ஷ்யாம்


தோழர் நாபா மறைவு ஈழப்போராட்டத்திற்கு பின்னடைவு


ஷ்யாம் ஆசிரியர். தராசு வார இதழ் தலைவர். தராசு மக்கள் மன்றம்

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூம்பென்றும் உண்டோ?
- பாரதி

தழலின் வீரத்தில் சிறியது, பெரியது என்ற வேறுபாடு கிடையாது. தோழர் பத்மநாபா ஒரு எரிதழல். ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் அவரைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவரது மன உறுதியைக் கண்டு பெரிதும் வியந்திருக்கிறேன்.

பத்மநாபாவின் மறைவு ஈழத் தமிழர் போராட்டத்தில் ஒரு மாபெரும் பின்னடைவு.
முதன் முதலில் அவரை நான் சந்தித்தபோது அவரது தீட்சண்யமிக்க கண்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அவற்றில் நான் அஞ்சாமையைக் கண்டேன். அதே நேரத்தில் அரவணைப்பையும் உணர்ந்தேன். சிரித்துச் சிரித்துப் பேசினாலும் அவரது சிந்தையில் ஒரு உறுதி மிளிர்ந்ததை என்னால் உணர முடிந்தது. வரலாற்றுப் போராட்டத்தின் காவிய நாயகன் ஒருவனின் முன் அமர்ந்திருக்கிறோம் என்பதை நான் புரிந்து கொண்டேன். 1988க்குப் பிறகு அவரோடு உரையாடுகிற வாய்ப்புக்கள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. ஈழத்தில் இருந்து வருகிற - ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் நெருங்கிய தொடர்புடைய சென்னை நண்பர்களைச் சந்திக்கும்போது தோழர் பத்மநாபாவின் நலன் குறித்து வினவுவதோடு என் வினாக்களைச் சுருக்கிக் கொண்டேன்.

ஓ! அந்த அதிர்ச்சியான இரவை என்னால் மறக்க முடியாது. தராசு வார இதழின் தலை நிருபர் ஏ.எஸ். மணி, தோழர் பத்மநாபாவும் இன்னும் பலரும் சுடப்பட்டு மாண்டனர். எத்தனை பேர் என்று தெரியவில்லை என்று பதறியவாறு சொன்னார். நான் முதலில் அதை நம்பவில்லை. வதந்தி என்று நினைத்தேன். ஆனால் அது உண்மையான போது என் நெஞ்சம் விம்மி வெடித்தது.

தோழர் பத்மநாபாவோடு பழகியது சிறிது காலமே! ஆனால் நீண்ட நெடுங்காலம் அவரோடு நெருங்கிப் பழகியது போன்ற ஒரு உணர்வு எனக்கு இருக்கிறது.