ந. நஞ்சப்பன், எம்.எல்ஏ.,


ஒளிரும் செந்தாரகை


ந. நஞ்சப்பன், எம்.எல்ஏ., மாநில செயற்குழு உறுப்பினர்
இந்திய ஐக்கிய பொதுவுடமைக் கட்சி, தமிழ் மாநிலக் குழு.

தோழர் பத்மநாபா. பெயரே ஒரு சங்கநாதம். புரட்சிகர இயக்கத்தின் ஒப்பற்ற தலைவன், பாசத்தால் தோழர்களை அணைத்த அன்புத்தாய், சோதனைகளை உடைத்தெறிந்து போராடிய மாபெரும் வீரன். இவரின் பெயரைக் கேட்டால், ஏகாதிபத்திய எடுபிடிகளோ இடியுண்ட நாகம், ஈழத் தமிழர்களின் விடியலுக்கு ஓயாது உழைத்த தமிழ் மகனை ஈனத் தனமாக, கோழைத்தனமாக இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தனர். அவரின் ஆருயிர் தோழர்களும் செந்நீரில் மிதந்து அரணாகி நின்றனர்.

தமிழரின் போர்ப்படை என்று பிதற்றிய கூட்டம், சிங்கள வெறியர்களோடு கரம் கோர்த்து கூட்டு சதித் திட்டம் வகுத்தனர். தமிழ்ப் போராளிகளை தொடர்ந்து நர வேட்டையாடி இரத்தத்தைக் குடிப்பதே புலிகளின் செயல். அவர்களின் நோக்கம் தமிழ் மக்களின் நாலனுக்கோ, தமிழர் வாழ்வின் விடியலுக்கோ, தமிழீழம் பெறுவதற்கோ அல்ல என்பது, தொடர்ந்து அவர்களின் நடவடிக்கையால் நிரூபணமாகிறது. ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதையும், இலங்கையை இரத்தக்களரியாக்கிக் கொண்டிருப்பதையும் தமிழ் உலகம் வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக, பாரத நாட்டில் உள்ள இளைஞர்களை, தமிழ் இளைஞர்களை ஈர்த்த ஒரு மாபெரும் சக்தியவர். அவரோடு நான் பழகும் வாய்ப்புக் கிடைத்ததை என் வாழ்வில் ஒர் உன்னதமான அம்சமாகக் கருதுகிறேன். அவரின் இழப்பு நமக்கு ஆறுதலடைய முடியாத நிகழ்ச்சியாகும்.

அவரைக் கேள்விப்பட்டுக் கொண்டிருந்த காலம் உண்டு. சிந்தனையில் சந்தித்ததே பல காலம். ஆயின், அவரை நேருக்குநேர் காணும் வாய்ப்புக்கிட்டியபோது எனது உள்ளம் ஏதோ ஒரு புதுவித உலகில் சஞ்சரித்தது.

அந்த தாடிக்காரனுக்கோ வயது குறைவு. ஆனால் அவரது விழிகள்தான் எத்தனை கருணை வடிவம் கொண்டுள்ளது. அவரது கூர்மையான பார்வையும், அமைதியான களங்கமற்ற முகமும் எவ்வளவு அனுபவங்களை தாங்கி நிற்கின்றது.

அவரென்ன காந்த விசையா? ஆம். அவர் ஒரு காந்த விசைதான்.

நான் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவன் என்ற முறையில் அரசியல் ரீதியாக அவரும் நானும் பலமுறை பேச வாய்ப்புக் கிடைத்தது. விசாலமான அறிவு, பரந்துபட்ட உலகப் பார்வை, பக்குவப்பட்ட ஒரு புரட்சிகரத் தன்மையை அவரிடம் காண முடிந்தது.

ஈழமக்களின் எதிர்காலம், இலங்கையின் தேசிய அளவிலான மாற்றம் குறித்து அவரது பேச்சுக்களை பல நாள் கேட்டதுண்டு. உலக புரட்சிகர இயக்கத்தின் ஓர் அங்கமாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை அவர் வழி நடத்திய போக்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

ஒரு சோதனைமிகுந்த காலக்கட்டத்தில் பேசிக் கொண்டிருந்தோம். குறிப்பாக தமிழகத்தில், இடதுசாரி இயக்கத்தில் ஏற்பட்டுள்ள சோதனை குறித்துப் பேசும்போது, நான் சற்று உணர்ச்சி வசப்பட்டு என் வார்த்தைகளை அவரிடம் கொட்டிவிட்டேன்.

அவர் நிதானமாகக் கூறினார் தோழர், இத்தகைய சோதனையான போக்குகள், உலகில் உள்ள எல்லா இடதுசாரி இயக்கத்திலும் வருவது சகஜம். நாங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு புரட்சிகர இயக்கத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து போராடித்தான் ஆகவேண்டும். பொறுமையாக இருந்து போராடுங்கள். உங்களைப் போல் இருக்கும் தோழர்கள் பதட்டப்படாமல், பின்வாங்காமல், சரியான பாதையில் போராடிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் தற்போதுள்ள நிலைமை சீரடையும் என்றார். சோதனை வருவது இயக்கத்தில் சகஜம். ஆயின், அதை எதிர்த்துப் போராடி முன்னேற வேண்டும். அப்போதுதான் ஒரு புரட்சிகரமான இயக்கத்தைக் கட்ட முடியும் என்றார்.

பல நேரங்களில் பேசும்போது, அவரது பளிச்சிடும் பற்கள் தோன்றச் சிரிக்கும் சிரிப்பில் எங்களை அணைத்துக் கொள்வது போல் அன்புமாரி பொழிவார். எங்களுக்கு இருக்கும் இதயச் சுமை இறங்கிவிட்டதாக உணர்வோம். ஆனால் இன்று இதயம் முழுவதும் சுமையாக்கி விட்டார்.

கடைசியாக அவரைச் சந்தித்த நாளும், முதலில் சந்தித்த வாய்ப்பும் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி. தோழர், தமிழகத்திற்கு கொஞ்ச காலத்திற்கு வராதீங்க, குறிப்பாக சென்னைக்கு தற்போதைக்கு வேண்டாம் என்றேன். அவரும் அனைத்தையும் உணர்ந்தவராய் சரி தோழர் என்றார். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் விழிப்புணர்வுடன் செயல்பட்ட இயக்கத்தில் எதிர்பாராத நிகழ்வு நிகழ்ந்து விட்டது.

என்னைப் பார்க்கும்போதெல்லாம் தனியா செல்லாதீங்க தோழர், பாதுகப்புடனே இருங்க என்று அறிவுறுத்திய அந்த சுடருக்கே பாதுகாப்பில்லாமல் போய்விட்டது.

அந்த தாடிக்காரன்தான் எத்தனை பேருக்கு சிம்ம சொப்பனம். அந்த தாடிக்காரனை விட்டு வைக்காதீங்க என்று ஏதோ ஒரு ஈனக்குரல் முணுமுணுப்பது காதில் பட்டது. குறுமதி படைத்த நரிகள் தமிழகத்தில் நடமாடுவது எங்களுக்கு தெரிந்தே விழிப்புடன் இருந்தோம்.

தமிழர்களின் விடியலுக்குப் போராடிய விடிவெள்ளி, அகதியாய் தமிழ்க் குடும்பங்களோடு தமிழகம் நோக்கி வந்தபோது தமிழக மண்ணில் காலடி வைக்கவும் இடம் கொடுக்கவில்லை. அதில் வந்திருப்பவர் பத்மநாபா என்று அறிந்தும்கூட இடம் தரவில்லை. எந்தத் தாடிக்காரனைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டினார்களோ, அந்தத் தாடிக்காரர் மத்திய அரசால் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டவர். அவரைப் பாதுகாப்பதற்கு தமிழக அரசுக்கு பொறுப்பும், கடமையும் உண்டு. அப்படியிருந்தும் பேடித்தனமாக அவரையும், அன்புத் தோழர் கிருபாவையும், யோசகங்கரியையும், மற்றும் அவரது ஆரூயிர் தோழர்களையும் கொன்று விட்டனர்.

கொலையுண்டது வவுனியா காடா? வட கிழக்கு மாகாணத்தின் மண்ணா, யாழ்ப்பாணத் தீப கற்பப் பகுதியா? திருகோணமலையா? கொழும்பு நகரா? அல்லது நடுக்கடலா எனில், நமக்கு வேதனைகூட வேறுவிதமாக இருக்கலாம். தமிழகத்தின் தலைநகரில் - சென்னை மாநகரில் பகிரங்கமாக அல்லவா புலிகள் சுட்டுக் கொன்று விட்டனர்.

நம் சகோதரரை தமிழகத்தாய் மடியிலேயே குண்டுகளால் துளைத்துவிட்டனர். ஈழத் தமிழர்களின் விடியலுக்கு ஓயாது போராடிய வரை தமிழ் மண்ணில் பிணமாக்க யார் காரணம்?

இந்தக் கொடுமை புரிவதற்கு எந்த கொடுங்கோலன் துணையாயினன்?

இந்த மண்ணை நம்பி வந்த போராளிகளின் தலைவரை, இம் மண்ணிலேயே சாம்பலாக்கியது யார்? யார் காரணம்?

இதை தமிழக இளைஞர்கள் எப்படித் தாங்குவர்? தமிழ் மக்களின் நெஞ்சம் எப்படி இதைப் பொறுப்பது? இந்தப் பழியை தீர்ப்பது யார்? நம்மை சல்லடையாய் துளைத்தாலும் இந்தக் காட்டுமிராண்டிச் செயலை எதிர்த்து முறியடித்தே ஆக வேண்டும்.

தமிழ் மண்ணில், மதுரையில் ஒரு கோவலனைக் கொன்றதற்கே மதுரையைத் தீயிட்டு அநீதியை எதிர்த்த தமிழகம், கண்ணகியின் நீதிக்கு பலமாய் கரம் கொடுத்த தமிழ் மக்கள் - தமிழரின் விடிவுக்குப் போராடிய ஒரு புரட்சிகர இயக்கத்தின் தலைவரையும், முன்னணித் தோழர்களையும் கொன்றமைக்குத் தீர்ப்பினை வழங்கியே தீர வேண்டும். தமிழக இளைஞர்களின் தோள்களில் சுமத்தப்பட்டு உள்ள இந்தக் கடமையைச் செய்வதே தோழர் பத்மநாபா மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தோழர்களுக்குச் செலுத்தும் அஞ்சலியாகும், வீர வணக்கமாகும்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தோழர் பத்மநாபா அவர்கள் வகுத்துத் தந்த அரசியல் திசை வழியில் தொடர்ந்து போராடி முன்னேற வேண்டும். தமிழகத்தில் நாம் தோள் கொடுத்து நிற்போம். தோழர் பத்மநாபா கொல்லப்பட்டாலும் அவர் கற்றுத்தந்த பாடம் தோழர்களை வழிநடத்தும்.

அவர் நம் உயிரில், உணர்வில் இருக்கின்றார். நம்முள் இருந்து நம்மை வழிநடத்துகிறார். என்றும் செந்தாரகையாக ஒளிர்ந்து நமக்கு வழி காட்டுகிறார். அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து முடிப்போம்.

ஈழ மக்களின் விடுதலைக்கு தொடர்ந்து போராடி வெற்றி பெற தோழர் பத்மநாபா பிறந்த நாளில் சபதம் ஏற்போம்.