதியும், இளகிய மனமும், ஈழத்தையும் இந்தியாவையும் இணையாக நேசித்த பான்மையும், தமிழ் பேசும் மக்களையும் மார்க்சியத்தையும் தன் இரு தோள்களில் சுமந்த தோழர் பத்மநாபாவின் நினைவுகள் என்றும் தென்றலாகவே இருக்கும்.