வி.ஏ. கந்தசாமி


இணையற்ற தலைவர்


வி.ஏ. கந்தசாமி, பொதுச் செயலாளர், ஈழத் தொழிற்சங்க சம்மேளனம்

சர்வதேச முற்போக்கு சக்கதிகளின் தொடர்புகளாலும், இலங்கை இந்திய முற்போக்கு, புரட்சிகர இயக்கங்களுடனான கலந்துரையாடல்களாலும், பல்வேறு நாடுகளின் விடுதலைப் போராட்ட அனுபவங்களாலும், மக்கள் தொடர்பாலும், போராட்ட அனுபவத்தாலும் உருவாக்கப்பட்ட தன்னிகரற்ற தலைவர் தோழர் பத்பநாபா

தோழர் பத்மநாபாவும் அவருடன் பதின்மூன்று தோழர்களும் கோடம்பாக்கத்தில் கோரமாக படுகொலை செய்யப்பட்டதாக வானொலி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டபோது முற்போக்கு மனித குலம் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இதனால் தமிழ்நாட்டுக்கு தீராத களங்கம் ஒன்று ஏற்பட்டு விட்டது.

தோழர் பத்பநாபா தான் பிறந்து வளர்ந்த நாட்டை நேசித்தது போலவே இந்தியாவையும் நேசித்த ஒருவர். இந்தியா, ஈழத்து மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நேசக் கரம் நீட்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர். அப்படியான ஒருவருக்கு இந்தியாவை நம்பி வந்த இடத்தில் இப்படியான துயரச் சம்பவம் நடந்தது என்பது இந்தியாவையும் இந்திய மக்களையும் பெருமளவு பாதிக்கும் சம்பவமாகவே அமைந்து விட்டது.

தோழர் நாபா இந்தியாவில் ஏராளமான நண்பர்களைப் பெற்றிருந்தார். தமிழ்நாட்டில் அவர் சந்திக்காத பிரமுகர்களோ மக்கள் அணியினரோ இல்லை என்றே சொல்லலாம். அன்னாரின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து இரங்கற் செய்தி வெளியிடாத மக்கள் இயக்கங்களே இல்லை எனலாம்.

அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த இலட்சக்கணக்கான மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்ததும், இறுதி ஊர்வலம் நடந்தபோது வீதியின் இருமருங்கும், வீட்டு மாடிகளிலும், கூரைகளிலும் மக்கள் சோகம் படிந்த முகத்துடன் திரண்டிருந்து தமது துயர அஞ்சலியைத் தெரிவித்ததும் அவருக்கு தமிழக மக்களோடு இருந்த நெருக்கத்தை எடுத்துக் காட்டியது.

தோழர் பத்பநாபா ஈழமக்களின் பெரும் மதிப்பிற்குரிய தலைவராக மட்டுமல்லாமல், ஈழ விடுதலை இயக்கங்களின் தலை சிறந்த தலைவராகவும் விளங்கினார். ஈழவிடுதலை இயக்கங்களை ஒரே அணியில் ஒன்றுபடுத்த பலமுறை முயற்சி செய்தார். அவரின் இடையறா முயற்சியின் பயனாக ஏற்பட்ட ஐக்கியம் தான் திம்பு பேச்சுவார்தையின் போது ஈழவிடுதலை இயக்கங்கள் அத்தனையையும் தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட - ஒரே குரலில் பேச வைத்தது.

அன்று இந்தியாவோ ஸ்ரீலங்கா பேரினவாதிகளோ இந்த ஒற்றுமைக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை. இதைச் சீர்குலைத்து, சகோதரப் போராளிகளையும் இயக்கங்களையும் தலைவர்களையும் அழித்தொழிக்கும் மிலேச்சத்தனமான செயல்தான், ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை திசை திரும்பச் செய்தது. இதனால் பேரழிவுக்கும் துன்ப துயரத்துக்கும் உள்ளானது ஈழத்து மக்களே.

தோழர். நாபா ஈழத்து மண்ணில் கால் பதிக்காத இடமே இல்லை எனலாம். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியாக இருந்தாலும் சரி, கிராமப்புற கூலி விவசாயிகள் வாழும் பகுதியாக இருந்தாலும் சரி, வடக்கு கிழக்கு மாகாணத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் அவர் தன் கால் தடங்களைப் பதித்திருந்தார்.

மலையக மக்கள் மத்தியில் வாழ்ந்து அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்ட ஒருவர், ஈழவிடுதலை இயக்கங்கள் மத்தியில் இருந்தார் என்றால் அது தோழர் பத்மநாபா ஒருவராகவே இருக்கும். சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தால் வலுக்கட்டாயமாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட அகதிகளான மலையத் தமிழர்களின் புனர்வாழ்வுக்காக அவர் முழு மூச்சாகப் பாடுபட்டார்.

தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை மூலம் தமது அரசியல் வாழ்வை ஆரம்பித்த தோழர் பத்மநாபா தமிழின வெறியராக ஒருபோதும் இருந்ததில்லை.

தென்னிலங்கையில் முற்போக்காளர் மத்தியிலும் அவர் வேலை செய்து வந்ததால், ஸ்ரீலங்கா அரசை கவிழ்க்க சதி செய்ததாக தோழர் பத்மநாபாவை முதன்மைப்படுத்தி சிங்களத் தோழர்களும் உட்பட்ட 23 பேருக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு சதி வழக்கொன்றை உருவாக்கியது. அந்த வழக்கில் இருந்து சாகும்வரை தோழர் பத்பநாபா விடுவிக்கப்படவே இல்லை. இதுவும்கூட அவரது விரிவடைந்த பார்வைக்கும் புரட்சிகர செயல்பாட்டுக்கும் எடுத்துக்காட்டாகும்.

தோழர். பத்மநாபாவின் ஆரம்பகால அரசியல் அனுபவங்கள் ஸ்ரீலங்கா பேரினவாத அரசின் சிறை ஒடுக்குமுறைக்கெதிரான மாணவப் பிராய இன உணர்வு சார்ந்ததாகவே இருந்தது. ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டாரின் நிர்ப்பந்தத்தால் உயர் கல்விக்காக இங்கிலாந்து செல்ல வேண்டி ஏற்பட்டது. இது இவரின் அரசியல் வாழ்வில் ஆழ அகலப் பார்வையை உருவாக்கியதெனலாம்.

அன்று லண்டனில் இருந்து ஈழத்தவர்களுடன் இணைந்து ஈழப்புரட்சி அமைப்பில் செயல்பட்டார். பாலஸ்தீன விடுதலை இயக்கம், ஆப்பிரிக்க விடுதலை இயக்கங்கள், இன்னும் பல்வேறு விடுதலை இயக்கங்களுடனான தொடர்புகள் அவருடைய ஈழ விடுதலை போராட்ட உணர்விற்கு புதிய அணுகுமுறைகளைச் சேர்த்தது. இதன் காரணமாக அவர் பாலஸ்தீன விடுதலை இயக்தக்தில் ஒரு பிரிவின் உதவியுடன் லெபானனில் ஆயுதப் பயிற்சி பெற்றார்.

ஈழப்புரட்சி அமைப்பில் ஏற்பட்ட முரண்பாடுகள், தேக்க நிலைமைகள் காரணமாக 1981ஆம் ஆண்டு நடந்த மகாநாட்டில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உருவாகியது. அதன் வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஈழ மாணவர் பொது மன்றம் உட்பட கிராமியத் தொழிலாளர், வாலிபர், பெண்கள் மத்தியிலும், பெருந்தோட்டப் பாட்டாளிகள் மத்தியிலும் வெகுஜன அமைப்புகளைக் கட்டுவதில் தோழர் நாபாவும், அவருடனிருந்த தோழர்களும் பெரும் வீச்சுடன் செயற்பட்டார்கள். 1984ஜுனில் நடைபெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முதலாவது காங்கிரசில் தோழர் பத்பநாபா செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்டார். தன்னலங் கருதாத அவருடைய செயலாற்றும் திறன் இயக்கத்தில் உள்ள அனைவராலும் மதிக்கப்பட்டது. அவர் தோழர்களுக்கும் மக்களுக்கும் தெம்பூட்டுவதில் எடுத்துக்காட்டாக விளங்கினார்.

மரணித்த தியாகிகளின் குடும்பங்களைச் சென்று சந்தித்து அவர்களின் கஷ்ட நஷ்டங்களைக் கேட்டறிந்து, முடிந்தவரை அவற்றை எல்லாம் தீர்த்து வைக்கும் கடமையை எப்போதும் முதன்மையானதாய் கருதி செயலாற்றினார். தோழர் பத்பநாபா மக்களை நேசித்த மகத்தான மனிதர்.

போராட்ட காலங்களிலும் சமாதான காலங்களிலும் மக்களுக்கு பேரிழப்புகள் ஏற்படாவகையில் வழிமுறைகளை வகுத்தளிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். நம்மத்தியில் வாழ்ந்துவரும் முஸ்லீம் சகோதரர்களின் அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு, அவர்களையும் அரவணைத்துச் செல்வதில்தான் ஈழவிடுதலையின் வெற்றி தங்கியுள்ளது என்பது அவரின் அசைக்க முடியாத கருத்தாக இருந்து வந்தது.

செல்வா-பண்டா உடன்படிக்கை, டட்லி செல்வா உடன்படிக்கைகள் தமிழினப் பிரச்சினைக்குத் தீர்வாக, போராட்ட காலங்களில் சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் கருத்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதும், பௌத்த சிங்கள இன வெறியர்களினது எதிர்ப்புக்கு அஞ்சி கிழித்தெறியப்பட்ட நிகழ்வுகளே ஈழப்போராட்ட வரலாறாகும்.

சிறீலங்கா ஆக்கிரமிப்பு யுத்தமும், ஈழ விடுதலைப் போராட்டமும் ஒரு நெருக்கடியான காலகட்டத்தை அடைந்தபோது, இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் ஒன்று ஈழப் பிரச்சினைக்கு தீர்வாக இலங்கை, இந்திய அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போதுதான், ஈழத்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். இனியாவது இந்தியா தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வைக் காண உதவும் என நம்பினார்கள். இந்த ஒப்பந்தத்தை மற்ற விடுதலை இயக்கங்களைப் போலவே விடுதலைப் புலிகளும் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டு எமது இராணுவ அமைப்பு கலைக்கப்பட்டு விட்டது. இருப்பது அரசியல் அமைப்பு மட்டும்தான் எனப் பகிங்கிரமாக அறிவித்தார்கள். குமரப்பா புலேந்திரன் உட்படச் சிலர் உயிரிழந்ததைச் சாக்காக வைத்து இந்திய சமாதானப் படைக்கு எதிராக தேவையற்ற யுத்தம் ஒன்றை ஆரம்பித்து, ஈழ மக்களை மீண்டும் பேரழிவிற்கு இட்டுச் சென்றார்கள் விடுதலைப் புலிகள்.

இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தமிழினத்தை விடுவிக்க யுத்த தந்திரேபாய ரீதியிலும் ராஜதந்திர ரீதியிலும் செயல்பட்டு, மாகாண சபைத் தேர்தல் மூலம் ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் - தமிழர் தாயத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, தமிழினம் தன்னைத்தானே ஆட்சி செய்யும் உரிமையை முதல் முறையாக சட்ட ரீதியாக வென்றெடுக்க வழிகாட்டியதில் தோழர் நாபாவின் இலட்சிய நோக்கும் தலைமைப் பண்பும் தெளிவாகத் தெரிந்தது. சகலரும் தோழர் பத்மநாபாதான் என எதிர்பார்த்த போது தோழர் வரதராஜப்பெருமாளை முதலமைச்சராக்கியதில், தோழரின் தன்னலங்கருதாத போக்கும் பரந்த மனப்பான்மையும் வெளிப்பட்டது. மறுபுறம் மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் மதிக்காத புலிகள், தொழிற்சங்கவாதியுமான விஜயானந்தன், நவசமசமாஜக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் தொழிற்சங்க வாதியுமான ஆ. அண்ணாமலை, தமிழாசிரிய சங்கத் தலைவராயிருந்த திரு. வணசிங்கா ஆகியோர் இதில் அடங்குவர்.

இந்த நிலைமைகள் ஈழத் தொழிலாளி வர்க்கம் செயலற்று, ஏனைய மக்களைப் போலவே உயிருக்கு அஞ்சி உருக்குலைந்த வர்க்கமாக மாறிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலைமையில் இருந்து விடுவித்து, போர்க்குணம் மிக்க தொழிலாளி வர்க்கமாக மீண்டும் அவர்களை அமைப்பு ரீதியாக ஒன்றபடுத்த, ஈழத் தொழிற் சம்மேளனத்தை உருவாக்குவதில், கட்டி வளர்ப்பதில் தோழர் நாபா பேராதரவு நல்கினார். இதனால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு அனைத்து மாவட்டத்திலும் தொழிலாளர்கள் புதிய தெம்புடன் முன்வந்து போராட்டததில் குதித்தனர்.

அதனால் பல கோரிக்கைகளை வென்றெடுத்ததுடன் புதிய சக்தி ஒன்றை ஈழ விடுதலை அரங்கில் பிரவேசித்தது.

தமிழ் மாநில அரசின் (வடக்கு கிழக்க மாகாண அரசு) அதிகாரம், தமிழினத்pன் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் மாகாண அரசை வழிநடத்தியதில், அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தமான 19 அம்சத் திட்டத்தை உருவாக்குவதிலும், அதை மாகாண அரசின் முன்வைத்து இந்தியா, இலங்கை ஆகிய இரு அரசுகளோடும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கும் தோழர் பத்மநாபா சகல முயற்சிகளையும் செய்தார்.

இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்திற்கு உரிய அதிகாரங்களை தமிழ் மாநில அரசுக்கும் பெற்றுத் தருவதாகச் சொல்லப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற இந்திய அரசையும், சிறிலங்கா அரசாங்கத்தை, அதிகாரப் பரவலாக்கலை நிறைவேற்றி தமிழ் மாநிலத்திற்கு ஒப்புக் கொண்டபடியான அதிகாரம் உள்ள மாநிலமாக மாற உதவும்படி வற்புறுத்தவும் இது உதவியது. இது புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் திரைமறைவில் நடந்து வந்த பேச்சுவார்ததைக்கு ஒரு நெருக்கடியான நிலையை தோற்றுவித்தது.

இதனால் அதிகாரப் பரவலாக்கலை நிறுத்தவும், மாகாண அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கவும் எனத்திட்டமிட்டு, இந்திய சமாதானப் படையை வெளியேற்ற புலிகளும் சிறிலங்கா அரசும் குரல் கொடுக்க முடிவு செய்தனர். மாகாண அரசுக்கும் அதன் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் எதிராக கூட்டுத்தாக்குதலைத் தொடுக்கவும் தயாரானார்கள். சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் கூட்டுச்சேர்ந்து இந்திய சமாதானப் படையை வெளியேற்றி, தமிழ் மாநில அரசை செயலற்றதாக்கியதன் மூலம், தமிழினம் தன்னைத்தானே ஆளும் உரிமையை மீண்டும் குழப்பியடித்தன.

சிறிலங்கா பாராளுமன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டு வருவதன் மூலம், வடக்கு கிழக்கு மாகாண சபையும் கலைத்து சிறிலங்கா அரசாங்கம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது.

விடுதலைப் புலிகளும், தமிழ் மக்களையும் அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் அழித்தொhழிப்பதற்கான யுத்தம் ஒன்றை மீண்டும் நடத்துகிறார்கள்.

ஈழ மக்கள் இன்று மீண்டும் இந்தியாவில் சகலதையும் இழந்து அகதிகளாக இலட்சக் கணக்கில் தஞ்சம் புகுந்து கொண்டு இருக்கிறார்கள். ஈழத்திலும் சிறிலங்காவிலும் அகதி முகாம்களிலும் பல இலட்சக்கணக்கில் அகதிகள் நிரம்பியுள்ளார்கள். தோழர் பத்மநாபாவும் கொலை செய்யப்பட்டு விட்டார். எமது மக்களின் சாதனைகள் அனைத்தும் தலைகீழாக்கப்பட்டு விட்டது. இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தத்தின் கதி என்ன, தோழர் நாபாவின் மறைவிற்கு சில மாதங்களின் முன்னால் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இரண்டாவது காங்கிரசை கூட்டுவதற்கான தயாரிப்புக் கமிட்டியும் அமைக்கப்பட்டது. அவரின் சிந்தனை அனைத்தும் இரண்டாவது காங்கிரசைக் கூட்டுவதற்கான வழி வகை பற்றியே சிந்தித்தது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, அவர் நினைவை நிறைவு செய்யட்டும். தோழர் நாபாவினதும் ஈழ மக்களின் அபிலாசைகளையும் நிறைவு செய்ய கட்சியின் இனிவரும் காங்கிரஸ் மாநாடும் தோழர் நாபாவின் வழிகாட்டலில் வந்த தோழர்களும் சரியான திசை வழியில் மக்களுக்கு தலைமை வழங்குவார்கள் என நம்புகிறேன்.