சோ. இராமசாமி


கொலைக்குக்
காரணம்...


சோ. இராமசாமி, ஆசிரியர், துக்ளக்.

.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபாவும், அந்த இயக்கத்தைச் சார்ந்த பன்னிரு முக்கியஸ்தர்களும், தமிழ் நாட்டைச் சேர்ந்த இருவரும், சென்னையில் வைத்து விடுதலைப்புலிகளால் அவர்களுக்கு வழக்கமான கோழைத்தனத்துடன் கொல்லப்பட்டனர். ஒரு கொலை நடந்தால், கொலை செய்தவர் மட்டுமே குற்றவாளியாகக் கருதப்படுவதில்லை. கொலைகாரனுக்கு உதவியவர்களும் குற்றவாளிகளே. அந்த உதவி நேரடியாகவும் இருக்கலாம். மறைமுகமாகவும் இருக்கலாம். கொலை நடக்கப் போகிறது என்று தெரிந்து, அல்லது கொலை நடக்கக்கூடும் என்பதை உணர்ந்து, அதற்கு வசதி செய்து தருபவர்கள் யாராவது இருந்தால், அவர்களும் குற்றவாளிகளே.

இந்த வகையில் பார்க்கும் போது சென்னையில் பத்மநாபாவும் மற்றும் பதினான்கு பேரும் படுகொலை செய்யப்பட்டதில் விடுதலைப் புலிகள் நேரடிக் குற்றவாளிகள். இவர்கள் இந்தக் கோழைத்தனமான கொலைகளைச் செய்து முடிக்க, உதவி செய்த குற்றவாளிகளும் உண்டுளூ இது நடக்கக்கூடும் என்று தெரிந்து ஒதுங்கி நின்று, வசதி செய்து கொடுத்த குற்றவாளிகளும் உண்டு. இந்த குற்றவாளிகள், மாநில, மத்திய அரசுகள்.

விடுதலைப் புலிகளால் கொல்லப்படுகிறவர்கள் பத்மநாபா ஆனாலும் சரி, அமிர்தலிங்கம் ஆனாலும் சரி, அப்பாவித் தமிழன் ஆனாலும் சரி, அவர்களெல்லாம் தமிழர்களே அல்ல. விடுதலைப் புலிகள் மட்டும் தான் அசல் தமிழர்கள். அவர்களை ஆதரிப்பவர்கள் அப்போதைக்கப்போது தமிழர்கள். இப்படி ஒரு சூழ்நிலை தமிழக அரசின் ஆதரவோடு இங்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய துரோகத்தனங்களுக்கும், விடுதலைப் புலிகளின் கோழைத்தனத்திற்கும் பலியாகிவிட்ட பத்மநாபா அவர்களும், தீவிரவாதப் போக்கைக் கொண்ட அரசியல் இராணுவ அமைப்பொன்றின் தலைவராகவே இருந்தார். ஆனால் இந்திய அரசை நம்பி, ஜனநாயகப் பாதையை ஏற்றவர்களில் முக்கியமானவர் அவர்.

சில முறைகள் அவரைச் சந்தித்திருக்கிறேன். சென்னையில் கொலையுண்டு இறப்பதற்கு சுமார் 20 நாட்களுக்கு முன்பாக ஒருமுறை என்னைச் சந்தித்தார். வழக்கமாக வைத்திருந்க்கும் தாடியை எடுத்து விட்டிருந்தார். தலை மறைவாக வாழவேண்டியிருக்கிறது. ஆதனால் உடனே அடையாளம் புரியாமல் இருக்க தாடியை எடுத்துவிட்டேன். தமிழக அரசு எங்களைக் கைது செய்யத்துடிக்கிறது. மத்திய அரசு எந்த விதமான உதவியும் செய்யத் தயாராக இல்லை. இனி எங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மீண்டும் உங்களைப் பார்ப்பேனா என்று சொல்வதற்கில்லை என்று கூறினார்.

இந்திய அரசினால் மோசம் செய்யப்பட்டு, தமிழக அரசினால் துரத்தி அடிக்கப்பட்டு, விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர் அவர்.