தா. பாண்டியன்


நட்புக்காக நீதிக்காக உயிர்நீத்த நிரபராதி


தா. பாண்டியன், மாநில செயலாளர். இந்திய ஐக்கிய பொதுவுடமைக் கட்சி

தோழர் பத்மநாபாவை சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன். போராளியின் உடையுடன், தாடியுடன் அவர் வந்திருந்த காட்சி இன்றைக்கும் என் நினைவில் நிற்கிறது.

மெதுவாகப் பேசும் சுபாவமுடைய பத்மநாபா, இலங்கைத் தமிழர் படும் அவதிகளை விரிவாக விளக்கினார். போராளிக் குழுக்களின் கொள்கை நிலைகள், தன்மைகள் பற்றியும் எடுத்துச் சொன்னார்.

அவர் சந்தித்த காலத்தில் தோழர் கல்யாண சுந்தரம் அவர்களும், நானும் போராளிக் குழுக்கள் ஒன்றுபட வேண்டும் என்பதை வற்புறுத்தி வந்தோம். ஒன்றுபடுவதில் உள்ள சிரமங்களை விளக்கிக் கூறிய பத்மநாபா எந்த நிபந்தனையுமின்றி பேசவும், ஒப்புக் கொள்ளப்படும் திட்டத்துடன் ஓரணியில் நின்று பாடுபடவும் தயாராக இருப்பதாகக் கூறினார்.

இதே காலத்தில் பிளாட் இயக்கத் தலைவர் முகுந்தனும் எம்முடன் தொடர்பு கொண்டார். அன்டன் பாலசிங்கம் இருமுறை வந்து சந்தித்தார். இவர்களிடையே வேறுபாடு இருப்பது தெரிந்தது.

இவர்கள் அனைவருமே இலங்கை கம்யூனிஸ்டுக் கட்சியை விமர்சனம் செய்தனர். உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அங்கீகாரம்-ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

ஆனால், அன்டன் பாலசிங்கத்தின் விமர்சனம், கம்யூனிஸ்ட் அடிப்படைகளை நிராகரிப்பதாக இருந்தது. இதர போராளிக் குழுக்களுடன் ஒத்துழைப்பு என்ற பேச்சுக்கு இடம் இல்லை என்று கூறிவிட்டார்.

ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் நீங்கலாக மற்றக் குழுக்கள் ஒரு பொது அமைப்பை உருவாக்கின. ஆனால் இந்திய அரசியல் கட்சிகள் சில கடைப்பிடித்த அணுகுமுறையும், அரசு அதிகாரிகள் சிலர் கடைப்பிடித்த அதிகாரப் போக்குள்ள கண்ணோட்டமும் இந்த ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பதிலாக சீர்குலைய வைத்தன.

இந்திய அரசின் சிறந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் வெற்றி பெறாமல் தேக்கமடைந்ததற்கு இந்த ஒற்றுமையைக் கட்டத் தவறியதுதான் முதல் காரணம்.

பத்மநாபா, டில்லிக்கும், பல கட்சி அலுவலகங்களுக்கும் அலைந்து நியாயத்தை உண்மையை எடுத்துக்கூற முயன்றார். இங்குள்ளவர்கள் உணர்வதற்குள் இலங்கை நிலை மாறிவிட்டது.

விடுதலைப் புலிகள், கிடைத்த சந்தர்ப்பத்தை சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

முதற்கட்டத்தில், இந்தியாவின் நண்பர்களாக நடித்து, இந்தியாவின் பண உதவி, அனுதாபம், ஆதரவு இதர உதவிகளைப் பெற்றனர் விடுதலைப் புலிகள். பின்னர், இந்தியாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் இலங்கை தேசபக்தர்களாக, இலங்கையின் சுயாட்சி அதிகாரத்தை நிலைநாட்டும் போராளிகள் போல, இரண்டாவது கட்டத்தில் நடித்து, இலங்கை அரசின் ஆதரவு, ஆயுதம் ஆகியவற்றைப் பெற்றனர்.

ஜனநாயக முறையில் ஏற்பட்டுவந்த சீரான வளர்சிப்போக்கை இலங்கை இராணுவத்தின் உதவியோடு தகர்க்கத் தொடங்கினர்.

இதற்குச் சாதகமாக இலங்கையிலும், இந்தியாவிலும் ஆட்சி அதிகார பீடத்தில் இருந்த தலைவர்கள் மாறிவிட்டார்கள்.

இந்திய அமைதிகாப்புப்படை திரும்பியது. தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு ஆயுத மோதலால் கவிழ்க்கப்பட்டது.

இலங்கைத் தமிழ் மண்ணில் கால் ஊன்றிக் கொண்ட பின்னர், இலங்கைக்கு எதிராக துப்பாக்கியைத் திருப்பி, தமிழர்களின் தனிநாடு கோரிக்கைக்காகப் போராடும் தமிழர் நலன் காக்கும் படையாக புலிகள் காட்சி தருகிறார்கள்.

விடுதலைப் புலிகள் போராடுகிறார்கள், தியாகம் செய்கிறார்கள் என்பதை நாம் மலிவாக மதிப்பிடவில்லை. ஆனால் எதற்காகப் போராடுகிறார்கள்? யாருடைய துணை இறுதிவரை நிற்கும்? என்ற கேள்விகள் எழுகின்றன.

இன்றைய இந்திய அரசு, இலங்கைப் பிரச்சினையில் தலையிடாக் கொள்கையை கடைப்பிடிக்கும் என, ஆட்சிபீடம் ஏறிய மறுநாளே பிரகடனம் செய்துவிட்டது.
கருணாநிதி எத்தனை விழா நடத்தினாலும், மத்திய அரசின் நிலை மாறப்போவது இல்லை. அதற்குப் பதிலாக மத்திய அரசு மாறலாம்.

இலங்கை அரசு, இன்னொரு நாட்டின் இராணுவ உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கும்.

அப்பொழுதுதான் இந்திய அரசியல் தலைவர்கள் சிலருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பத்மநாபா கடைப்பிடித்த பொறுமையான சரியான கொள்கையின் மகத்துவம் புரியும்.

இந்தியா ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திற்கு உதவியது என்பதை விட, உதாசீனம் செய்தது என்பதுதான் உண்மை.

இறுதியாக அவர்கள் அகதியாகத் திரும்பிய பிறகும் கூட பாதுகாப்பு தரவில்லை.
அதன் விளைவாகத்தான் பத்மநாபா கொல்லப்பட்டார். கொடூரமான படுகொலை.

பத்மநாபா, தங்களை அவமதித்ததை நினைத்தோ, பதவிமீது ஆசை கொண்டோ இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை. அவர் ஆயுதங்களை ஒப்படைத்ததும் இந்தியாமீது கொண்டிருந்த நம்பிக்கையால் தான்.

இந்தியாவை நம்பிய அந்த நம்பிக்கைக்குரிய நண்பனை, இந்திய மண்ணிலேயே இந்திய எதிரிகள் கொன்றனர். அவர் சிந்திய இரத்தம் காலப்போக்கில் பலரது கண்களைத் திறக்கும்.

நட்புக்காக நீதிக்காக, நிரபராதியாக நின்று உயிர்நீத்த தோழர் பத்மநாபாவின் நினைவு எங்கள் நெஞ்சில் என்றும் நின்று நிலைக்கும்.

மரணத்திற்குப் பின் வெற்றியைப் பெற இருக்கிறார் பத்மநாபா. இது நடந்தேறும்.
அவருக்கு அன்றைக்கு நான் மீண்டும் மலர் அஞ்சலி செய்வேன்.