ம.வெ.அருளாளன்


இலட்சிய பயணங்கள் முடிவதில்லை

.வெ.அருளாளன், விரிவுரையாளர், குருநானக் கல்லூரி, சென்னை.

விழுமின் எழுமின் இலட்சிய இலக்கை அடையும்வரை ஓயாதீர் என்ற விவேகானந்தரின் பொன் மொழியின்படி ஈழ மக்களின் நலன் காணல் என்ற இலட்சிய இலக்கை நோக்கி ஓயாமல் பயணமானவர் அமரராகிவிட்ட தோழர் க. பத்மநாபா அவர்கள்.

ஈழ மக்களின் நலன் என்பது அவர்களின் அரசியல்ரீதியான விடுதலையில் மட்டுமில்லாமல், சமூக பொருளாராத விடுதலையிலும் அடங்கி உள்ளது என உறுதியாக நம்பினார் தோழர். ஈழ மக்களின் நலன், உழைக்கும் பாட்டாளி மக்களான மலையகத் தமிழரின் எதிர் காலத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது என அவர்களின் நலனுக்காகவும் உழைத்தவர் தோழர்ளூ ஈழ மக்கள் நிரந்தர அமைதிகாண, ஒடுக்கப்பட்ட சிங்களவர்களும் விடுதலை பெற வேண்டுமென முற்போக்கு சக்திகள் அனைத்துடனும் இணைந்து செயலாற்றினார் தோழர்.

இலட்சியம் மட்டுமல்லாமல் அதனை அடையும் வழி முறைகளும் கூட உன்னதமானவையாக இருக்க வேண்டும் என்பதை வழிகாட்டு கொள்கையாகச் செயற்படுத்தினார். எனவேதான், தாம் பட்டினி கிடந்தாலும், இன்னலுற்றாலும், இளைஞர்களின் வாழ்வைச் சீர்குலைக்கும் ஈனச் செயல்கள் எதிலும் தம் இயக்கத்தவர் ஈடுபடக்கூடாது என்று செயற்படாத போதுதான், ஆயுத போராட்டமே தீர்வுக்கு வழியென நம்பிய புரட்சியாளர். விரும்பிய மாற்றம் காண தேர்தல் பாதைக்கு வழிகாட்டியபோது, தான் நேசிக்கும் மக்கள் ஒரு இடைக்கால அமைதியாவது சுவைக்க மாட்டார்களா என்ற நம்பிக்கையில், நிராயுத பாணியாகி தேர்தலில் பங்கேற்று, தான் அடிப்படையில் ஒரு ஜனநாயகவாதியே என நிருபித்தவர்.

ஈழ மக்களின் உண்மையான எதிரி யார்? நண்பன் யார்? துரோகி யார்? என தெள்ளத் தெளிவாக உணர்ந்து செயற்பட்ட அவரின் உழைப்பு என்றும் வீணாகாது.

தான் கொண்ட இலட்சிய கொள்கையில் பிளக்கமுடியாத அணுவைப் போல இயங்கினார். தோழர். அந்தோ! அவ்வணுவும் பிளக்கப்பட்டது. அவ்வணுப் பிளவும் கூட, அனைத்து ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்களின் செயற்பாடுகள் என்ற அணுக்களை தொடர் சங்கிலியாகத் தூண்டி இயக்கும். அவ்வியக்கம் தோழர் காட்டிய உன்னத கொள்கையினை வழிப்படி செயலாற்றும்போது, ஆக்கபூர்வ அணுசக்தியாக ஈழ மக்களின் நலனை வென்றெடுக்கும்.