திருமதி துல்ஜாராணி பாலதண்டாயுதம்


கொலையாளியும் வருந்த வேண்டிய குணக்குன்று


திருமதி துல்ஜாராணி பாலதண்டாயுதம், சி.பி.ஐ. மாதர் அணி. சென்னை.

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப இந்த மண்ணுலகில் தோன்றி மக்களை நேசித்து மக்களுக்கு நன்மையே செய்து இந்தச் சிறிய வயதிலேயே புகழ் பல பெற்ற இந்த மாணிக்கம் இன்னும் பல காலம் இருந்திருந்தால் ஒரு நாட்டின் வரலாறு கூட மாறியிருக்குமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

என் குடும்பமே ஒரு அரசியல் குடும்பம். எனவே தோழர் பத்மநாபா அவர்களை பதிமூன்று வருட காலமாக எனக்குத் தெரியும். கடந்த பத்து வருடகாலமாக எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். என் வீட்டிற்கு வரும்போது அம்மா அம்மா என்று முகம் மலர என்னை அன்புடன் அழைத்தபடியே வருவார். அவரின் நினைவாக அவர் பெயரை என் பேரனுக்கு ரஞ்சன் (அவருக்கு ரஞ்சன் என்றோரு பெயர் உண்டு) என்று வைத்திருக்கிறோம். அவர் சென்னையை விட்டு வெளியூர் சென்று வந்தவுடன் என் வீட்டிற்கு வந்து அனைவரையும் அக்கறையோடும் பாசத்தோடும் சுகம் விசாரிப்பார்.

அவரிடம் ஒரு தலைவன் என்ற பந்தா இருந்து நான் பார்த்ததே இல்லை. சக தோழர்களுடன் சமமாக அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒரு அங்கத்தினர் போலவே அன்புடன் நடந்து கொள்வார். பண்பாடுமிக்க தலைவராய் வாழ்ந்த அவரின் உயிரைப் பறிக்க அந்தக் கொலைகாரர்களுக்கு எப்படித்தான் மனம் துணிந்ததோ? இதை நினைக்கும்போது தாங்கொணாத் துயரமே எழுகிறது. அவரிடம் உள்ள பாசம், யாருக்கும் கிட்டாத மிக உயர்வான பண்புகள், கனிவு எல்லாம் கண்டு பலமுறை நான் வியந்திருக்கிறேன்.

இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக, அவர்களின் உயிருக்கும், உடமைக்கும் அரணாக நின்று தமிழ் மாகாண சபையை நிறுவியவர். அவரது கொலை, அதுவும் திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்ட கொலை இந்தியாவிலேயே அதுவும் தமிழகத்தின் தலைநகரிலேயே நிகழ்ந்தது ஒரு கறைபடிந்த வரலாறு. அவரது மரணம் என்னைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அரசியலே தன் உயிர் மூச்சாகக் கொண்டு நெடும் பயணத்தை மேற்கொண்ட அவரது இலட்சியப் பயணம் இவ்வளவு சீக்கிரம் முடிந்தது,,, இல்லை இல்லை பாசிஸவெறியர்களால் முடிக்கப்பட்டது.

எத்தனை எத்தனை இளம் நெஞ்சங்கள் இன்னும் குமுறிக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகச் சுடர் கையில் ஏந்தி ஒளிமயமான ஜகத்தினைப் படைத்திட புறப்பட்ட அந்தத் தலைவனின் பயணம் தடைப்பட்டுப் போனதில் எத்தனை தளிர் நெஞ்சங்கள் தவிக்கின்றன என்பதை எல்லாம் நினைக்கும்போது நீங்காத் துயரமே என்னுள்ளே.

பத்மநாபா அவர்களின் உயிரை பறித்துவிட்டதால் அந்த பாசிஸ வெறியர்கள் தங்கள் குணத்தை மாற்றிக்கொண்டு விடவில்லை. பாசம் மிக்க மனிதர், பண்பாடு மிக்க அவரையா கொன்றோம் என்று அந்த எதிராளியே எண்ணியிருப்பான். இல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் எண்ணி வருந்துவான். அந்த அளவிற்கு குணம் படைத்தவர்.

அவர் இன்னும் என்னை அம்மா அம்மா என்று அழைக்கும் குரல் என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

புதிய ஒரு புரட்சிகர ஜனநாயகத்தை அமைத்திட இருந்த அந்த புரட்சிக் கனலின் ஜீவன் அணைந்துவிட்டதால் ஜனநாயகம் மரணித்து விடவில்லை என்று நான் உறுதியாக சொல்வேன். தோழர் அவர்களின் ஆத்மா வழிகாட்டியாக இருக்கும். நல்லதொரு ஜனநாயகம் வெகு விரைவில் அமைந்திட என் இதயம் முழுக்க பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.