EPRLF மேற்கு ஜெர்மனிப் பிரிவு


மக்களை வெற்றிக்கு இட்டுச் செல்ல உழைத்தவர்


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, மேற்கு ஜெர்மனிப் பிரிவு

ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுத ஆளுமையில் கட்டுண்டு கிடந்தபோது, மக்களே எஜமானர்கள் என்னும் உண்மை வடிவத்தை போராட்ட கோஷமாக்கியவர் தோழர் நாபா.

உழைக்கும் மக்களின் விடியலுக்கு மார்க்சிச லெனினிச சித்தாந்தத்தை வெற்றுக்கோஷமாகக் கொள்ளாது. மக்களினூடே அரசியல் வேலை செய்யும்போதுதான் நடைமுறையில் புரிந்துகொள்ள முடியும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்து கொண்டதோடு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வெகு ஜனப் பிரிவுகளை உருவாக்கி மக்களுடே வேலை செய்வதில் சிறந்த தலைமைத்துவப் பங்களிப்பாற்றியவர் தோழர் நாபா.

இயக்களுக்கிடையில் ஐக்கியம், இயக்கங்களுக்குள் ஜனநாயகம், இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஆகியன தூய்மையாக நடைமுறைப்படுத்தப்படும் போதுதான் விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கிய பாதையில் இட்டுச்செல்ல முடியும் என்பதையும், எமது பொது எதிரி ஸ்ரீலங்கா நவபாசிச அரசே என்பதையும் உறுதியான கருத்தாக இறுதிவரை கொண்டிருந்தவர் தோழர் நாபா.

அணிசேரா நாடுகள் அணியில் இருப்பது, விடுதலைப் போராட்டங்களை அங்கீகரித்திருப்பது, தமிழ்நாட்டில் தமிழ் மக்களுடனான எமது உறவு, பூகோள ரீதியில் நமது உறவு ஆகியவற்றினால் இந்தியாவுடனான நமது நட்பு விடுதலைப் போராட்டத்தில் இன்றியமையாதது என்பதில் தெளிவுடன் இருந்தவர் தோழர் நாபா.

சாணக்கியமற்ற அரசியல் ஆயுத நடவடிக்கைகளினால் போராட்டம் சின்னாபின்னப்பட்டு தமிழ்பேசும் மக்கள் அரசியல் அனாதைகளாக்கப்பட்டபோது, மக்களுக்கு ஒரு அரசியல் வடிவம் வேண்டும். கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் மீண்டும் பேணப்பட வேண்டும். தமிழ் பேசும் மக்களின் 40 வருட அரசியல் போராட்டத்திற்கு கிடைக்கும் பலனை பயன்படுத்திக் கொண்டு மக்களின் விடிவை நோக்கி முன்னேற வேண்டுமென்பதற்காக ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசு என்னும் இடைக்கால தீர்வை அரசியல் வடிவம் பெறச்செய்வதில் பெரும் பங்காற்றியவர் தோழர் நாபா.

நெஞ்சுரமும் நேர்மைத் திறனும்கொண்ட தூய்மையான இடதுசாரித் தலைவராக வாழ்ந்து வடக்கு கிழக்கு மட்டுமின்றி, இலங்கைத் தீவுக்கே இடதுசாரிகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் தோழர் நாபா.

ஸ்ரீலங்கா நவபாசிச அரசுக்கெதிராக, பௌத்த சிங்கள பேரின வாதத்துக்கெதிராக, தரகு முதலாளித்துவ சுரண்டல்காரர்களுக்கெதிராக மட்டுமின்றி, எமக்குள் இருக்கும் பாசிசவாதிகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய வரலாற்றுக் கடமை எமக்குள்ளது என்பதை வெளிக்கொணர்ந்ததோடு ஏகாதிபத்தியம், சியோனிசம் என்பவற்றின் ஊடுருவலே ஸ்ரீலங்கா அரசின் கூக்குரல் என்பதை அம்பலப்படுத்தி இந்திய உபகண்ட அமைதியுடன் எமது போராட்டம் பின்னிப் பிணைந்துள்ளது என்ற உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறியவர் தோழர் நாபா.

தமிழ் பேசும் மக்களின், அனைத்து உழைக்கும் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படும்போது தோழர் நாபாவின் கருத்துக்கள், சிந்தனைகள் அங்கே பிரதிபலிக்கும். அப்போதெல்லாம் தோழர் நாபா வாழ்ந்துகொண்டெ இருப்பார்.