எல்.ஜி. கீதானந்தன்


ஈழ விடுதலைப் போரின் ஈட்டிமுனை!
ஈடு இணையற்ற புரட்சித் தளபதி.


எல்.ஜி. கீதானந்தன், கோவை மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

குறுந்தாடியினூடே புன்னகை மிளிர, கூரிய கண்களில் வீரம் ஒளிவீச, தூயவனாய், புரட்சியின் தூதுவனாய் விளங்கிய செயலாளர் நாயகம் பத்மநாபா இன்று நம்மிடையே இல்லை. உயிர்த் துடிப்போடு விளங்கிய அந்தப் புரட்சிக் காளை, இன்று படமாய், பத்திரிகைச் செய்தியாய், கோடிக்கணக்கான உள்ளங்களின் குமுறலாய், கண்ணீராய் வடிந்து விட்டது. எனினும், அந்த மாவீரன் செங்குருதியால் எழுதிய ஈழ விடுதலைப் போரின் வரலாறு அழிந்துவிடக் கூடிய ஒன்றல்ல.

ஆருயிர்த் தோழன் அபுயூசுப்பும், அருமைத் தோழன் வளவனும் பத்மநாபாவின் திருமணச் செய்தி கூறி சென்னைக்கு வரும்படி அழைத்தனர். புரட்சி வீரனின் திருமணக் கோலத்தைக் காண ஓடோடி வந்தேன். சென்னையிலே அந்த மணவிழாவில் அபுயூசுப் என்னை பத்மநாபாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

மகிழ்ச்சியின் விளிம்பில் மண்டபம் குலுங்கி அதிர்ந்தது. புதிய தென்றலில் பூமாலைகளின் நறுமணம், வீடியோ கேமிராக்களும், போட்டோ கேமிராக்களும் வலம் வந்தன. அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி ஒளி, நம்பிக்கை ஒளி, எத்தனையோ அரசியல் கட்சிகள், இயக்கங்களின் பிரதிநிதிகளும், பத்திரிகையாளர்களும், இலக்கியவாதிகளும் நெஞ்சார வாழ்த்தினர். புரட்சியின் அருமந்தப் புதல்வன் ஆனந்தியோடு இனிய இல்லற வாழ்வில் தேறித்திளைத்திட வாழ்த்துக்களைக் குவித்தனர்.

அந்தோ, 1990 சூன் 19ம் நாள் கோடம்பாக்கம் சக்காரியா காலனியில், தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வியது. எப்படி நிகழ்ந்தது என மனம் பதைத்தது. நமது தோழர்களிடம் விழிப்புணர்வில்லையா என விழி பிதுங்கியது. நம்மவரிடம் அதே ஏ.கே.47- இல்லையா என துடிதுடிப்பு ஏற்பட்டது. எந்த ஆயுதமும் வைத்திருக்கலாகாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு மட்டும் மத்திய, மாநில அரசுகளின் உத்திரவாம்.

விடுதலைப் புலிகளுக்கு, பாம்புக்கு பால் வார்ப்பது போல் தமிழக அரசு நல்கிய அருந்துணை, இந்த விபரீதத்திற்கு வழிகோலியது. வீணையின் நாதத்தை வீழ்த்தி விட்டு, தகரடப்பா சத்தத்திற்கு அரங்கேற்றம். ஸ்ரீ சபாரத்தினமும், அவரது தோழர்களும் நிராயுதபாணிகளாகக் கொல்லப்பட்ட போதும், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும், வெ. யோகேஸ்வரனும் அழித்தொழிக்கப்பட்ட போதும், உமாமகேஸ்வரன் நிர்க்கதியாய் கொலையுண்ட போதும், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி இராஜினி திரணகம படுகொலை செய்யப்பட்ட போதும், ஆயிரக்கணக்கில் சகப் போராளிகளும், தமிழர்தாமும் படுகொலையுண்டபோதும், தமிழினத்தின் காவலர் தம், பால்வடியும் தமிழ் முகத்தில் கொந்தளிப்பு தோன்றவில்லை. பாசிசத்தைக் கடிந்து, ஒரு மென்மையான கண்டனத்தைக்கூட விடுத்தாரில்லை. போற்றி போற்றி என அகவல் பாடினர்.

அதன் விளைவு? செயலாளர் நாயகம் பத்மநாபவுடன் மேலும் பன்னிரண்டு தோழர்களும் படுகொலையுண்டனர். மகிழ்ச்சிக்களி பொங்க முகம் விம்மச் சிரித்திடும் கிருபாவும் படுகொலை. அவர் கோவையிலே இரண்டு நாள் தங்கியிருந்த போது, வட கிழக்கு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு விரித்துரைத்த திட்டங்கள் தான் எத்தனை? அந்தத் தமிழ் கிளியை பிணமாக்கி விட்டனரே? பாராளுமன்ற உறுப்பினர் யோகசங்கரி, அரசியல் தெளிவுடைய அலியார் முகம்மது, மட்டக்களப்பு சிறையுடைத்து மீண்ட பத்மநாதன், செயலாளர் நாயகத்தின் பாதுகாவலர் லிங்கன், வடகிழக்கு மாநிலத்தின் புனருத்தாரண தொண்டர் படைப்பொறுப்பாளர் அன்பு முகுந்தன், மிகச் சிறந்த போராளி தருமன், வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோமளராஜா, ஈழப் பெண்கள் விடுதலை முன்னணியின் பொறுப்பாளர்களான தோழியர்கள் கவிதா, ஜெசிந்தா, முன்னணிப் போராளிகள் ரவி, புவி ஆகியோர் ரத்த வேள்வியில் பலியிடப்பட்டனர்.

செயலாளர் நாயகத்தின் படுகொலைச் செய்தி, தமிழகமெங்கும், இந்தியத்திரு நாடெங்கும், ஏன் உலகமெங்கும் காட்டுத்தீயெனப் பரவியது. முற்போக்காளர் உள்ளமெல்லாம் பதைபதைத்தது. உழைப்பாளர் உலகம் கனல் கொண்டெழுந்தது. கோவையெங்கும் பேருந்துக்கள், வழித்தடங்கள் அனைத்திலும் கண்ணீர் அஞ்சலிப் போஸ்டர்கள். கோவை, மதுரை, நெல்லை என முக்கிய நகரங்களில் ஆவேசக் கண்டனப் பேரணிகள். தமிழர் நெஞ்சம் கொதித்தது. இக் கொடுமைக்கு முடிவில்லையா? எனப் பொங்கியெழுந்தது. விடுதலைப் புலிகளுக்கு வக்காலத்து வாங்கியோர் வாயடைத்துப் போயினர். பாசிச வெறியின் கொடுங்கோலத்தை மூடி மறைத்திட இயலாது விழிபிதுங்கி நின்றனர். தமிழக அரசியலின் முக்காடுக் கேசுகள் மூச்சடங்கிப் போயின.

39 வயது நிரம்பிய பத்மநாபா, இருபதாண்டு காலம் ஈழ விடுதலைப் போரில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வரலாறு நம் இதயத்தில் நிரம்பி வழிகிறது. தமிழ் மாணவர் பேரவையாய், ஈழ விடுதலை இயக்கமாய் அரும்பி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியாய் மலர்ந்த வரலாறு தான் எத்தனை மகத்தானது. 1981ல் செயலாளர் நாயகமாய் பொறுப்பேற்ற பேராண்மைதான் எத்தகையது? ஒரு புரட்சிகர தலைமைக் கேற்ற கொள்கையும் நடைமுறையும் கொண்டிருந்தார் அவர்.

1984 சூன் 28ல் நடைபெற்ற முதலாவது மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் திட்டம், அவரது நுண்மான் நுழைபுலத்தை, கூரிய நேரிய தீட்சண்யப் பார்வையை நமக்குப் படம் பிடித்தக் காட்டுவதாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருந்த, சிங்கள, தமிழ் இனங்கள், இன்று சிதைவுண்டது ஏன் என்பதற்கான விளக்கம் அந்த அரசியல் திட்டத்திலே விளக்கப்பட்டுள்ளது.

காலனி ஆதிக்கவாதிகளால் அந்த சிதைவு உண்டாக்கப்பட்டது. சிங்கள, தமிழ் தரகு முதலாளிகள் சுதந்திரப் போரில் அரசியல் தரகர்களாக விளங்கினர். சுதந்திரத்திற்குப் பின், தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறினர். சுயசார்பு பொருளாதாரத்தைக் கட்டியமைத்திட தவறினர்.

எனவே, தேசிய ஜனநாயகப் புரட்சி உடனடிக் கடமை என வரையறுத்தனர். மத்திய பகுதியில் வாழும் மலையகத் தோட்டத் தொழிலாளருக்கும், முஸ்லீம் பகுதியினருக்கும் தனி மாகாண அமைப்புகளை உருவாக்கிட அத்திட்டம் உறுதி கூறுகிறது. சாதி வேறுபாடுகளும், வர்க்க வேறுபாடுகளும் ஒன்றிணைந்த போக்கினை தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது.

மார்க்ஸிய லெனினிய சித்தாந்தத்தின் அடிப்படையிலான ஒரு பாட்டாளி வர்க்க ஸ்தாபனமாக கட்டி எழுப்பி, அதன் தலைமையை, ஈழ விடுதலைப் போராட்டத்தில் நிலை நாட்டுவது என்பதே நோக்கம் என அரசியல் திட்டம் விரித்துரைத்துள்ளது.

குட்டி முதலாளியச் சிந்தனை கொண்ட வர்க்கங்கள் உண்மையில் இப்போராட்டத்தினைத் தலைமைதாங்கி நடத்த முடியாதவையாக உள்ளன. மேலும், இவ்வர்க்கங்கள் தனி நபர் பயங்கரவாதம், சாகசச் செயல்களில் அதீத நம்பிக்கை போன்ற தவறுகளுக்கு ஆட்படுகின்ற ஆபத்தும் உண்டு என திட்டம் எச்சரித்துள்ளது.

இன்றைய கட்டத்தில் தேசிய விடுதலையை உறுதியாக தொடர்ந்து போராடி வென்றெடுக்கக்கூடியது பாட்டாளி வர்க்கமாகவே உள்ளது. உழைக்கும் மக்கள் மத்தியிலிருந்து எழுச்சி பெறுகின்ற பாட்டாளி வர்க்க ஸ்தாபனமே தேவை.

பல்வேறு நலன்களையுடைய வர்க்கங்கள், சமூகப் பிரிவுகள் தேசிய ஒடுக்கு முறையை எதிர்நோக்குவதால், அதற்கு எதிராக போராடுகிறார்கள். இவ்வர்க்கங்கள், சமூகப் பிரிவுகள் அனைத்தையும், பாட்டாளி வர்க்க ஸ்தாபனம் தனது தலைமையில் அணிதிரட்ட வேண்டும் என தெளிவான பாதையினை வகுத்துள்ளது.

ஆயுதப் போராட்டம், தேசிய ஜனநாயகப் புரட்சியின் உடனடிப் பணிகள், ஈழ மக்கள் தேசிய ஜனநாயகப் புரட்சியின் அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கைகள், பணிகள், சர்வதேச நிலைபாடு இவற்றை அரசியல் திட்டம் தௌ;ளிதின் வரையறுத்துள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முதலாவது மாநாட்டில் செயலாளர் நாயகத்தின் துவக்கவுரை மிகவும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும்.

இந்தியா ஒரு சமாதானம் விரும்பும், நடுநிலைக் கொள்கையும், ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மையும் கொண்ட வலிமை மிக்க நாடு. அதன் பக்கத்துணை விடுதலை இயக்கத்திற்கு இன்றியமையாதது என்று அவர் கருதினார். அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதனால் தலைமை தாங்கப்படும் சர்வதேச பிற்போக்கு சக்திகளும் இந்திய உப கண்டத்தில், தமது உலகளாவிய நலன்களைப் பேணுவதற்கான கருவியாக ஸ்ரீலங்காவின் பிற்போக்கு ஆட்சி அதிகாரத்தைப் பலப்படுத்தி வருகின்றன என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

எனவேதான், அவர் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை வரவேற்றார். தமது இயக்கத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தார். தேர்தலில் போட்டியிட்டு, வடகிழக்கு மாகாண சபையின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிட வழி வகுத்தார். சிங்கள முற்போக்கு வாதிகளுடனும், உலகெங்குமுள்ள சர்வதேசிய வாதிகளுடனும் இடையறாத் தொடர்பு கொண்டிருந்தார். ஈழ மண்ணில் தோன்றிய அனைத்து இயக்கங்களையும் ஒன்றுபடுத்த முயன்றார்.

சோர்வுற்ற தோழர்களைத் தட்டியெழுப்பிய, சர்வதேசியவாதி அவர், அவர் மாநாட்டின் துவக்கவுரையில் கூறினார்.

நாம் அனாதைகளாக இருக்க மாட்டோம். சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தின், தேசிய விடுதலை இயக்கங்களின் பகுதிகள் நமக்கு நேரடியான பொருள்வர உதவிகளை இன்னமும் வழங்க முடியாமலிருக்கலாம். எனினும், நமது போராட்டத்திற்கு அவர்கள் தங்களது கூட்டான சித்தாந்த, ஆன்மீக ஆதரவை விரிவுபடுத்தியுள்ளனர்

நாம் ஒன்றை மனதில் இருத்தியாக வேண்டும். சகோதர ஒருமைப்பாடு என்பது, பரஸ்பர வளர்ச்சிப் போக்கின் மூலமாகவே உருவாக்கிட இயலும். நம்மைப் பொறுத்தவரை, நாம் வெறுமனே வெளி ஆதரவை எதிர்பார்த்தால் மட்டும் போதாது. நமது ஆதரவினையும், ஒருமைப் பாட்டினையும் அதே போன்று அவர்களுக்கு நாம் அளித்தாக வேண்டும். அது பொருள் வயமானதாக இல்லாமலிருக்கலாம். ஆனால் நமது உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து தேசிய விடுதலைக்கான, மானிட விடுதலைக்கான அனைத்துப் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டும்.

மக்கள் மீதும், மார்க்ஸியத்தின் மீதும் அவர் கொண்டிருந்த பேரன்பையும், தளரா நம்பிக்கையினையும், பின்வருமாறு வெளிப்படுத்தினார்.

நமது சாதனைகளின் அடிப்படையாக விளங்குவது எவர், எது என்ற கேள்விக்குப் பதில், உலகளாவிய உண்மையான மக்கள்தான். நாம் மக்களிடமிருந்து கற்றுக் கொள்கிறோம். நாம் இவர்களுக்கு போதிக்கும் போது கூட, நாம் ஆசிரியர்களாக அல்ல, அவர்களுள் ஒருவராகவே இருக்கிறோம். மக்கள்தான் நமது அடிப்படை அவர்களைச் சார்ந்துதான் இருக்க வேண்டும். நாம் உறுதியாக இதனை மனதிலிருத்த வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்த ஆயுதமான மார்க்ஸிய - லெனினியமே நமது சித்தாந்தமாகும். அதன் தத்துவமான இயக்கவியல் வரலாற்றியல் பொருள்முதல்வாதமே நமது தத்துவமாகும். எனினும் மார்க்ஸிய லெனினிய பதத்தை நாம் கையாளும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். அதனைச் சிறுமைப்படுத்திவிடவோ, அல்லது மக்கள் மனதில் குழப்பம் விளைவிக்கும் விதத்தில் பயன்படுத்தவோ கூடாது. கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும், நாம் மார்க்ஸிய லெனினிய பதத்தை நாம் கையாளும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். அதனைச் சிறுமைப்படுத்திவிடவோ, அல்லது மக்கள் மனதில் குழப்பம் விளைவிக்கும் விதத்தில் பயன்படுத்தவோ கூடாது. கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும், நாம் மார்க்ஸிய -லெனினியத்தின் உறுதியான ஆதரவாளர்களாக இருந்து வந்துள்ளோம். ஆனால் அதே சமயம் சிறுமைப்படுத்துதல், வரட்டுச் சூத்திரவாதம் ஆகிய பொறிகளினுள் விழுந்திடாமல் உணர்வுபூர்வமாக தவிர்த்து வந்துள்ளோம். எதிர்காலத்திலும் எச்சரிக்கையுடன் இருப்போம்

அவருடைய மானிட நேயத்தை, புரட்சியுணர்வைப் புரிந்து கொள்ள, அவருடைய உரையிலிருந்து இப்பகுதியினை மேற்கோளாக்க விரும்புகின்றேன்.

நமது போராட்டத்தில் தனிநபர்கள், குழுக்கள் அல்லது அமைப்புகள் வகித்துள்ள பங்கினையும் நாம் மதிப்பிட்டாக வேண்டும். எந்த தனிநபர், எந்த குழு, எந்த அமைப்பு எதுவாயினும் - தவறு செய்வது அல்லது கொடூர அடக்கு முறைகள் துன்பங்கள் ஆகியவற்றை தாங்க முடியாமல் போராட்டத்திலிருந்து பின்வாங்குவது என்பது ஒரு அடிப்படையான மானிடப் போக்காக உள்ளது. அதே தருணத்தில், வேறு சிலர் அளப்பரிய உறுதியுடனும், திறனுடனும் தங்களது போராட்த்தில் நீடித்து தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த தனி நபர்கள்தான் இறுதியாக, வரலாற்று நாயகர்களாக உதிக்கின்றனர்

தவறு செய்தவர்கள், பின்வாங்கி ஓடியவர்களைக்கூட அவரது பரந்த பார்வை, மனித நேயத்தோடு காண்கிறது. போராட்டத்தில் உறுதியுடனும், திறனுடனும், தொடர்ந்தும் நீடித்தும் செயல்படுவோர் வரலாற்று நாயகர்களாக உதிப்பர் என்ற அவரது தீர்க்க தரிசனம் மெய்யண்ணே! மெய்! மெய்! என்றாகிவிட்டது.

இங்கிலாந்திலிருந்து, லெபனான் சென்று, பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் தோள் கொடுத்த மாவீரன், இன்று விடுதலைப் போரில் வீழ்ந்த செம்மலராகி விட்டார்!

தமிழர் இயக்கங்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில், தமிழக முதல்வர் மேற்கொண்ட பேச்சுவார்த்தை அரங்கிற்கு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் செயலாளர் நாயகம் சமர்ப்பித்த பிரேரணை, ஈழப்பிரச்சினையின் தீர்விற்கு மிக தீர்க்கமான வழியினைக் காட்டியது. இரண்டெ வரிகளில் இறுதியாக தமது இயக்கத்தின் அரசியல் நிலைபாட்டைத் தெளிவுபடுத்தினார்.

ஐக்கிய இலங்கை என்றால், தமிழ்பேசும் மக்களுக்கு சுயாட்சி
அது இல்லையென்றால், சுதந்திர ஈழமே முடிவாகும்!

நெஞ்சகக் குருதி நிலத்திடை வடித்து வஞ்சகமழிக்கும் மாமகம் புரிவம் யாம் -

எனும் பாரதி வாக்கினில் சபதமேற்போம்.