மு. அந்தாலன்


வரட்டுத் தனங்கள் இல்லாத எளிமையான மனிதர்


மு. அந்தாலன்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் ஈழமண்ணில் ஒடுக்கப்பட்ட, நாற்பது இலட்சம் தமிழர்களின் நெஞ்சில் தமிழ் ஈழ தேசீய சுயநிர்ணய உரிமை வேட்கை முகிழ்த்தது. சிங்களப் பேரினவாதிகளால், கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளால் ஈழத் தமிழ் இளைஞர்கள் ஈழம் எமது தாகம் என போர்ப் பரணி பாடினார்கள்.

ஈழத்தில் பல்வேறு குழுக்கள் பாசறை அமைத்தன. அதனில் கூரிய மதியும், நேரிய பார்வையும், சீரிய நடையும், வீரமும், ஒழுக்கமும் ஒருங்கே அமைந்த தோழர் க. பத்மநாபாவின் தலைமையி கீழ் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழத்தில் 1981ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் நான்காம் நாள் தனது போர்ப் பிரகடனத்தைப் பறைசாற்றியது. தோழர் பத்மநாபாவின் தமிழ்ப் பற்றும் பண்பாடும் 1983ஆம் ஆண்டிலிருந்து நான் பல்வேறு சமயங்களில் உணர முடிந்தது.

தமிழ்நாட்டு தமிழர்களை அவர் நேசித்த பான்மை அளவிடற்கரியதாகும்.
சென்னை மாநகரில் அவர் தங்கிய காலத்தில் அவரோடு பழகியவர்கள் ஏராளம்!
மற்ற ஈழத் தமிழ்க் குழுக்களின் தலைவர்களும் சென்னையில் பல ஆண்டுகள் இருந்தனர். பத்மநாபாவைப் போன்று மற்ற எந்தத் தலைவர்களும் தமிழ் மக்களிடம் நெருங்கிப் பழகுவதில்லை.

தமிழ்நாட்டு அடித்தள மக்களின் மனங்களில் நீங்காத நினைவாக பத்மநாபா திகழ்ந்தார்.

தோழர் பத்மநாபா தனது நுண்ணிய அறிவால், ஆதார சுருதியோடு ஈழ மக்களின் வேட்கையை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் முறை குறிப்பிடத் தக்கதாகும்.

அளந்து பேசும் ஆற்றலும், ஆடம்பரமும் இல்லாத அரசியல் பணியும் ஒருங்கே அமைந்தவர்.

எதிர்வரும் காலத்தில் ஈழ மண்ணில் மார்க்சிய மணம் கமழ ஆசைப்பட்டவர். வரட்டு வேதாந்தத்தையும் புரட்டுப் பேச்சையும் விரும்பாதவர்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆயுதப் போராட்டம் என்பதனை நாம் நடைமுறையில் செயல்படுத்திக் காட்ட வேண்டும். நாம் கடைப்பிடிக்கும் மார்க்சிய லெனினிசம் என்பது நமது நடைமுறைக்கு வழிகாட்டுகின்ற சித்தாந்தமேயாகும். அதனை நமது மண்ணிற்குரிய வகையில் நடைமுறைப்படுத்துவோம்.

மேற்கண்ட வாசகம் 1984சூன் 28 ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முதலாவது காங்கிரசில் தோழர் பத்மநாபா ஆற்றிய உரை வீச்சாகும்.

பொதுவுடமைத் தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், அதே நேரத்தில் ஈழ மண்ணுக்கே உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டிய பக்குவத்தினையும் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார். ஈழ மண்ணில் மற்றய குழுக்கள் இன்று திகழ்வதை நாம் பார்க்கிறோம்.

ஈழ விடுதலைக்கு ஒரு போர்ப் பாசறையின் தளபதியாகப் பொறுப்பேற்று தோழர் பத்மநாபா ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்ததோடு சக தோழர்களையும் ஒழுக்க நெறியில் நடத்திச் சென்றார். கொரில்லா யுத்த தந்திரத்தை ஏற்றுக் கொண்ட பல்வேறு போராளிகளை நான் சந்தித்திருக்கின்றேன். அவரகள் மது, மாது வழிகளில் தடம்புரண்டு சென்றதையும் பார்த்திருக்கின்றேன்.

தனது வாழ்நாளில் தான் ஏற்றுக்கொண்ட இலட்சியம் கிடைக்கும் வரை கொண்ட கொள்கையில் உறுதியாக, ஒழுக்கத்தோடு நின்றவர் பத்மநாபா ஆவார்கள்.
அவருடைய கொள்கைப் பிடிப்பிற்கு ஒரு சான்றினைக் காண்போம்.

அனைத்து உழைக்கும் மக்களினதும் நலன்களுக்கு வழிகாட்டும் மார்க்சிச லெனினிச சித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவமான வரலாற்று இயங்கியல் பொருள்முதல் வாதத்தை எமக்கு பார்வையைத் தரும் தத்துவமாகவும் எமக்கு வழிகாட்டும் சித்தாந்தமாகவும் ஏற்றுக் கொண்டோம். நாம் மார்க்சிச லெனினிச சொற்றொடர்களை, மக்களை வஞ்சிப்பதற்காகவோ மக்களை திசை திருப்புவதற்காகவோ எந்த வேளையிலும் பிரயோகித்தது இல்லை. மார்க்சிச லெனினிச சித்தாந்தத்தின் உண்மையான விசுவாசிகளாக இருந்திருக்கிறோம். இப்போதும் இருக்கிறோம். இனி எப்போதும் இப்படியே இருப்போம் என்று உறுதியாக நம்புகிறோம்.

தோழர் பத்மநாபாவின் ஒளிவு மறைவற்ற கொள்கைப் பிரகடனமாக இந்த உரைவீச்சை காணும்போது தமிழ் ஈழ மண்ணிற்கும் மக்களுக்கும் திட்டங்களை எந்த வழியில் அமைந்திருந்தார் என்பது புலனாகிறது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சில ஆண்டுகளுக்கு முன் இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி வட கிழக்கு மாநில மன்றம் அமைத்து, அதனின் அதிகார பொறுப்பையும் ஏற்று, தோழர் வரதராஜப்பெருமாள் அவர்களை முதல்வராக பொறுப்பேற்க வைத்தது.
தமிழகத்து அரசியலாளர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள் அனைவரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி குறித்தும் தோழர் பத்மநாபா குறித்தும் விமர்சனம் செய்தனர். இழிமொழியால் தூற்றினர்.
ஆயினும் தோழர் பத்மநாபா தமிழக, இந்திய பிரமுகர்களை சந்தித்து தன்னிலை விளக்கமளித்தார்ளூ உண்மை நிலையை உரைத்தார்.

ஈழ மக்களின் எதிர்கால வாழ்விற்கு ஆயுதத்தை துறந்து, அரசியல் ரீதியில் பணியாற்ற கிளம்பியதின் கூறுகளை குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ஈழ மண்ணிற்கு தோழர் பத்மநாபா ஆற்றியுள்ள தியாகங்கள் அளவிடற்கரியதாகும்.

இந்திய இராணுவம் இலங்கை மண்ணை விட்டு வெளியேறிய பின் பல்வேறு சூழ்நிலை காரணமாக ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள் தமிழகத்தில் தங்குவதற்கு தஞ்சம் கேட்டனர்.

அனுமதி கிடைக்காத காரணத்தால் தலை மறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். இவரின் தலைமறைவுப் பயணத்தைத் தொடர்ந்து கவனித்த கயவர்கள் சிலரால் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.

செய்தியை கேள்வியுற்ற தமிழ் மக்கள் கண்ணீர் வடித்தனர். தமிழ்நாட்டுத் தலைவரை இழந்தது போன்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த இளைய வயதில் இப்படியொரு மரணம் ஏற்படும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனாலும் தோழர் பத்மநாபா அடிக்கடி சொல்வதுபோல் மரணத்தை எம் மன்ணிற்காக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற கூற்று மெய்யாகிவிட்டது.

தோழர் பத்மநாபாவின் உடல் அழிந்தாலும் அவர் கொண்ட கொள்கைகள், நியாயங்கள் சாகவில்லை என்று தமிழகத்து மக்களும் ஈழ மக்களும் நினைத்துக் கொண்டுள்ளனர்.

வாழிய தோழர் பத்மநாபாவின் புகழ்!