க.சுப்பு


வழி நடப்போம் வரலாறு படைப்போம்


க.சுப்பு, கொள்கை பரப்புச் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ்

நல்ல பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தவர் நமது தோழர் பத்மநாபா! தோழர் என்றும் நாபா என்றும் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அடக்கத்தின் இருப்பிடம், பதவி மோகமும் பகட்டும் படாடோபமும் நிறைந்த உலகில் பத்மநாபா ஒரு விதிவிலக்காகத் திகழ்ந்தவர்.

சொல்லுக சொல்லில் பயனுடைய என்ற வள்ளுவரின் வழிகாட்டு நெறியை வழுவறப் பின்பற்றியவர்.

நாபாவின் உயர்வு அவருடைய செயல் திறத்தில் பொதிந்திருந்தது என்றுமே அவர் வாய்ச்சொல் வீரராக வாழ்ந்ததில்லை. ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் உயர்வுக்கும் மனித நேயத்துக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்.

தோற்றத்தில் எர்னஸ்டோ சே குவேராவை ஒத்தவராகவும் உளத்திண்மை மிகுந்தவராகவும் நம்மிடையே உலவினார்.

தமிழர்களுக்கென்று இலங்கையில் தனியொரு மாநிலத்தைப் பெற்றும். தமிழை அங்கு ஆட்சி மொழியாக அரியணை ஏறச் செய்தும், தமிழன் ஒருவனை மாநில முதல் அமைச்சராகப் பொறுப்பேற்க வைத்தும் செயற்கரிய செய்யத் துணை நின்றவர் பத்மநாபா. இலங்கை இராணுவத்தைப் பாசறைகளில் முடக்கிவைத்து இந்திய அமைதிகாப்புப் படையின் உதவியுடன் பாதிப்புக்கு உள்ளான தமிழ்ப்பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். இந்திய - இலங்கை உடன்பாட்டை ஆதரித்து, ஆக்கப்பூர்வமான திட்டங்களை அமுலாக்கி அரும்பணியாற்றினார்.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடைய பத்மநாபா, கடுஞ்சொற்களைப் பயன்படுத்தியதை ஒருபோதும் கண்டதில்லை. புறநானூற்றுப் போர் வீரனாகவும், தலைசிறந்த தமிழனாகவும் தன்னிகரற்ற மனிதனாகவும் விளங்கிய பத்மநாபா இன்று நம்முடன் இல்லை. எனினும் அவர் இல்லாத இதயம் இங்கு நம் எவருக்கும் இல்லை. அத்தகைய அருங்குணங்கள் அமையப்பெற்ற அருந்திறல் வேந்தனை நாம் இழந்துவிட்டோம். உடன்பிறந்தே கொல்லும் உடன்பிறப்புக்களால் அவர் உயிர் பறிக்கப்பட்டது. அவர் சிந்திய உதிரத்தால் உரம்பெற்ற மண் விடுதலை கீதம் இசைக்கும்.

ஒப்புயர்வற்ற உன்னத சமுதாயத்தைப் படைக்க வழிகாட்டும் அவருடைய அடிசுவட்டைப் பின்பற்றி

வரலாறு படைப்போம்!
வாழ்ந்து காட்டுவோம்